Published:Updated:

ரஜினிக்குப் பச்சைக்கொடி முதல் சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் டிடிவி.தினகரன் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

`முக்கியப்புள்ளி ஒருவரைச் சந்திக்கச் செல்கிறேன். மெயில் செக் பண்ணவும்’ என்று வாட்ஸ்அப் செய்திருந்தார் கழுகார்.

உள்ளதும் போச்சா... நொந்துபோன எம்.எல்.ஏ!

வரும் சட்டமன்றத் தேர்தலில், திருவள்ளூர் தொகுதியை யார் கைப்பற்றுவது என்பதில் திருவள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான வி.ஜி.ராஜேந்திரனுக்கும், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.சி.ஆர்.குமரனுக்கும் இடையே போட்டிநிலவுகிறது. இருவரும் ஒரே சமூகம் என்றாலும், விட்டுக்கொடுக்க இரு தரப்பும் தயாராக இல்லை. சமீபத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலினை திருவள்ளூர் தி.மு.க மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தபோது, அவர் முன்னிலையிலேயே இந்த விவகாரம் வெடித்துவிட்டதாம். மாவட்டப் பொறுப்புக்குழுவில் குமரனுக்கு இடம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, ``குமரன் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கெனவே பொறுப்புக்குழுவில் இடம் ஒதுக்கியாச்சு.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மறுபடியும் அதே சமூகத்துக்கு ஏன் இடம் தரணும்?’’ என்று ஸ்டாலினிடம் ராஜேந்திரன் கூறினாராம். அதற்கு ஸ்டாலின், ``நீயும் அதே சமூகம்தானே... ஏற்கெனவே ஒருவருக்குக் கொடுத்தாச்சுனு நீயே சொல்றே... அப்புறம், உனக்கு எதுக்குப் பொறுப்புக்குழுவுல பதவி?’’ என்று பட்டியலிலிருந்த ராஜேந்திரனின் பெயரை ஸ்டாலினே நீக்கியதாகக் கூறுகிறார்கள். `அவருக்கு வேட்டுவெக்கப்போனா, நமக்கு உள்ளதும் போச்சா?’ என்று நொந்துபோய் திரும்பினாராம் ராஜேந்திரன்.

#சோனமுத்தா போச்சா..!

வைத்திலிங்கம் நடத்திய விசுவாச டெஸ்ட்!

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைத்திலிங்கம் சமீபத்தில் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களைச் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகேயுள்ள தெலுங்கன் குடிகாட்டுக்கு வரச் சொன்னாராம். அவர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்திய வைத்திலிங்கம், ``வர்ற தேர்தல்ல நம்ம ஆளுங்களைத்தான் அதிகமான இடங்கள்ல நிக்கவெக்கப்போறேன்.

 வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

என்கிட்ட இருந்த சில பேர் கோயம்புத்தூர் ரூட் புடிச்சு சீட்டுக்காகப் போறாங்க. அதெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. இங்கே நான் எடுக்குறதுதான் முடிவு’’ என்று பேசியதாகக் கூறப்படுகிறது. வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களாக இருந்த சிலர், கோவை ரூட் பிடித்துப் போனதில் வைத்திலிங்கத்துக்கு ஏகக் கடுப்பாம். இதனால், தனக்கு யாரெல்லாம் விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே அவர் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தஞ்சை அ.தி.மு.க வட்டத்தில் பேசப்படுகிறது.

#கறுப்பு ஆட்டைக் கண்டுபுடிச்சிட்டீங்களா?!

ரஜினிக்குப் பச்சைக்கொடி!

ரஜினிகாந்தின் உருவம் பொறிக்கப்பட்ட பச்சைக்கொடிகளை, தமிழகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்போகிறோம் என்று கிளம்பியிருக்கிறது `ரஜினி ரத்த தான கழகம்.’ தென்காசி மாவட்டம், வெங்காடம்பட்டி கிராமத்திலிருந்து செயல்பட்டுவரும் இந்த அமைப்பின் சார்பாக, இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்திருக்கிறார்களாம்.

ரஜினி
ரஜினி

20 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த அமைப்பினர், `பச்சைக்கொடி’ மூலம் ரஜினியின் அரசியலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமைப்பை நடத்திவரும் திருமாறன் என்பவர், ரஜினியிடம் `கிரீன் சிக்னல்’ பெற்றே, இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறாராம்.

#ரத்த தானத்துக்கும் கொடியேத்துறதுக்கும் என்ன சம்பந்தம்?!

ஐ பேக் ஆடிய கண்ணாமூச்சி...
கடுப்பில் கலைவாணன் தரப்பு!

சமீபத்தில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அவரைச் சந்திக்க திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் அங்கு வருவதற்குள், உதயநிதி திருவாரூருக்குக் கிளம்பிவிட்டார். இந்தத் தகவலை, உதயநிதியின் சுற்றுப்பயணத்தை கவனிக்கும் ஐபேக் ஊழியர்கள் பூண்டி கலைவாணனுக்குத் தெரிவிக்கவில்லையாம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அடுத்ததாக, திருவாரூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம், சில காரணங்களால் ஒரு பள்ளிக்கூடத்துக்கு நிகழ்ச்சியை மாற்றிவிட்டதாம் ஐபேக். இந்தத் தகவலும் கலைவாணனிடம் தெரிவிக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரத்திலிருக்கும் கலைவாணன் தரப்பு, `இதற்கெல்லாம் காரணம் மன்னார்குடி எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜாதான்’ என்று பொருமுகிறதாம்.

#அநியாயத்துக்கு அலைக்கழிச்சிட்டீங்களேப்பா!

``நான்தான் மாவட்டச் செயலாளர்?’’
காய்நகர்த்தும் கதிர் ஆனந்த்

தி.மு.க-வில் அமைப்புரீதியாக 10 ஊராட்சிகளுக்கு மேலிருக்கும் ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து, பொறுப்பாளர்களை நியமித்துவருகிறார்கள். புதிய பொறுப்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள்தான் பரிந்துரைக்க வேண்டும். அப்படியிருக்க, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பிரிக்கப்படும் ஒன்றியங்களுக்கு, மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரை இல்லாமலேயே, மகன் கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்கத் திட்டமிடுகிறாராம் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

இதனால், இரண்டு மாவட்ட நிர்வாகிகளும் துரைமுருகன் மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம். `தேர்தலுக்குப் பிறகு நான்தான் வேலூர் மாவட்டச் செயலாளர்’ என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்ட கதிர் ஆனந்த், அதன் முதற்கட்டமாக, தந்தையின் மூலமாக உட்கட்சிக்குள்ளேயே ஆட்டத்தைக் கலைத்து காய்நகர்த்திவருகிறாராம்!

#வேலூர்க் கலகம்... வியர்க்குது கழகம்!

அமைச்சரின் ஹைடெக் இளைஞர் படை!

கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உடன் செல்கிறது ஒரு இளைஞர் படை. தலைக்கு மேலே ட்ரோன் கேமரா, தோள்களில் விதவிதமான ஹைடெக் கேமராக்களுடன் வலம்வருகிறார்கள் அந்த இளைஞர்கள். கேண்டிட் க்ளிக்ஸ், பருந்துப் பார்வை என்று அவர்கள் எடுக்கும் அனைத்து போட்டோ, வீடியோக்களையும் அ.தி.மு.க ஐடி விங் வைரலாக்குகிறது.

மோடி vs எடப்பாடி... கோஷ்டிகளால் திணறும் திருப்பூர் அ.தி.மு.க! - கழுகார் அப்டேட்ஸ்

சமீபத்தில், விமான நிலையம் அருகே ட்ரோன் கேமராவைப் பறக்கவிட்டிருக்கிறார்கள். ``ஏங்க... இதுக்கு பர்மிஷன் இருக்கா..?’’ என்று அவர்களிடம் அதிகாரிகள் கேட்டதற்கு, ``இது எங்க அண்ணன் ஊருங்க..!’’ என்று கெத்தாகப் பதிலளித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இந்த இளைஞர் படை போடும் பில் தொகை, லட்சங்களைத் தொடுகிறதாம்.

#கேமரா பாய்ஸ்... பார்த்து ஷூட் பண்ணுங்கப்பா!

சுற்றுப் பயணத்துக்குத் தயாராகும் டி.டி.வி.தினகரன்!

கொரோனா அச்சுறுத்தலாலும், மகளின் திருமண ஏற்பாடுகளாலும் அரசியல் நடவடிக்கைகளைப் பெருமளவு குறைத்துக்கொண்ட அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தற்போது தீவிரமாக்கியிருக்கிறாராம்.

தினகரன் - அ.தி.மு.க
தினகரன் - அ.தி.மு.க

ஜனவரி மாதத்துக்குப் பிறகு, நான்கு கட்டங்களாக வேன் பிரசாரத்தை வைத்துக்கொள்ள ரூட் மேப் போட்டிருக்கிறார் என்கிறார்கள். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுக் கூட்டங்களை மாவட்டவாரியாக அ.ம.மு.க-வினர் நடத்திவருகிறார்கள். ஜெயலலிதாவின் நினைவுநாளான டிசம்பர் 5-ம் தேதிக்குப்(இன்று) பிறகு, ஜரூராக தினகரன் அரசியல் பணிகளை ஆரம்பித்துவிடுவார் என்கிறது அ.ம.மு.க வட்டாரம்.

#தூக்கம் கலைஞ்சுடுச்சுபோல!

அடுத்த கட்டுரைக்கு