Published:Updated:

பன்னீரின் மணிமண்டபக் கோரிக்கை முதல் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய கட்சி நிர்வாகி வரை! -கழுகார் அப்டேட்ஸ்

``டெலிகிராம் வழியாகச் செய்திகளை அனுப்பிவைக்கிறேன்!’’ - சுருக்கமாகப் பேசிவிட்டு செல்போனை கட் செய்தார் கழுகார். சற்று நேரத்தில் அவரிடமிருந்து டெலிகிராமில் வந்து விழுந்தன செய்திகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பன்னீரின் மணிமண்டபக் கோரிக்கை...
தலைசுற்றிப்போன அ.தி.மு.க-வினர்!

`சமூகநீதிக்காகப் பாடுபட்ட நீதிக்கட்சி முன்னோடிகளும், முன்னாள் முதல்வர்களுமான சுப்பராயன், பி.டி.ராஜன் ஆகியோருக்கு மணிமண்டம் கட்ட வேண்டும்’ என்று, பன்னீர் கோரிக்கை வைத்திருப்பது அ.தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல, தி.மு.க-வினருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. `தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர், பன்னீருக்கு நெருக்கமானவர்கள் மூலம் திருடப்படுகிறது’ என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சில ஆண்டுகளுக்கு முன் குற்றம்சாட்டி, வழக்கும் தொடர்ந்தார்.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

தற்போது பழனிவேல் தியாகராஜன் அமைச்சரான பின்பு, தேனி மாவட்டத்தில் திருட்டுத்தனமாகத் தண்ணீர் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுக்கு மணிமண்டபம் கட்டச் சொல்லி, அவரின் சமூகப் பங்களிப்பைப் புகழ்ந்து ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். `இது என்ன அரசியல் டிசைன்?!’ என்று பன்னீரின் தனி டிராக்கைப் புரிந்துகொள்ள முடியாமல் தலைசுற்றிப்போயிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்!

அண்ணாமலைக்கு எதிரான அரசியல்?

செப்டம்பர் 11-ம் தேதி பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரன் நினைவுதின நிகழ்வில், பா.ஜ.க மாநிலத் தலைவரும், மத்திய அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொண்டார்கள். பல வருடங்களாக நடந்துவரும் இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பா.ஜ.க மாநிலத் தலைவர் கலந்துகொள்வது இதுதான் முதன்முறை என்கிறார்கள். அதேநேரம், மாநிலத் தலைவருக்கும் அந்தக் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையிலான பவர் பாலிடிக்ஸ் இந்த நிகழ்விலும் வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை
நா.ராஜமுருகன்

பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்ததை ஆதரித்து நயினார் பேசியது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் ஏற்கெனவே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், மாநிலத் தலைவரும், மத்திய அமைச்சரும் அஞ்சலி செலுத்த வந்தபோது அவர்களுடன் செல்லாமல், தன் ஆதரவாளர்களுடன் தனியாகச் சென்று நயினார் அஞ்சலி செலுத்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நகராட்சியில் பேக்கேஜ் எதற்கு?

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கான்ட்ராக்டர்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திலேயே செய்யப்பட்டுவந்த பணிகளை தற்போது மண்டலவாரியாக பேக்கேஜ் முறையில் டெண்டர் விடுவதற்கான முயற்சிகள் நடக்கிறதாம். `சிறிய அளவிலான ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தத்தைக் கொடுப்பதைவிட மண்டலவாரியாகப் பிரித்து பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தைக் கொடுத்துவிட்டால் கமிஷனை மொத்தமாகப் பெறலாம்’ என்று பொன்னான அதிகாரி துறை மேலிடத்துக்கு கொடுத்த ஐடியாபடியே இந்தப் பணிகள் நடந்துவருகிறனவாம்.

மிஸ்டர் கழுகு: மாப்பிள்ளையுடன் புகைப்படம்! - ஈ.சி.ஆரில் டீலிங்கை நடத்திய இருவர்...

`பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் பேக்கேஜ் சிஸ்டம் ஒழிக்கப்படும்’ என சட்டமன்றத்திலேயே கூறப்பட்டிருக்கும் நிலையில், நகராட்சித்துறைக்கு மட்டும் பேக்கேஜ் சிஸ்டம் எதற்கு என்று புலம்பிவருகிறார்கள் ஏற்கெனவே இந்த ஒப்பந்தப் பணிகளை எடுத்தவர்கள்.

``பழசை மறந்துடுங்க!’’
சத்யா விடு தூது!

கடந்த சட்டமன்றத் தேர்தலில், பண்ருட்டி தொகுதி அபோதைய சிட்டிங் எம்.எல்.ஏ-வான சத்யா பன்னீர்செல்வத்துக்கு கல்தா கொடுத்துவிட்டு, நெய்வேலியைச் சேர்ந்த சொரத்தூர் ராஜேந்திரனை நிறுத்தியது அ.தி.மு.க தலைமை. அதில் கடுப்பான சத்யா பன்னீர்செல்வம், ‘எனக்கு சீட் தரவில்லை. அதனால் கட்சியைவிட்டு விலகுகிறேன்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு கட்சிப் பணிகளிலிருந்து விலகினார். சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும், தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடியைச் சந்திக்காமல் புறக்கணித்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரும் தோல்வியைத் தழுவ... `சத்யா பார்த்த உள்ளடி வேலைதான் அதற்குக் காரணம்’ என்று விமர்சனம் எழுந்தது.

சத்யா பன்னீர்செல்வம்
சத்யா பன்னீர்செல்வம்

கடுப்பான எடப்பாடி, சத்யாவையும் அவரின் கணவர் பன்னீர்செல்வத்தையும் கட்சியைவிட்டு நீக்கினார். ஆனால் தற்போது வரை கட்சிக்கொடி, கரைவேட்டி என வலம்வரும் இருவரும், உள்ளூர் பஞ்சாயத்துகளையும் டீல் செய்கிறார்களாம். அத்துடன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சேர்மன் பதவிக்கு வாய்ப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு நடையாக நடந்துவருகிறார்கள். இன்னொரு பக்கம் ``பழசை மறந்துடுங்க’’ என்று எடப்பாடிக்கு கணவனும் மனைவியும் தகவல் அனுப்பியிருக்கிறார்களாம்.

``ஸ்டெர்லைட் ஆலை அறிவிப்பு என்ன ஆச்சு?’’

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தூத்துகுடியில் பேசிய ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சிறப்புச் சட்டம் இயற்றப்படும்’’ என்றார். ஆனால், தி.மு.க-வின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அது பற்றி எதுவும் அறிவிக்காதது ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

``சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதைப்போல, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவது குறித்தும் சிறப்புச் சட்டம் இயற்றுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அடுத்த கூட்டத்தொடரிலாவது எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்’’ என்று சொல்லும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், அப்படிச் செய்யாவிட்டால் தி.மு.க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

வாரிசு கொடுத்த வரவேற்பு...
நெகிழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்!

வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ம.தி.மு.க-விலிருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத், மீண்டும் ம.தி.மு.க-வுக்கே திரும்பும் சூழல் ஏற்பட்டிருப்பதாகக் கிசுகிசுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில். கோவில்பட்டியில் செப்டம்பர் 10-ம் தேதி ம.தி.மு.க நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவுக்கு நாஞ்சில் சம்பத் சென்றபோது, அங்கிருந்த துரை வைகோ, அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றிருக்கிறார்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

மாஜி தலைவரின் தனயனின் பாசத்தால் நெகிழ்ந்துபோன நாஞ்சில் சம்பத், துரை வைகோவுடன் நீண்ட நேரம் நெருக்கமாக அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்தார். அப்போது கடந்த காலத்தில் வைகோவுடனான நட்பு குறித்துச் சிலாகித்துப் பேசிய நாஞ்சில் சம்பத்தை, வாஞ்சையுடன் துரை வைகோ நலம் விசாரித்திருக்கிறார். அதனால் மகிழ்ந்த நாஞ்சில் சம்பத், ‘விரைவில் நல்லது நடக்கும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாராம். இதை முன்வைத்து, `நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க-வில் இணைந்தாலும் ஆச்சர்யமில்லை’ என்கிறார்கள் கட்சிக்காரர்கள்!

ஒன்றிணையும் கருணாநிதி குடும்பம் முதல் அன்பில் மகேஷைப் புறக்கணித்த எம்எல்ஏ-க்கள் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நாமும் சரணடைஞ்சுட வேண்டியதுதான்!’’

நாமக்கல் மாவட்ட தி.மு.க-வில், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான ராஜேஸ்குமார் கோலோச்சிவந்தார். இதனால், அமைச்சர் மதிவேந்தன் ஆதரவாளர்களுக்கும், ராஜேஸ்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்துவந்தது. இந்தநிலையில், சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய அமைச்சர் மதிவேந்தன், ``நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமார் மிகக் கடுமையாக உழைத்து, அவரது அன்பாலும் ஆற்றலாலும் மாவட்டத்தை தி.மு.க வசமாக்கியிருக்கிறார்.

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

என்னை என்றும் வழிநடத்திச் செல்லும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பேசினார். இதைப் பார்த்த மதிவேந்தன் ஆதரவாளர்கள், ``அமைச்சர் ஆதரவா நிப்பாருனு நினைச்சு நாம ராஜேஷ்குமாருக்கு எதிரா அரசியல் பண்ணிக்கிட்டு இருந்தோம். ஆனா, அமைச்சரோ ராஜேஸ்குமாரைப் புகழ்றாரு. நம்ம நிலைமை?’’ என்று குழம்பிக் கிடந்தார்கள். இப்போது ராஜ்யசபா வேட்பாளராக ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருப்பதால், `இனி அமைச்சர் வழியில் நாமும் சரணடைந்துவிட வேண்டியதுதான்’ என்ற மூடுக்கு வந்துவிட்டார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

வேதா இல்லத்தில் விநாயகர் வழிபாடு...
நினைவலைகளில் மூழ்கிய சசிகலா!

விநாயகர் சதுர்த்தி தினத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக போயஸ் கார்டனிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தின் வாசலிலுள்ள அந்தச் சிறிய கோயிலில், முக்கிய விசேஷங்களின்போது வழிபாடு செய்வது சசிகலாவின் வழக்கம். சிறையிலிருந்து விடுதலையான பிறகு முதன்முறையாக வேதா இல்லத்தின் வாசலுக்குச் சென்றதால், உணர்ச்சிப் பெருக்கால் அமைதியாக இருந்திருக்கிறார் சசி.

பன்னீரின் மணிமண்டபக் கோரிக்கை முதல் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய கட்சி நிர்வாகி வரை! -கழுகார் அப்டேட்ஸ்

வழிபாடு முடித்துவிட்டு கிளம்பும்போது, `வேதா இல்லத்தை யார் பராமரிப்பு செய்கிறார்... பூஜை அறை, ஜெயலலிதாவின் அறை சுத்தமாக இருக்கின்றனவா?’ என்பதையெல்லாம் அங்கே இருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். அரசு நினைவில்லமாக அறிவித்துவிட்டதால், இனி வேதா இல்லத்துக்குள் சசி நுழைவது சாத்தியமில்லை. ஆனாலும், அந்த வீட்டுடன் தனக்குள்ள 35 ஆண்டுக்கால உறவை, நெகிழ்ச்சியுடன் தன்னுடன் வந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டாராம் சசிகலா.

``தி.மு.க கொள்கைக்கே குந்தகமான அறிவிப்பு!’’
ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய கட்சி நிர்வாகி

சமூகநலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டமான `தாலிக்குத் தங்கம்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. அதில், `திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால், தாலிக்குத் தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. `இந்த அறிவிப்பு தி.மு.க-வின் சுயமரியாதை திருமணக் கொள்கைக்கே வேட்டுவைப்பதாக இருக்கிறது’ என்று ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் செந்தில்குமார், முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதில் `சுயமரியாதை திருமணம் செய்பவர்கள் கோயிலுக்குப் போவது கிடையாது. ஏதாவது மண்டபத்தில்தான் திருமணம் செய்வார்கள். அப்படியிருக்க, `கோயிலில் திருமணம் செய்யாவிட்டால் திருமண நிதியுதவி கிடையாது’ என்பது சுயமரியாதை திருமணத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாக இருக்காதா! என்னுடைய குடும்பத்தில் நான்கு பேர் சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறோம். என்னைப் போன்ற தி.மு.க கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றிவரும் நபர்களுக்காகவாவது தயவுசெய்து இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`எடப்பாடி பக்கம் திரும்பும்`வாளையார்' மனோஜ் முதல் சசிகலாவின் சமாதான முயற்சி வரை'- கழுகார் அப்டேட்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு