Published:Updated:

சோகத்தில் பன்னீர் மகன் முதல் சசியின் கொடநாடு `டேஸ்’ வரை! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

தமிழக அரசியலை விவாதித்துக்கொண்டிருந்த கழுகாருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. ``சோர்ஸ் ஒருவர் காத்திருக்கிறார். கிளம்புகிறேன்... வாட்ஸ்அப்பில் தகவல்கள் வந்துவிடும்” என்றபடி ஜூட் விட்டார்.

``அமைச்சர் பதவி வேண்டாம்!”
பன்னீர் தடாலடியால் மகன் சோகம்...

மத்திய அமைச்சரவையில் தன் மகன் ரவீந்திரநாத்துக்கு எப்படியாவது ஓரிடம் வாங்கிவிட வேண்டும் என்று இத்தனை நாள்களாகக் காய்நகர்த்திவந்தார் பன்னீர். இந்தச் சூழலில் விரைவில் மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடக்கவிருக்கின்றனவாம். ஆனால், இப்போது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கித் தருவதில் பன்னீருக்கு விருப்பம் இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ரவிந்திரநாத்
ரவிந்திரநாத்

எடப்பாடிக்கு முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுத்திருப்பதால், தொண்டர்களிடம் தனக்கு அனுதாபம் தேட நினைக்கிறாராம் பன்னீர். இப்போது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தால், அதைவைத்து எடப்பாடி கோஷ்டியினர் கடுமையாக விமர்சித்து, கட்சியில் தனது `பவரை’ காலி செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாராம் பன்னீர். ஆனால், சில மாதங்களாவது மத்திய அமைச்சர் பதவியில் அமர்ந்து `வரலாறு’ படைத்துவிட வேண்டும் என்ற கனவிலிருந்த ரவிந்திரநா குமாருக்கு, தந்தையின் இந்தத் திட்டத்தால் பொசுக்’கென்று போய்விட்டதாம். இதனால், சில நாள்களாக தந்தையிடம் சரியாகப் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறாராம்.

அழுவுறியா குமாரு..!

சசியின் கொடநாடு `டேஸ்’
காலிசெய்த வருமான வரித்துறை!

சசிகலா விடுதலையானவுடன், அவரை கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தங்கவைப்பதற்கு படு ரகசியமாக சில வேலைகள் நடந்தனவாம்.

கொடநாடு
கொடநாடு

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு, ஜெயலலிதா சென்டிமென்ட், க்ளைமேட், அமைதியான சூழல், கட்சியினர் தொல்லைகளிலிருந்து தப்பிக்கலாம் என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, அவரை கொடநாடுக்கு அழைத்துச் செல்வதுதான் தினகரன் தரப்பு திட்டமாக இருந்ததாம். அதேவேளையில், இந்த விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சசிகலா சென்னையில்தான் தங்கப்போவதாகச் சொல்லி போயஸ் கார்டனிலேயே தனி பங்களாவைத் தயார் செய்துவந்தனர்.

சசிகலா
சசிகலா

தற்போது கொடநாடு எஸ்டேட்டையும் வருமான வரித்துறை முடக்கிவிட்டதால், ரகசியத் திட்டம் `பனால்' ஆகியிருக்கிறது. எஸ்டேட் பங்களாவில் நடைபெற்றுவந்த வேலைகளையும் நிறுத்திவிட்டார்களாம்.

அண்ணன் டெல்லிக்குப் போன நேரம் சரியில்லையோ!

அறிவாலயத்தில் ஐபேக்!
உளவு பார்க்கும் உடன்பிறப்புகள்...

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுவந்த ஐபேக் அலுவலகத்தின் முக்கியப் பிரிவு ஒன்றை தற்போது அண்ணா அறிவாலயத்துக்குள் கலைஞர் கருவூலத்துக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டதாம் தி.மு.க தலைமை. இதையடுத்து, முக்கிய முடிவுகள் எடுப்பது, வி.ஐ.பி-களைச் சந்திப்பது போன்ற விவகாரங்களை கவனிக்கும் பொருட்டு அறிவாலயத்திலேயே அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறது ஐபேக்.

அறிவாலயம்
அறிவாலயம்

அந்த நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், தங்களது கண்பார்வையிலேயே வைத்திருந்து உளவு பார்க்கத்தான் இப்படி ஓர் ஏற்பாடு என்கிறார்கள் விவரமான உடன்பிறப்புகள்.

பார்த்து... அறிவாலயத்தையே `பேக்’ செஞ்சிடப்போகுது `ஐ’பேக்!

உள்ளடி வேலையில் சிவகங்கை அ.தி.மு.க!
கைகழுவிய கட்சித் தலைமை...

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கும், அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கும் குத்துச்சண்டை நடக்காதது ஒன்றுதான் பாக்கி. கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் இருவரும் எதிரெதிரே பார்த்தால்கூட வணக்கம் வைத்துக்கொள்வதில்லை. ஒருவர் வருகிறார் என்று தெரிந்தால், இன்னொருவர் வேறொரு வழியாகக் கிளம்பிவிடுகிறார். இந்தநிலையில், `அமைச்சரும், அவர் மகன் கருணாகரனும் தன்னை மதிப்பதில்லை’ என்று தலைமையிடம் செந்தில் புகார் வாசித்திருக்கிறார்.

ஜி.பாஸ்கரன்
ஜி.பாஸ்கரன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஸ்கரன் குடும்பத்தில் யாருக்கும் சீட் கொடுக்கக் கூடாது என்று செந்தில் உறுதியாக நிற்பதால், `இவர்களே உள்ளடி வேலை செய்து காலி செய்துவிடுவார்களோ...’ என அரண்டுபோயிருக்கிறது அமைச்சர் தரப்பு. கட்சித் தலைமையோ, `இவர்கள் இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், ஒருவரையொருவர் காலை வாரி, கடைசியில் மாவட்டத்தில் நமது கட்சியை காலிசெய்துவிடுவார்கள்’ என்று கணக்கு போட்டு, இருவரின் தரப்பினருக்கும் சீட் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம்.

ரெண்டு பேருக்கும் இல்லை சீட்டு... எடப்பாடி வெச்சாரு பாரு வேட்டு!

நெல்லை டிஸ்ட்ரிக்ட் கிளப் பஞ்சாயத்து
அதிருப்தியில் மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் `நெல்லை டிஸ்ட்ரிக்ட் கிளப்’ இருக்கிறது. இதன் உறுப்பினர்களுக்குள் கடந்த இரண்டு வருடங்களாகவே புகைச்சல் இருந்துவருகிறது. மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக்கொண்ட இந்த கிளப் உறுப்பினர்கள், பல்வேறு புகார்களுக்காக ஏற்கெனவே நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். தற்போது தங்களை விளையாட விடாமல் சிலர் தடுப்பதாக கிளப் உறுப்பினர்கள் சிலர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

கிளப்
கிளப்

உள்ளுக்குள் நடக்கும் இந்த கோஷ்டிச் சண்டைகளால் கிளப் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் அதிருப்தி அடைந்திருக்கிறார். அதனால், டிஸ்ட்ரிக்ட் கிளப் நடவடிக்கைகளை சில காலத்துக்கு முடக்கிவைக்கலாமா என்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவருகிறாராம். விஷயத்தைக் கேள்விப்பட்ட கிளப்பின் துணைத் தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான கர்னல் தேவதாஸ், அமைச்சர் ராஜலட்சுமி மூலம் ஆட்சியரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்கிடையே சிலர் கிளப்பிலிருக்கும் இறகுப்பந்து மைதானத்தின் வலைகளையெல்லாம் கிழித்தெறிய... பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாளையங்கோட்டை கிளப்பினிலே... அமைச்சரு, கட்சியினர் நடுவினிலே அஞ்சாமல் இருப்பது யாரு... அது நம்ம கலெக்டருதான் பாரு!

பா.ஜ.க-வுக்கு கரன்ட் கட்!
நாகை மின்வாரியம் அதிரடி...

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையத்தில் பா.ஜ.க-வின் மாவட்ட அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்துக்கு கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லையாம். மின்கட்டணம் செலுத்தாத வீடுகளின் மின் இணைப்பைப் துண்டிப்பதுபோல, இந்த அலுவலகத்தின் மின் இணைப்பையும் துண்டித்துவிட்டார்கள் மின்வாரிய ஊழியர்கள். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க-வினர், கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், மாவட்டத் தலைவர் நேதாஜி தலைமையில் வெளிப்பாளையம் துணை மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ.க அலுவலகத்துக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க
பா.ஜ.க

இதற்கிடையே, `மின் இணைப்பைத் துண்டித்த ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க-வினர் வைத்த கண்டிஷனால் உயரதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்களாம்.``மின்கட்டணம் செலுத்த ஒரு நாள் தாமதம் என்றாலும் பொதுமக்களின் வீடுகளில் மின் இணைப்பைப் பிடுங்கும் மின்சார வாரியம், அரசியல் கட்சிக்குச் சலுகை காட்டுவது நியாயமா... மத்திய ஆளும்கட்சி என்றுகூட பயப்படாமல், நேர்மையாகக் கடமையைச் செய்த ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுப்பதா?” என்று நாகப்பட்டினம் மக்கள் கொந்தளித்துவருகிறார்கள்.

கரன்ட்டைப் பிடுங்கின மாதிரி கட்சிப் பதவியையும் பிடுங்கினாத்தான் சரிப்படுவாங்க!

அந்தரங்கப் படங்கள் விவகாரம்
`அமைதி’யான பெண் காக்கி!

சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தொழிலதிபர் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியான புகார் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லையாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவிலிருக்கும் பெண் அதிகாரி ஒருவர், இந்த வழக்கில் ஆர்வம் காட்டாமல் அமைதிகாக்கிறாராம்.

எடப்பாடியின் `பி' பிளான் முதல்... ஸ்டாலின் சரியாகச் சொன்ன பழமொழி வரை! கழுகார் அப்டேட்ஸ்

அவரின் திடீர் அமைதி’க்கான காரணத்தைக் கண்டுபிடித்த பெண் தொழிலதிபர் தரப்பு, இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி ஒருவர்மீது புகார் செய்திருக்கிறது. ஆயிரம் விளக்கு பகுதியிலிருக்கும் உயரதிகாரி ஒருவரின் உதவியாளர் இதில் `பசையாக’ பலனடைந்திருக்கும் விவகாரம், சென்னை போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம். விரைவில் பட்டாசு வெடிக்கலாம் என்கிறது காக்கிகள் வட்டாரம்.

நமுத்துப்போகாத பட்டாசா வெடிங்க ஆபீஸர்!

சென்னை விளையாட்டு மைதானங்கள்
அடம்பிடிக்கும் அடாவடிப் பேர்வழிகள்...

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நுங்கம்பாக்கம், முகப்பேர், ஷெனாய் நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இறகுப்பந்து மைதானம், டென்னிஸ் மைதானங்கள் இயங்குகின்றன. இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல சென்னை மாநகராட்சி சார்பிலும் ஒப்பந்ததாரர்கள் மூலம் முகப்பேர், அண்ணாநகர், மேற்கு மாம்பலம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் மேற்கண்ட விளையாட்டுகளுக்கான மைதானங்கள் இயங்கிவருகின்றன.

டென்னிஸ்
டென்னிஸ்

ஆனால், இந்த மைதானங்களிலெல்லாம் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு வேண்டப்பட்டவர்கள், அமைச்சர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கூறி சிலர் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள் பயிற்சிக்கு வரும் விளையாட்டு வீரர்கள். விளையாட்டு வீரர்களுக்கான நேரத்தையும் இவர்களே ஆக்கிரமித்துக்கொண்டு வெளியே செல்ல மறுப்பதாக புகார்கள் மேலிடம் வரை சென்றிருக்கின்றனவாம்.

விளையாட்டை வினை ஆக்காதீங்கப்பா!

மிரட்டும் எடப்பாடி சொந்தம்!
கலங்கும் மாம்பழ நெடுஞ்சாலைத்துறை...

தேசிய நெடுஞ்சாலைத்துறையில், மாம்பழ மாவட்டத்தில் பொறியாளராக இருக்கும் பெண் அதிகாரி ஒருவர், முதல்வர் பழனிசாமியின் பெயரைச் சொல்லி மிரட்டுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இவர் எடப்பாடிக்கு தூரத்து உறவினர் என்பதால், இவரின் உயரதிகாரிகள் மட்டுமல்லாமல், சாலை ஒப்பந்ததாரர்களும் அமைச்சர் ரேஞ்சுக்கு இவரை `கவனிக்க’ வேண்டியிருக்கிறதாம். `முதல்வர் அலுவலகத்தில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்ட சில ஃபைல்களையும் மேடம் கிடப்பில் போடுகிறார்’ என்று புலம்புகிறது சக அதிகாரிகள் தரப்பு. கடந்த மூன்றாண்டுகளாக ஒரே பணியிடத்தில் இருக்கும் இவரது பவரைக் கண்டு, வாயைப் பிளக்கிறார்கள் உயரதிகாரிகள்.

தூரத்து சொந்தம்னா... நெடுஞ்சாலை வழியா எத்தனை கிலோமீட்டர் மேடம்?

அண்ணா பல்கலை நியமனங்கள்
தூள்பறக்கும் வசூல் வேட்டை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன. துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடையவிருக்கும் நிலையில் புதிய நியமனங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சி முடியும் தறுவாயில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, உயர் கல்வித்துறையில் பல இடைத்தரகர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறதாம்.

ஊழல்
ஊழல்

ஆட்சி முடிவதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கறந்துவிட வேண்டும் என்று கோடிகளில் வசூல் வேட்டை தூள்பறக்கிறது என்கிறார்கள். அதேசமயம், லஞ்ச ஒழிப்புத்துறையும், வருமான வரித்துறையும் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பதால், சம்பந்தமே இல்லாமல் தூரத்து ஊர்களில் நிலங்களை பத்திரப்பதிவு செய்துகொடுக்கச் சொல்லி வசூல் கணக்கை ஈடுசெய்துகொள்கிறார்களாம்.

வேலைக்குச் சேர்ந்ததுக்கு அப்புறம், லஞ்சம் கொடுப்பது எப்படின்னு சொல்லிக்கொடுப்பாங்களோ!

அடுத்த கட்டுரைக்கு