Published:Updated:

தந்தையை மிஞ்சிய கதிர் ஆனந்த் முதல் ரியாக்‌ஷன் காட்டாத வைத்திலிங்கம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

`மெயில் செக் பண்ணுங்க’ என்று மெஸ்சேஜ் அனுப்பி இருந்தார் கழுகார். உள்ளே சுடச் சுட தகவல்கள்...

தந்தையை மிஞ்சிய கதிர் ஆனந்த் முதல் ரியாக்‌ஷன் காட்டாத வைத்திலிங்கம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

`மெயில் செக் பண்ணுங்க’ என்று மெஸ்சேஜ் அனுப்பி இருந்தார் கழுகார். உள்ளே சுடச் சுட தகவல்கள்...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
`தந்தையை மிஞ்சிய கதிர் ஆனந்த்’
தகிப்பில் காட்பாடி!

காட்பாடியில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘``காட்பாடி தொகுதி என் கண் இமை போன்றது. ஆனால், எனக்கே தெரியாமல் சித்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து திருவலம் செல்லக்கூடிய சாலையில் ‘ஐநாக்ஸ்’ பெயரில் மூன்று ஸ்க்ரீன் கொண்ட தியேட்டர் கட்டப்பட்டிருக்கிறது. அந்த தியேட்டரில் வாகனம் நிறுத்தும் வசதியுமில்லை. நான் சாலையை அகலப்படுத்திக்கொண்டே செல்கிறேன். இவர்கள் வாகனங்களை நிறுத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். தியேட்டர்மீது நானே நேரடியாக நடவடிக்கை எடுப்பேன்; தியேட்டர் செயல்படவும் அனுமதிக்க மாட்டேன். எதன் அடிப்படையில் தியேட்டருக்கு அனுமதி வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் எனக்கு அறிக்கை கொடுக்க வேண்டும்’’ என்று கோபத்தைக் கொட்டியிருந்தார்.

துரைமுருகன் இப்படி எச்சரித்த நிலையில், அவரின் மகனும் வேலூர் தொகுதியின் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், கடந்த ஜனவரி 24-ம் தேதி ஐநாக்ஸ் திரையரங்கை அமர்க்களமாகத் திறந்துவைத்து, முதல் ஷோவை உட்கார்ந்து பார்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எம்.பி கதிர் ஆனந்த்
எம்.பி கதிர் ஆனந்த்

இத்தனைக்கும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் காட்பாடி வருகிறது. “கலைஞரிடம் வித்தையைக் கற்றுக்கொண்ட துரைமுருகனையே கதிர் ஆனந்த் மிஞ்சிவிட்டார்!” என்று அவரின் ஆதரவாளர்கள் உசுப்பேற்றுகிறார்கள். தியேட்டர் விவகாரத்தில் நடுவில் கைமாறிய ‘விஷயங்கள்தான்’ இந்த மாற்றத்துக்குக் காரணமாம்!

``போராட்டத்தை முன்னெடுப்போம்”
கூட்டணி குஸ்தியில் தோழர்கள்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பெத்தேல் என்கிற இடத்தில் பட்டா இல்லாமல் வீடுகட்டி வசித்துவந்தவர்களைக் காலிசெய்ய முடிவெடுத்தது சென்னை மாநகராட்சி. ஆக்கிரமைப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்ற முற்பட்டபோது, அங்கு வசித்துவந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டத்தில் குதிக்கவும், விவகாரம் சூடாகியிருக்கிறது. ‘உள்ளாட்சித் தேர்தலில் நம்மிடம் சீட் வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துவிட்டு, நமக்கு எதிராகவே போராட்டம் நடத்துகிறார்களே...’ என்று தி.மு.க தலைமைத் தரப்பில் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் தரப்பிலோ, “கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள சில தனியார் கட்டுமான நிறுவனங்கள், தங்கள் வளர்ச்சிக்காக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முயல்கிறார்கள். அதற்கு அரசும் ஒத்துழைக்கிறது. தமிழக அரசு இந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று சொல்லியிருப்பதால், தி.மு.க கூட்டணிக்குள் குஸ்தி ஆரம்பமாகியிருக்கிறது!

மேயர் இல்லைன்னா எம்.பி...
தேற்றிக்கொள்ளும் ‘ஷாக்’ அமைச்சரின் தம்பி!

அந்த நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து, “ ‘ஷாக்’ அமைச்சரின் தம்பிதான் மாநகராட்சி மேயர் வேட்பாளர். அண்ணன் மேற்கில் அரசியல் செய்வதால், அந்தப் பகுதி அரசியலை கண்காணிப்பில் வைத்துக்கொள்ள, தனது தம்பியை மேயராக்க நினைக்கிறார்” என்று பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, தம்பியும் கட்சி நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகக் கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்த நிலையில், அந்த மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட, தம்பி படு அப்செட் என்கிறார்கள்.

