Published:Updated:

டெல்லி டூர் மாப்பிள்ளை... தமிழக அக்கறை ரஜினி..! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் சிணுங்கியது. ‘மெயிலில் சில தகவல்களை அனுப்பியிருக்கிறேன்’ என்றது தகவல்.

டெல்லி டூர்... கலக்கும் மாப்பிள்ளை!

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான நிதி திரட்டும் படலம், தி.மு.க-வில் தீவிரமாக நடக்கிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தரப்பு, வடமாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களை அணுகிவருகிறது. டெல்லி செல்லும்போதெல்லாம், மாமனார் ஸ்டாலின் பாணியில் சைக்கிளில் வலம்வருகிறாராம் சபரீசன். இந்தியா கேட் அருகே சைக்களில் நின்றபடி சபரீசன் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் களைகட்டுகின்றன.

டெல்லி டூர் மாப்பிள்ளை... தமிழக அக்கறை ரஜினி..! கழுகார் அப்டேட்ஸ்

``சத்தமில்லாம விஷயத்தை முடிக்கச் சொன்னா, இப்படி போட்டோ போட்டு விளம்பரப்படுத்திக்கிறாரே... தேர்தல் முடியுற வரைக்கும் மாப்பிள்ளையை அடக்கமா இருக்கச் சொல்லுங்க’’ என்று கட்சியின் சீனியர்கள் சிலர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், அடங்க மறுக்கிறாராம் மாப்பிள்ளை.

மாப்பிள்ளை ஜோர்... மாமா உஷாரு!

``பெட்டி பெட்டியா அள்ளலாம்!’’
ஒலை அனுப்பிய திருச்செந்தூர் உடன்பிறப்புகள்

திருச்செந்தூர் தி.மு.கழக எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணனிடம் உதவியாளராக இருப்பவர் உமரி சங்கர். தூத்துக்குடி மாவட்டத்தில் `உமரியார்’ என்று அழைக்கப்படும் இவரது ஆட்டம், கட்டுக்குள் அடங்காமல் போவதாக தலைமை வரை புகார் பாய்ந்திருக்கிறது. அனிதா மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமான ஒரு பிரமுகரின் பெயரைப் பயன்படுத்தி, `உனக்கு சீட் வாங்கித் தர்றேன், பொறுப்பு வாங்கித் தர்றேன்’ என்று `காரியங்களை’ கனகச்சிதமாக சாதித்துக்கொள்கிறாராம் ‘உமரியார்.’

உமரி சங்கர்
உமரி சங்கர்

அனிதா மாவட்டச் செயலாளராக இருக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற நியமனங்கள் மற்றும் பரிமாற்றங்களைப் பட்டியலிட்டிருக்கும் எதிர்க் கோஷ்டியினர், `உமரியாருக்குச் சொந்தமான இடத்துல வருமான வரித்துறை சோதனை நடந்தா, பெட்டி பெட்டியா அள்ளலாம். அந்த அளவுக்குச் சேர்த்துட்டாரு. தேர்தல் நெருக்கத்துல இது கட்சிக்கு நல்லது இல்லை’ என்று தலைமைக்கு ஓலை அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும், உதவியாளரை விட்டுக்கொடுக்காமல், ‘இது எதிர்க் கோஷ்டியின் சிண்டு முடிகிற வேலை’ என்று அனிதா தரப்பு விளக்கமளித்திருக்கிறது.

அதானே... யாருக்காக செய்யறாரு உமரியார்!

சீமானுக்கு எதிராக கரு.பழனியப்பன்?

2016 சட்டமன்றத் தேர்தலில், கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் சீமான், 12,497 வாக்குகளைப் பெற்றார். இந்த முறை தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த அவர், காரைக்குடி தொகுதியில் களமிறங்கப் பரிசீலித்தாராம். இப்போது அந்தத் திட்டமும் கைவிடப்பட்டு, சென்னையில் குறைவான வாக்காளர்களைக்கொண்ட ஆலந்தூர் தொகுதியில் களமிறங்குவது குறித்துப் பரிசீலித்துவருவதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் கரு.பழனியப்பன்
இயக்குநர் கரு.பழனியப்பன்

இந்தச் சூழலில், ‘சீமான் எங்கு போட்டியிட்டாலும், அங்கே அவருக்கு எதிராக திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பனைக் களமிறக்கலாமா?’ என்று தி.மு.க தலைமை ஆலோசித்துவருவதாகச் சொல்கிறார்கள். தி.மு.க இளைஞரணி நடத்தும் `பொய்ப்பெட்டி’ நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கலந்துவருகிறார் கரு.பழனியப்பன். இந்தத் தொடர்பில்தான் அவரை பரிசீலிக்கிறதாம் கட்சித் தலைமை.

