Published:Updated:

புதுச்சேரி முதல்வர்வேட்பாளர் பஞ்சாயத்து முதல் சீமான் ரகசியம் உடைக்கும் ராஜீவ் வரை!-கழுகார் அப்டேட்ஸ்

நாராயணசாமி- நமச்சிவாயம் - சீமான்-ராஜீவ் | கழுகார் அப்டேட்ஸ்
News
நாராயணசாமி- நமச்சிவாயம் - சீமான்-ராஜீவ் | கழுகார் அப்டேட்ஸ்

‘‘தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்போகிறேன். செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன்” என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தார் கழுகார்!

புதுச்சேரி பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் யார்?
நமச்சிவாயத்துடன் மோதும் ரங்கசாமி...

தமிழகத்தில் ஓய்ந்து முடிந்த முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து, இப்போது புதுச்சேரியில் கிளம்பியிருக்கிறது. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தை ‘நீங்கள்தான் முதல்வர்’ என்று வலைவிரித்து தூக்கியிருக்கிறதாம் பா.ஜ.க தலைமை. முதல்வர் கனவில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கையோடு டெல்லிக்குச் சென்ற நமச்சிவாயம், ஜனவரி 28-ம் தேதி பா.ஜ.க தேசியச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்துவிட்டார். இது, பா.ஜ.க கூட்டணியிலிருக்கும் என்.ஆர்.காங்கிரஸையும் அ.தி.மு.க-வையும் கொதிப்படையவைத்திருக்கிறது.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் நமச்சிவாயம
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் நமச்சிவாயம

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘நேற்றுவரை காங்கிரஸ் கட்சியில் பதவியை அனுபவித்துவிட்டு, கடைசி நேரத்தில் பா.ஜ.க-வுக்கு வந்த நமச்சிவாயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று கச்சேரியை ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க. காங்கிரஸில் ரங்கசாமியின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர் நமச்சிவாயம். அதன் பிறகே என்.ஆர்.காங்கிரஸைத் தொடங்கினார் ரங்கசாமி. அப்படியிருக்கும்போது, நமச்சிவாயத்தை பா.ஜ.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயம் ‘‘புதுச்சேரி கூட்டணிக்கு யார் தலைமையேற்பது என்பது பா.ஜ.க-வுடனான பேச்சுவார்த்தையில்தான் தெரியவரும்’’ என்று சொல்லியிருக்கிறார் ரங்கசாமி. ஒருவேளை முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டால், அதில் அதிருப்தியடையும் ரங்கசாமியைத் தங்கள் கூடாரத்துக்குள் இழுக்கத் தயாராக இருக்கிறதாம் காங்கிரஸ்.

ரங்கசாமி... இனி ரணகளசாமி!

அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கச்சைக் கட்டும் புதிய தமிழகம்!

பட்டியலின வெளியேற்றம் கோரிக்கையை முன்வைத்து, கிராமம்தோறும் புதிய தமிழகம் கட்சி அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கும், ஜனவரி 6-ம் தேதி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கும் காவல்துறை கடும் கெடுபிடி காட்டியது. இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்துக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்திருக்கும் புகாரில், ‘எங்கள் கூட்டத்தை மட்டும் நடத்தவிடாமல் போலீஸ் இடைஞ்சல் கொடுத்ததன் பின்னணியில் சதி இருக்கிறது.

புதுச்சேரி முதல்வர்வேட்பாளர் பஞ்சாயத்து முதல் சீமான் ரகசியம் உடைக்கும் ராஜீவ் வரை!-கழுகார் அப்டேட்ஸ்

காவல்துறை டி.ஜி.பி., தென்மண்டல ஐ.ஜி., மதுரை கமிஷனர் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அ.தி.மு.க கூட்டணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு எதிராக கிருஷ்ணசாமி கச்சைகட்டுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க அரசுக்கு எதிரான பிரசாரத்தை கிராமம்தோறும் கொண்டு செல்லவும், புதிய தமிழகம் கட்சியினர் தயாராகிவருகிறார்கள்.

டிமாண்டைச் சொல்லுங்கப்பா!

இறந்தவருக்கு கட்சி பதவி வழங்கிய அ.தி.மு.க!