இதன் பின்னணியிலும் ஷாக் அமைச்சரின் ‘லாபி’ இருக்கிறது என்கிறார்கள். ‘ஷாக் அமைச்சரின் தம்பிதான் மேயர் வேட்பாளர்’ என்று தகவல் கசிந்ததும், காலம்காலமாக தி.மு.க-வில் இருப்பவர்கள், இது குறித்துத் தலைமைக்கு புகார் கணைகளைத் தொடுத்திருக்கிறார்கள். தன் தம்பிக்கு சீட் கிடைக்காது என்பது தெரிந்தவுடன், அந்த மாநகராட்சி மேயர் பதவியைப் பெண்களுக்கு ஒதுக்கும்படி, ஷாக் அமைச்சர் காய்நகர்த்திவிட்டதாகச் சொல்கிறார்கள். மேயர் கனவு கலைந்த வருத்தத்திலிருக்கும் தம்பி தரப்பு, ‘மேயர் பதவி போனா என்ன? 2024 எம்.பி தேர்தலில், நாம்தான் இந்தத் தொகுதியின் வேட்பாளர்!’ என்று மனதைத் தேற்றிக்கொள்கிறதாம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
`மாஸ்க் விஷயத்தில்’
மாவட்டப் புள்ளியின் அக்கப்போர்!

தீப மாவட்டத்தின் மன்னர் பெயர்கொண்டவர், தி.மு.க மாவட்டப் புள்ளி. புத்தாண்டையொட்டி இவர் அச்சடித்த காலண்டர்களை கட்சி நிர்வாகிகளுக்குக் கொடுப்பதற்காக, இவரின் ஆதரவாளர்கள் சிலர் காலண்டர்களோடு காரில் சென்றிருக்கிறார்கள். வாகனத்திலிருந்தவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லையாம். வழியில் அவர்களை மடக்கிய ‘ஊர்’ காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள், ‘மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்’ என்றிருக்கிறார்கள். ‘நாங்க ஆளுங்கட்சி தெரியுமா?’ என்று காரிலிருந்தவர்கள் சவுண்ட்விட்டிருக்கிறார்கள். அவர்களின் சவுண்ட்டுக்கு அசரவில்லையாம் காவலர்கள். விஷயம் மாவட்டப் புள்ளியின் காதுக்குப் போயிருக்கிறது. கொதித்துப்போன அவர், வாகனத்தை மறித்த காவலர்களை மாவட்டத் தலைமை அலுவகத்துக்கே (AR) டிரான்ஸ்ஃபர் செய்யவைத்துவிட்டாராம். ‘ஒரு மாஸ்க் விஷயத்துக்கு இவ்வளவு அக்கப்போரா?’ என்று காவல்துறைக்குள் கடுகடுக்கிறார்கள்!

நாகேந்திரன் கருத்து...
வலுக்கும் எதிர்ப்பு!

பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். நயினார் நாகேந்திரனும் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்த விவகாரம் நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வினரை ஆத்திரமடையவைத்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க அமைப்புச் செயலாளரான சுதா பரமசிவன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, `நயினார் நாகேந்திரன் நெல்லைக்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டுவோம்’ என்று அறிவித்து பரபரப்பைக் கூட்டினார். அ.தி.மு.க வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ-வான நயினார் நாகேந்திரனுக்கு அ.தி.மு.க தொண்டர்களிடம் எதிர்ப்பு கிளம்பியிருப்பது, நகர்ப்புறத் தேர்தலிலும் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதால், பா.ஜ.க சார்பில் போட்டியிடத் தயாராகிவரும் பலரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்தச் சூழலில், நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சி பகுதியில் நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் பேசிய அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், ‘திசையன்விளையில் உள்ள 18 வார்டுகளிலும் அ.தி.முக தனித்துப் போட்டியிடும்’ என அதிரடியாக அறிவித்தார். அதற்குக் கட்சித் தொண்டர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேடையிலிருந்த மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா இதில் அதிர்ச்சியடைந்தபோதிலும், ‘கூட்டணி குறித்துக் கட்சித் தலைமை முடிவுசெய்யும். நாம் கட்சியினரின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்’ எனச் சமாளித்து முடித்திருக்கிறார்!

கட்சி மாறுகிறாரா வைத்திலிங்கம்?

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நீண்டகாலமாக மனக்கசப்பு இருந்துவந்தது. இதனால் கட்சிப் பணிகளில் ஆர்வம்காட்டாமல் வைத்திலிங்கம் செயல்பட்டுவருவதாகவும் கட்சிக்குள் பேச்சு எழுந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியிருக்கிறார் வைத்திலிங்கம்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இதைக் காரணமாக முன்வைத்து, ‘வைத்திலிங்கம் அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணையப்போகிறார்’ என்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. இதை வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவரது காதுக்குக் கொண்டுசென்றுள்ளனர். கேட்டுக்கொண்ட வைத்திலிங்கம், அதற்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல், அமைதியாக இருப்பதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது!