Published:Updated:

உற்சாகத்தில் பன்னீர் ஆதரவாளர்கள் முதல் மத்திய அமைச்சர்களைக் களமிறக்கும் பாஜக வரை! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``கொஞ்சம் லேட்டாகிவிட்டது... தகவல்களை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்” என்று மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார்...

``அண்ணே எனக்கு வயித்துவலி!’’
தலையில் அடித்துக்கொண்ட தளவாய்...

அ.தி.மு.க-வில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியைக் குறிவைத்து காய்நகர்த்துகிறார் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம். இதற்காக பூத் கமிட்டி, நிர்வாகிகள் கூட்டம் என்று தினமும் கன்னியாகுமரி தொகுதியில் சுற்றிச் சுழன்றுவருகிறார். டிசம்பர் 13-ம் தேதி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பத்து டவுன் பஞ்சாயத்து மற்றும் 12 ஊராட்சி நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்துகொள்ள வேண்டிய இந்தக் கூட்டத்துக்கு, 50 நிர்வாகிகள்கூட வரவில்லை.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

இதனால் டென்ஷனான தளவாய் சுந்தரம், ``என்னைய கூப்பிட்டுவெச்சு அசிங்கப்படுத்துறீங்களா... யார் யாரெல்லாம் கூட்டத்துக்கு வரலைனு லிஸ்ட் எடுத்து அனுப்புங்க. மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்று சீறிவிட்டுப் புறப்பட்டாராம். கூட்டத்துக்குச் செல்லாத நிர்வாகிகள் இப்போது பள்ளி மாணவர்கள்போல, `அண்ணே, அன்னிக்கு எனக்கு வயித்துவலி..., `பாட்டிக்கு உடம்பு சரியில்லை...’ என்று காரணங்கள் சொல்லவும் தலையிலடித்துக்கொண்டாராம் தளவாய்.

தளவாய் அண்ணே...

தலைவாழை இலையில விருந்துவெச்சா தானா வரப்போறாங்க!

``அவங்களுக்கு மட்டுமே பதவியா?’’
கொதிப்பில் சிவகங்கை அ.தி.மு.க

சிவகங்கையில் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், அமைச்சர் பாஸ்கரன் என முக்கியப் பதவிகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கே தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படுகிறது என அ.தி.மு.க-வில் குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. இந்தநிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளும் அதே சமூகத்தினருக்கு வழங்கப்பட்டிருப்பது, கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது.

அமைச்சர் பாஸ்கரன்
அமைச்சர் பாஸ்கரன்

``அவங்களைவெச்சே கட்சி நடத்திக்க வேண்டியதுதானே... கட்சிக்கு போஸ்டர் அடிக்க மட்டும் நாங்க வேணும், பதவி மட்டும் அவங்களுக்கா?” என்று மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொதிப்படைகிறார்கள். இந்தக் கொதிப்பு தேர்தல் களத்திலும் எதிரொலிக்கும் என்பதால், அமைச்சர், மாவட்டச் செயலாளர் தரப்பு செய்வதறியாமல் கையைப் பிசைகிறது.

மத்த சமூகத்துக்கு முகம் கொடுங்க!

``கண்மூடித்தனமா நம்புறது நல்லதில்லை...’’
செந்தில் பாலாஜிக்கு எதிராக தி.மு.க நிர்வாகிகள்

செந்தில் பாலாஜியைக் கவிழ்த்துவிடுவதற்கென்றே, தி.மு.க-வில் ஒரு கோஷ்டி தனியாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறதாம். சமீபத்தில் கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணியில் பொறுப்பு கிடைக்காத ஒருவர் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்துக் குமுறியிருக்கிறார். ``மாவட்டச் செயலாளர் தன்னிச்சையாகச் செயல்படுறார். உதய் சார்கிட்ட சொல்லி, கொஞ்சம் தட்டிவையுங்க’’ என்று அந்த நபர் கூறியதும், ஜெர்க்கான மகேஷ் பொய்யாமொழி, ``இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்று கூறி அனுப்பிவைத்தாராம். அதேபோல, தொழில்நுட்ப அணியில் முக்கியத்துவம் கிடைக்காத ஒருவரும், அணியின் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்துப் புலம்பியிருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அவருக்கும், `செந்தில் பாலாஜி விஷயத்தில் தலையிட முடியாது’ என்கிற பதிலே கிடைத்திருக்கிறது. பொருமலில் இருக்கும் உடன்பிறப்புகள் சிலர், ‘‘செந்தில் பாலாஜியைக் கண்மூடித்தனமா தலைமை நம்புறது நல்லதில்லை. மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்கின கதையா ஆயிடப்போகுது’’ என்று கொதிக்கிறார்கள்.

மண் குதிரை மட்டுமல்ல... பொன் குதிரையை நம்பி ஆத்துல இறங்குனாலும் ஆபத்துதான்!

`இந்துக்களின் காவலன் கே.டி.ஆர்’
ரகளைகட்டத் தயாராகும் ராஜேந்திர பாலாஜி

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து, `தெய்வீக தமிழ் சங்கம்’ என்ற பெயரில் ஒரு பிரசார இயக்கம் தமிழகத்தில் நடந்துவருகிறது. பிரசாரத்தின்போது, கையடக்க சிறு புத்தகம் ஒன்றையும் விநியோகித்து வருகிறார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும், இந்துக்கள் அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் இணைப்பதுதான் இந்தப் பிரசார இயக்கத்தின் குறிக்கோள் என்கிறார்கள். இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியைச் சந்தித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு குழு.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அந்தக் குழுவிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரகரும், கிராம முன்னேற்ற அமைப்பின் பொறுப்பாளருமான ஸ்தாணுமாலயன், இந்துக்களுக்கு ஆதரவாகப் பேட்டியளிக்கும் ராஜேந்திர பாலாஜியைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, `இந்துக்களின் காவலன் கே.டி.ஆர்’ என்கிற பேனரில் ராஜேந்திர பாலாஜி தரப்பு ரகளைகட்டப் போகிறதாம்.

ஆஹா... கே.டி.ஆருக்குப் போட்டி யாரு?

புதுப்புது ஸ்கிரிப்ட்!
உற்சாகத்தில் பன்னீர் ஆதரவாளர்கள்

நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வில் கோஷ்டிச் சண்டை வலுத்திருக்கிறது. இந்தநிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணவிழாவுக்கு நெல்லை வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், தன் ஆதரவாளரான நாராயண பெருமாள் வீட்டில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவு அணியினர் ஒட்டுமொத்தமாகக் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம்

``மாவட்ட அளவில் கட்சியில் எங்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை, நிர்வாகிகள் யாரும் எங்களைக் கண்டுகொள்வதில்லை’’ என வருத்தப்பட்ட ஆதரவாளர்களிடம், ``அதெல்லாம் பழைய கதை. புதுப்புது ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு... இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும்’’ எனப் பீடிகை போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது பன்னீர் தரப்பு. உற்சாகத்தில் மிதக்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்!

யாரு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டுங்க?

மாவட்டத்துக்கு ஒரு மத்திய அமைச்சர்!
பா.ஜ.க-வின் பலே திட்டம்...

ஜனவரி மாதத்திலிருந்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறது பா.ஜ.க. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மத்திய அமைச்சரை பிரசாரத்தில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

கமலாலயம்
கமலாலயம்

சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், பயனாளிகளின் விவரம், சமூகரீதியாக அந்தப் பகுதி மக்களுக்கு பா.ஜ.க செய்திருக்கும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றைக் கோடிட்டுக்காட்டி பிரசாரம் செய்யப்படுமாம். இதற்கான அட்டவணையைத் தயாரிக்கும் பணி கமலாலயத்தில் தொடங்கியிருக்கிறது.

வாங்கோ ஜி... வாங்கோ!

ரூட்டை மாத்து... பில் போடு!

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள அரசுத் தலைமை மருத்துவமனையில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஒருவர், தனியார் மருத்துவமனை ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மணி மணியாகப் பேசி, அவர்களை அப்படியே தனது தனியார் மருத்துவமனைக்கு ரூட் மாற்றிவிடுகிறாராம். அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் பில் பல ஆயிரங்கள் எகிறுகிறதாம். இதெல்லாம் போதாதென்று, ஊட்டி நகரின் மையப்பகுதியில் தற்போது மூன்று அடுக்கில் சொந்த மருத்துவமனையும் எழுப்பிவருகிறார். மனிதரின் வளர்ச்சியைப் பார்த்து ஊட்டியே

வாய் பிளக்கிறது. ஆஸ்பத்திரியா... ‘காசு’பத்திரியா!

அடுத்த கட்டுரைக்கு