சென்னை அ.தி.மு.க-வில் இறந்தவருக்குப் பதவி கொடுத்திருப்பது கட்சியினரை அதிரவைத்திருக்கிறது. வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சண்முகபிரியன், கடந்த 2020, ஏப்ரல் 1-ம் தேதி உயிரிழந்தார். இந்தநிலையில், கடந்த நவம்பர் மாதம் வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சண்முகபிரியனுக்கு வில்லிவாக்கம் மேற்கு பகுதி அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்த கட்சியினர், மாவட்ட நிர்வாகத்திடம் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.

புதுச்சேரி முதல்வர்வேட்பாளர் பஞ்சாயத்து முதல் சீமான் ரகசியம் உடைக்கும் ராஜீவ் வரை!-கழுகார் அப்டேட்ஸ்

இதற்கிடையில் இறந்தவருக்கு பதவி வழங்கிய மாவட்ட நிர்வாகத்தின் தவற்றை சுட்டிக்காட்டும் வகையில் இறந்தவரின் பெயரில் நோட்டீஸ் ஒன்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. அதில், ‘மண்ணுலகைவிட்டு மறைந்தாலும், என்னை மறவாமல் பொறுப்பு கிடைத்திட பரிந்துரை செய்த மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்பாபுவுக்கு விண்ணிலிருந்து கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அதிரிபுதிரி ஆகியிருக்கிறது சென்னை அ.தி.மு.க!

அண்ணாரின் ஆத்மா வெற்றி பெற வாழ்த்துகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வனத்துக்குள் புகுந்து அதிகாரிகள் அட்டகாசம்!

ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்...’ என்று எழுதுவதெல்லாம் மகா அபத்தம். வனத்தை நாம் ஆக்கிரமிப்பு செய்துவிட்டோம் என்பதே உண்மை. இந்தக் கதையைப் படியுங்கள்... சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட முதுமலை புலிகள் காப்பகத்துக்கு, மத்திய அரசிடமிருந்து கோடிகளில் நிதி கொட்டுகிறது. ஆனால், ‘தடுப்பணைகளைத் தூர்வாரினோம், ஓவியம் வரைந்தோம், பெயர்ப் பலகை வைத்தோம்’ என வனத்துறை அதிகாரிகளே லட்சங்களை வாரி சுருட்டிக்கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

புதுச்சேரி முதல்வர்வேட்பாளர் பஞ்சாயத்து முதல் சீமான் ரகசியம் உடைக்கும் ராஜீவ் வரை!-கழுகார் அப்டேட்ஸ்
கே.அருண்

இது போதாதென்று அப்பாவிப் பழங்குடிகளைக் காட்டைவிட்டு விரட்ட ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் என அரசு வழங்கிய நிவாரணத் தொகையையும் முறைகேடு செய்த விவகாரம் நீதிமன்றத்தில் நிற்கிறது. சமீபத்தில் யானை தீவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் முதுமலை அதிகாரி ஒருவர் அளித்த பதிலில், ‘அந்த யானையை உரிய நேரத்தில் பிடித்து சிகிச்சையளிக்க எங்களிடம் பணமில்லை. அதனால்தான், யானையைக் காப்பாற்ற முடியவில்லை’ என்று ‘நோட்’ போட்டு அனுப்பியிருக்கிறாராம். இவை எல்லாவற்றையும்விட மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பல்வேறு ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியாவுக்குள் அடிக்கடி நண்பர்கள் கூட்டத்துடன் புகும் வனத்துறை அதிகாரிகள் பலர், விடிய விடிய கெட்ட ஆட்டம் போடுவதால் விலங்குகளே மிரள்கின்றனவாம்! இவையெல்லாம் வன உயிரின ஆர்வலர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கின்றன.

அதிகாரிகளை பெண்டெடுக்க தேவை ஒரு கும்கி!

தோவாளை கிருஷ்ணகுமார் ஒதுங்கிய பின்னணி!
கன்னியாகுமரி அ.தி.மு.க களேபரம்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அ.தி.மு.க ஒன்றயச் செயலாளராக இருந்த கிருஷ்ணகுமார், தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரது விவகார வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பூட்டியது. இது தொடர்பாக கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையையும் அப்போது எடுக்கவில்லை. இந்தநிலையில், சிறார் வதையில் சிறை சென்ற முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ‘நாஞ்சில் முருகேசனுக்கு ஒரு நீதி... கிருஷ்ணகுமாருக்கு ஒரு நீதியா?’ என்று பலரும் அ.தி.மு.க தலைமைக்குக் குடைச்சல் கொடுத்தனர்.

கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

தேர்தல் நெருங்கும் சமயத்தில் கிருஷ்ணகுமாரால் வாக்காளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தற்காலிகமாக அவரை ஒதுங்கியிருக்க கட்சித் தலைமை அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் கிருஷ்ணகுமார் மீண்டும் ஒன்றியச் செயலாளராக வலம்வருவார்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

அந்த அடுத்த வீடியோ எங்கப்பா!

சங்கடம் தீர்த்த தர்ம.தங்கவேல்!
புதுக்கோட்டை காங்கிரஸ் பெருமூச்சு

புதுக்கோட்டை உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் ஆதரவுடன் மாவட்ட ஊராட்சியை அ.தி.மு.க கைப்பற்றிய பிறகு, அங்கு தி.மு.க - காங்கிரஸ் இடையே மனக்கசப்பு அதிகரித்துவிட்டது. ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவருமான தர்ம.தங்கவேல்தான் இதற்குக் காரணம் என காங்கிரஸார் புலம்பிவந்தார்கள்.

தங்கவேல்
தங்கவேல்

இந்தநிலையில்தான், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கமாக இருந்த தர்ம.தங்கவேல், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். ‘இருந்த ஒரு சங்கடமும் தீர்ந்தது. இனியாவது, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பூசலில்லாமல் தொடர்ந்தால் சரி’ என்கிறார்கள் கதர்ச்சட்டைகள்.

`தங்கவேல் இனிமே எங்கவேல்’ என்பார்களோ அ.தி.மு.க-வினர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீமான் ரகசியம் உடைக்கும் ராஜீவ்
தி.மு.க புதுத் திட்டம்...

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய ராஜீவ் காந்தி, சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த இணைப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, நீண்ட நாள்களுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் அறிவாலயம் வந்திருந்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியில் ராஜீவ் காந்தியின் செயல்பாடுகள் குறித்து ஆர்வமாகக் கேட்டறிந்த ஸ்டாலின், ‘தம்பி உதயநிதியோட இருங்க... ஒண்ணா வேலை பாருங்க’ என்றாராம்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

தி.மு.க-வைக் குறிவைத்து, தொடர்ந்து சீமான் தாக்கிவரும் சீமான் கோட்டையின் சில ரகசியங்களை உடைக்கவிருக்கிறாராம் ராஜீவ். இதையடுத்து, சீமானுக்கு எதிராக, சிலபல அதிரடி மீம்ஸ்களை தயார் செய்துவருகிறதாம் உதயாவின் ஆலோசனைக்குழு.

அண்ணே அப்படியே அந்த ஆமைக்கறி, இட்லிக்கறி ரகசியத்தையும் சொல்லுங்க!

தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்!
விழிபிதுங்கும் உளவுத்துறை...

கொங்கு மண்டலத்தில் மூன்று நாள்கள் பிரசாரப் பயணத்தை முடித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அடுத்ததாக தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொள்ளத் தயாராகிறாராம். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஊர்வசி அமிர்தராஜிடம் கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. பிப்ரவரி 15-ம் தேதி பிரசாரத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

சமீபத்தில் கரூரில் வில்லேஜ் சமையலில் ராகுல் காந்தி கலக்கினார் அல்லவா... அதுபோல ராகுலின் ஒவ்வொரு பயணத்திலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே தெரியாமல் சில ரகசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுகின்றன. அந்த வகையில், தூத்துக்குடியில் ராகுல் என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ என்று விழிபிதுங்கிவருவது கட்சியினர் மட்டுமல்ல... மாநில உளவுத்துறையினரும்தானாம்.

தூத்துக்குடியில முத்தெடுப்பாரோ!