பொய்ப்பெட்டியில் சாதிப்பவர், வாக்குப்பெட்டியிலும் சாதிப்பாரா?!

கமலாவுக்கு வாழ்த்து!
கழகங்கள் கலக்கல்...

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, திருவாரூர் மாவட்டத்தில் அவரது தாய்வழித் தாத்தாவின் பூர்வீக கிராமமான பைங்காநாடு துளசேந்திரபுரம் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. கிராம மக்கள் மட்டுமல்லாமல், கழகங்களும் கலக்கலாக அரசியல் செய்யத் தொடங்கிவிட்டன. உள்ளூர்க்காரர்கள் சிலர் பட்டாசு வெடிக்கத் தயாரானபோது, ‘தி.மு.க மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் வந்த பிறகு வெடிச்சிக்கலாம்’ என்று தி.மு.க பிரமுகர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். கலைவாணன் வருவதற்குள், அமைச்சர் காமராஜ் தன் பரிவாரங்களுடன் வந்துவிட்டார்.

டெல்லி டூர் மாப்பிள்ளை... தமிழக அக்கறை ரஜினி..! கழுகார் அப்டேட்ஸ்

கமலா ஹாரிஸின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ததுடன், ஏதோ அவரே அமெரிக்க துணை அதிபராக ஜெயித்ததுபோல மக்களிடம் உற்சாகமாகக் கையசைத்தார். அப்போது கட்சியினர் சிலர், ``அண்ணே... கமலா அம்மாவை இங்கே அழைச்சுட்டு வாங்க’’ என்று வெள்ளந்தியாகக் கேட்க... அமைச்சரும், ``அழைச்சுட்டு வரலாம்தான்... ஆனா, பாதுகாப்புப் பிரச்னைகள் இருக்கு... அதான் யோசிக்கிறேன்” என்று ஒரே போடாகப் போட... தொகுதி மக்கள் வாயடைத்துப்போனார்கள்.

டெல்லி டூர் மாப்பிள்ளை... தமிழக அக்கறை ரஜினி..! கழுகார் அப்டேட்ஸ்

அவர் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார் பூண்டி கலைவாணன். கமலாவின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றவர், ஏதோ கமலாவுக்கே மலர்க்கொத்து கொடுப்பதுபோல கோயில் அறங்காவலருக்கு மலர்க்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு அவர் பேசியதுதான் ஹைலைட். ``பெண்ணுரிமைக்காக போராடிய பெரியாரின் சீடரான கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றிருப்பது கூடுதல் சிறப்பு’’ என ஒரே போடாகப் போட்டார். இந்த விஷயம் ட்ரம்ப்புக்குத் தெரிஞ்சா கொதிச்சுப்போயிடுவாருல்ல...

எதிர்க் கோஷ்டிங்க அவருக்கு ஓலை அனுப்புங்கப்பா!

`செந்தில்நாதனை ஓரங்கட்டியது எம்.ஆர்.விஜயபாஸ்கரா?’

அ.தி.மு.க-வில் செந்தில்நாதன் வசமிருந்த இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் கரூர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. `கட்சியை வளர்த்ததற்கு இதுதான் பரிசா?’ என்று புலம்பும் செந்தில்நாதன் தரப்பு, `போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் இதற்கெல்லாம் காரணம். செந்தில்நாதன் பொறுப்பில் இருந்தால், வரும் தேர்தலில் அவருக்கு கரூரிலோ, அரவக்குறிச்சியிலோ போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

டெல்லி டூர் மாப்பிள்ளை... தமிழக அக்கறை ரஜினி..! கழுகார் அப்டேட்ஸ்

செந்தில்நாதன் ஜெயித்துவிட்டால், தனக்குப் போட்டியாக இருப்பார் என்கிற பயத்தில்தான் அவரை அமைச்சர் ஓரங்கட்டிவிட்டார்’ என்கிறது. `சொந்தக் கட்சிக்காரர்களையே எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து கட்டம் கட்டிவருவதால், வரும் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க ஒரு தொகுதியில்கூட கரைசேராது’ என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள்.

செந்தில்நாதனுக்கு செலவு மிச்சம்னு சொல்லுங்க!

`தமிழகத்தின் பிரச்னைகள் என்னென்ன?’
விவாதிக்கும் ரஜினி!

கட்சியைத் தொடங்க மாட்டார் என்று பலரும் சொல்லிவரும் நிலையில், சில நாள்களுக்கு முன்னர் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்துப் பேசியிருக்கிறார் ரஜினி. அவர்களில் ஓய்வுபெற்ற சில சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அடக்கம். வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, சமூகநலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில் அனுபவம் வாய்ந்த அந்த அதிகாரிகளிடம் தமிழகத்தின் தலையாய பிரச்னைகள் குறித்து ரஜினி விவாதித்திருக்கிறார்.

Rajini
Rajini

`வர்ற எலெக்‌ஷன்ல எந்தப் பிரச்னை பேசுபொருளா இருக்கும்... எதை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்யலாம்?’ என்று கேட்டாராம். `எதற்காக இவர் இப்படிக் கேட்கிறார்’ என்று புரியாமல் அவர்களும் தங்கள் கருத்துகளைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். பாவம்... அவரும் சுவத்தையே எவ்வளவு நேரம் பார்த்துக்கிட்டிருப்பாரு...

அவருக்கும் பொழுதுபோகுணுமில்ல!

சிவகங்கை சீமையில் பதவி படுத்தும் பாடு!

சிவகங்கை அ.தி.மு.க நகரச் செயலாளர் ஆனந்த், சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார். தற்போது காலியாக இருக்கும் நகரச் செயலாளர் பதவிக்கு சிவகங்கையில் கடும்போட்டி நிலவுகிறது. பதவிக்காக, மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனையும், அமைச்சர் பாஸ்கரனையும் நிர்வாகிகள் முட்டி மோதுகின்றனர். சின்னக் கூட்டம் என்றாலும்கூட மெனக்கெட்டு ஆடம்பரமாகச் செலவு செய்கின்றனர்.

`தொகுதி மாறும் தினகரன் முதல் ஜெர்க் ஆன டி.ஆர்.பாலு வரை...!’ - கழுகார் அப்டேட்ஸ்

இதைப் பயன்படுத்திக்கொள்ளும் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும், ``அவங்க செலவு செய்யட்டும்ய்யா... தேர்தலுக்கு நமக்கு விளம்பரமாகவும் ஆச்சுல்ல?’’ என்று சொல்லிச் சிரிக்கிறார்களாம். `நகரச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு, இப்படித் தரைமட்ட லெவலுக்கு வேலை செய்ய வேண்டியதாகிவிட்டதே...’ என்று புலம்பித்தீர்க்கிறது அ.தி.மு.க வட்டாரம். சும்மாவா...

‘அம்மா’ இருக்கும்போது வானத்தைப் பார்த்து வணக்கம்வெச்ச கோஷ்டியாச்சே!

தினகரனை ஒதுக்குகிறாரா சசி?

அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நவம்பர் 12-ம் தேதியன்று கும்பகோணம் ஸ்டெர்லிங் ரிசார்ட்டில் நடக்கவிருக்கிறது.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இது சம்பந்தமான நிகழ்வுகளில் மணமகளின் தாய்மாமனான டாக்டர் வெங்கடேஷின் தலை தென்படுவதில்லை. விசாரித்தால், `சமீப நாள்களாகவே தினகரனுடன் வெங்கடேஷ் அதிகம் பேசுவதில்லை. தினகரன் தரப்பை ஓரங்கட்டுகிறார் சசிகலா.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா சொல்லியனுப்பும் முக்கியப் பணிகளை வெங்கடேஷ்தான் செய்து தருகிறார்’ என்கிறார்கள்.

டாக்டர் அடுத்த ஆபரேஷனுக்கு ரெடின்னு சொல்லுங்க!

அடுத்த கட்டுரைக்கு