Published:Updated:

கமிஷன் பேரத்தில் சிக்கிய எம்.எல்.ஏ-க்கள் முதல் மோடியின் பசும்பொன் திட்டம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

வெற்றியில் முடிந்த கமிஷன் டீலிங்… | காசு வந்து கொட்டுகிற நேரமிது... | கமிஷன் பேரத்தில் சிக்கிய எம்.எல்.ஏ-க்கள்... | பழிவாங்கப்படும் தமிழ்நாட்டு அதிகாரிகள்... | மோடியின் பசும்பொன் வருகைக்கு முன்னோட்டமா? | வாரிசுக்காகக் களம் இறங்கிய வேந்தர்....

கமிஷன் பேரத்தில் சிக்கிய எம்.எல்.ஏ-க்கள் முதல் மோடியின் பசும்பொன் திட்டம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

வெற்றியில் முடிந்த கமிஷன் டீலிங்… | காசு வந்து கொட்டுகிற நேரமிது... | கமிஷன் பேரத்தில் சிக்கிய எம்.எல்.ஏ-க்கள்... | பழிவாங்கப்படும் தமிழ்நாட்டு அதிகாரிகள்... | மோடியின் பசும்பொன் வருகைக்கு முன்னோட்டமா? | வாரிசுக்காகக் களம் இறங்கிய வேந்தர்....

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
வெற்றியில் முடிந்த கமிஷன் டீலிங்…
பரபரக்கும் மேயர் அரசியல்!

கொங்கு மண்டலத்திலுள்ள அந்த முக்கிய மாநகராட்சியின் பெண் மேயர், தொடக்கத்தில் பேசுவதற்கே தடுமாறினார். இதைச் சுட்டிக்காட்டி சொந்தக் கட்சிக்காரர்கள் அவரை நேரடியாகவே விமர்சித்துவந்தனர். ஆனால், சமீபகாலமாக அவர் தி.மு.க மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என அனைவரிடமும் கறாராகப் பேசுகிறாராம். பொறுப்பு அமைச்சர், துறை அமைச்சர், மா.செ என அனைத்துத் தரப்பிலும், ‘மாதம்தோறும் இனிப்பில் இவ்வளவு பங்கு தருகிறோம்’ என்று வெளிப்படையாகவே டீல் பேசிவிட்டாராம். எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் பச்சைக்கொடி காட்டப்பட, தன்னை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அவர். முன்பு கவுன்சிலராகக்கூட இருந்ததில்லை... கட்சியில் பெரிய பின்னணியும் இல்லாத ஆள் என்று பார்த்தால் இப்பவே இந்தப் போடு போடுகிறாரே என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

காசு வந்து கொட்டுகிற நேரமிது...
வசூல் சர்ச்சையில் எம்.எல்.ஏ!

தொகுதி பெயரிலேயே ‘ராஜ’ தோரணையை வைத்திருக்கும் தென்மாவட்ட எம்.எல்.ஏ அவர். மக்கள் மத்தியில் ‘தங்கமானவர்’ என பெயர் எடுத்ததால், இரண்டாவது முறையும் எம்.எல்.ஏ ஆனார். ஆனால் ஆளுங்கட்சியாகிவிட்டதால், மனிதர் ரொம்பவே மாறிவிட்டாராம். ‘காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது...’ என்று இறங்கிவிட்டாராம் மனிதர். சமீபத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் சிக்கினார்.

ஏடிஎம் - பணம்
ஏடிஎம் - பணம்
மாதிரி படம்

இப்போது நகராட்சி விவகாரத்திலும் தலையிடுகிறாராம். இதனால் அந்த எம்.எல்.ஏ-வுக்கும், நகராட்சித் தலைவருக்கும் இடையே உரசல் உருவாகியிருக்கிறது. இதனால் எம்.எல்.ஏ-வுக்கு எதிரானவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, கட்சித் தலைமைக்குப் புகார் மேல் புகார் தட்டியிருக்கிறார்கள். ஆனாலும், “அதற்கெல்லாம் அலட்டிக்கிற ஆள் நான் கிடையாது” என அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாராம் அந்த எம்.எல்.ஏ.

கமிஷன் பேரத்தில் சிக்கிய எம்.எல்.ஏ-க்கள்...
அட்வைஸ் செய்ததா தலைமை?!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், “ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு, 40 சதவிகிதம் கமிஷனைக் கொடுத்துவிடுங்கள்... கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கு, 60 சதவிகிதம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று அதட்டும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே வீடியோவில், “திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பியும் 50 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார். அவரைப் போன்றே சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளலாம்” என்று ஊராட்சி மன்றத் தலைவர்களும் வாதிக்கிறார்கள். கமிஷன் பேரம் நடந்தபோது அதிருப்தியிலிருந்த ஊராட்சி மன்றப் பெண் தலைவர் ஒருவரின் கணவர்தான் எம்.எல்.ஏ வில்வநாதன் பேசும் வீடியோவை எடுத்து வெளியிட்டாராம். இந்த வீடியோ வைரலாகவே, அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களையும் நேரில் அழைத்து, “இவ்வளவு கமிஷன் கேட்டதே தப்பு... அதுவும் வீடியோ எடுக்கவிடும் அளவுக்கு கவனக்குறைவாக இருப்பதா?” என டோஸ் விட்டிருக்கிறதாம் தலைமைக் கழகம். ``வெறும் அட்வைஸ் மட்டும்தானா... நடவடிக்கை கிடையாதா?’’ என்று கேட்கிறார்கள் தொகுதி மக்கள்!

பழிவாங்கப்படும் தமிழ்நாட்டு அதிகாரிகள்...
உத்தவ்-ஷிண்டே சண்டையே காரணம்!

மகாராஷ்டிராவில் முந்தைய உத்தவ் தாக்கரே ஆட்சியில் முக்கியத் துறைகளில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் டம்மி துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த அன்பழகன், மாநில மின் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

தமிழகத்தைச் சேர்ந்த மற்றோர் அதிகாரியான டாக்டர் ராமசாமி, சுகாதாரத்துறை கமிஷனர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திறன் மேம்பாட்டுத்துறை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பே பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அம்பிகாவும்கூட முக்கியத்துவம் இல்லாத பயிற்சிப் பிரிவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா அரசியலில், `உத்தவ் அதிகாரத்தைக் குறைக்கிறேன்’ எனத் தமிழ்நாட்டு அதிகாரிகளை மாற்றியிருக்கிறார் ஷிண்டே என்கிறார்கள் உள்ளரசியல் தெரிந்தவர்கள்!

தமிழ்நாட்டுக்கு வந்த மோடியின் சகோதரர்...
மோடியின் பசும்பொன் வருகைக்கு முன்னோட்டமா?
கமிஷன் பேரத்தில் சிக்கிய எம்.எல்.ஏ-க்கள் முதல் மோடியின் பசும்பொன் திட்டம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

பிரதமர் மோடியின் சகோதரர் தாமோதரதாஸ் பங்கஜ் மோடியின் ராமேஸ்வரம் வருகை அரசியல் கட்சியினரை யோசிக்கவைத்திருக்கிறது. கடந்த சில நாள்களாக ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த அவரைத் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், மடங்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்துச் சென்றிருக்கிறார்கள். அதோடு, பசும்பொன்னுக்குச் சென்றவர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, தேவரின் உறவினர்களிடமும் உரையாடியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில்வைத்து பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி தேவர் ஜயந்திக்கு வரலாம், அதற்கு முன்னோட்டம்தான் அவர் சகோதரரின் வருகை என்று கொளுத்திப்போட்டிருக்கிறார்கள் உள்ளூர் பா.ஜ.க-வினர்!

வாரிசுக்காகக் களம் இறங்கிய வேந்தர்....
எம்.பி தேர்தல் வேலை ஜரூர்!

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் பெரம்பலூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பாரிவேந்தர். மனகசப்பினாலும், சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு தராததாலும் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறினார் அவர். தற்போது அவரது ஐ.ஜே.கே கட்சியை பா.ஜ.க கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்துகொண்டிருக்கிறதாம்.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

கூடவே, தனது வயது முதிர்வைக் காரணம் காட்டி இந்த முறை தன் மகன் ரவி பச்சமுத்துவுக்கு பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குமாறு பா.ஜ.க-வில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறாராம். இது ஒருபுறமிருக்க, தேர்தல் வேலைகளையும் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டாராம். தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த வேலைகள் மட்டுமல்லாமல், தனது சொந்தச் செலவில் செய்த நலத்திட்ட விவரங்களையும் பட்டியலிட்டு விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டிருக்கிறாராம்.