Published:Updated:

ஆளுங்கட்சியின் ஆபீஸ் ரூம் கவனிப்பு.. கொடைக்கானலில் தயாராகும் இறுதிப்பட்டியல்..! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

கழுகாரிடமிருந்து அழைப்பு வந்தது. “தலைமைச் செயலகம் வரை சென்றுவருகிறேன்... மெயில் செக் செய்யவும்’ என்றபடி அலைபேசியை கட் செய்தார். வேறென்ன... செய்திகளை அள்ளித் தெளித்திருந்தார் கழுகார்.

‘ஆபீஸ் ரூம்’ கவனிப்பு!
அலறும் ஆளுங்கட்சிப் புள்ளிகள்...

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, தேர்தல் முடிந்த பிறகும் ஸ்வீட் பாக்ஸ் பஞ்சாயத்துகள் முடியவில்லை. தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு வந்த ஸ்வீட் பாக்ஸ்கள் சிலவற்றில் லோக்கல் அ.தி.மு.க-வினர் சிலர், ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்று விளையாடியிருக்கிறர்கள். இதனால்தான் அந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது என்று ஆளுங்கட்சி மேலிடம் கொதித்திருக்கிறது.

ஆளுங்கட்சியின் ஆபீஸ் ரூம் கவனிப்பு.. கொடைக்கானலில் தயாராகும் இறுதிப்பட்டியல்..! கழுகார் அப்டேட்ஸ்

இது தொடர்பாக கட்சித் தலைமை விசாரணையில், ஹோட்டல் அறைக்கு அழைக்கப்பட்ட சில நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்தின் ‘சிவாஜி’ பட பாணியில் பலமான ‘ஆபீஸ் ரூம்’ கவனிப்பு இருந்ததாம். எடுத்ததைத் திருப்பிக் கொடுக்கும் வரை ‘ஆபீஸ் ரூம்’ கவனிப்பு தொடரும் என்கிற செய்தி பரவுவதால், ஸ்வீட் பாக்ஸை நோண்டிய அ.தி.மு.க-வினர் பலரும் பீதியில் இருக்கிறார்கள்.

உப்பு மட்டுமல்ல... அதிகமா ஸ்வீட்டைத் தின்னாலும் தண்ணி குடிக்கணும்!

மிரட்டிய எடப்பாடி?
பம்மிய அதிகாரிகள்...

சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். அப்போது எடப்பாடி, “இங்கே பாருங்க 130 தொகுதிகள் லிஸ்ட். இந்தத் தொகுதிகளிலெல்லாம் அ.தி.மு.க-தான் ஜெயிக்கப் போகுது. மீண்டும் நாமதான் ஆட்சியமைக்கப்போறோம். அது தெரியாம சில அதிகாரிங்க ஸ்டாலின்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. நம்ம ஆட்சி அமைஞ்சதும் வெச்சுக்கிறேன் கச்சேரியை” என்றாராம்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ‘ஸ்கூல்’ அதிகாரியும், ‘ஆட்டக்கார’ அதிகாரியும் சில நாள்களுக்கு முன்னதாகத்தான் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். இதனால், ‘தங்களை மோப்பம் பிடித்துத்தான் எடப்பாடி மிரட்டுகிறாரோ?’ என்று பயந்துபோன அவர்கள் இருவரும், ‘சார், நீங்கதான் மறுபடியும் வரணும். அப்பதான் நல்ல நிர்வாகம் இருக்கும்’ என்று வெளறிப்போன முகத்துடன் எடப்பாடியிடம் சொல்லிவிட்டு வந்தனராம்.

பாட்டாவே பாடிட்டாங்கனு சொல்லுங்க!

இழுத்து மூடப்படும் ஊழல் வழக்குகள்...
தி.மு.க-விடம் போட்டுக்கொடுத்த அதிகாரி!

`தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்’ என்று தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போல, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் தி.மு.க சார்பில் அவ்வப்போது அமைச்சர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டுவந்தன. இந்தச் சூழலில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் அமைச்சர்கள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்களை இழுத்து மூடும் வேலையைச் சில அதிகாரிகள் செய்வதாக தி.மு.க தரப்புக்குத் தகவல் கசிந்திருக்கிறது. இந்தத் தகவலை துறையின் மேல்மட்ட பொறுப்பிலிருக்கும் உயரதிகாரி ஒருவரே தி.மு.க-வுக்கு பாஸ் செய்தாராம். உஷாரான தி.மு.க தரப்பு, உடனடியாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்குக் கடிதம் அனுப்பிவிட்டது.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

அதில், ‘தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு அமையும் வரை தி.மு.க அளித்திருக்கும் புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். ஆளுங்கட்சியின் அழுத்தத்துக்கு அடிபணியாதீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தி.மு.க-விடமிருந்து ஓலை வந்ததால், வழக்குகளை மூடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலர் ஜகா வாங்கிவிட்டார்களாம்.

உஷாரய்யா உஷாரு... ஓரம் சாரம் உஷாரு!

மகன், மருமகன் ‘கோட்டா’...
கொடைக்கானலில் தயாராகும் இறுதிப்பட்டியல்

தேர்தல் முடிந்தவுடன் வெளிநாடு டூர் கிளம்பும் ஐடியாவிலிருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினின் குடும்பத்தினர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தைத் தள்ளிவைத்தனர். இந்தநிலையில், ‘உள்ளூர்லேயே எங்காச்சும் போயிட்டு வரலாமே’ என்று துர்கா ஸ்டாலின் கேட்டிருக்கிறார். அதன் பிறகே, கொடைக்கானலை டூர் ஸ்பாட்டாக குடும்பத்தினர் தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஏப்ரல் 19-ம் தேதி வரை கொடைக்கானலில் தங்கியிருக்கும் ஸ்டாலின் மகன், மருமகன் இருவரையும் நேரில் அமரவைத்து அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். கூடவே துர்காவும் இருப்பாராம். மகன், மருமகன் இருவருமே ஆளுக்கொரு லிஸ்ட்டுடன் வலம்வருவதால் நேருக்கு நேர் அமரவைத்து பேசி முடிவெடுத்தால், இந்தப் பிரச்னைக்கு தீர்வுகண்டுவிடலாம் என்று கிச்சன் மேடம்தான் ஐடியா கொடுத்தாராம்.

ஆளுக்கொரு லிஸ்ட்... ஸ்டாலினுக்கு ஆசிட் டெஸ்ட்!

கொரோனா பயம்
பீதியில் அமைச்சர்!

தொகுதியில் தீவிரமாக வலம்வந்த அமைச்சர் சி.வி.சண்முகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதுங்கிவிட்டனராம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், தனது சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை வார்டு வாரியாக தனியார் ஏஜென்சியை வைத்து எடுத்திருக்கிறார்.

அதிமுக தொண்டர்கள்
அதிமுக தொண்டர்கள்

இந்த முடிவுகளை பெங்களூரில் வைத்து ஆய்வு செய்த அந்த ஏஜென்சி, முடிவுகளை ‘பவர் பாயின்ட்’ முறையில் விளக்குவதற்காக அமைச்சரைச் சந்திக்க அவரது வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறது. ‘கர்நாடகா முதல்வருக்கே இரண்டாவது தடவை கொரோனா வந்துடுச்சு. என் தேர்தல் ரிசல்ட் எப்படிப் போனாலும் பரவாயில்லை. தயவு செஞ்சு நேர்ல வந்துடாதீங்க. எதுவா இருந்தாலும் மெயில் பண்ணிடுங்க’ என்று பதறிவிட்டாராம் அந்த அமைச்சர். கடைசியில், அவரது தொகுதி சம்பந்தப்பட்ட முடிவுகளை மெயில் செய்திருக்கிறார்கள். அதை எப்படிப் பகுத்துப் பார்ப்பது என்பது தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாராம் அந்த அமைச்சர்.

அந்த பயம் இருக்கட்டும்!

ஆள் பிடிக்கும் ஐ.பி.எஸ்-கள்
கடுப்பில் அ.தி.மு.க அதிகாரிகள்!

எம்.எல்.ஏ ஒருவரிடம் முறைத்துக்கொண்டு முஷ்டியை முறுக்கிய ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியும், தென்மாவட்டத்தில் பணியாற்றியபோது சர்ச்சைகளில் சிக்கிய ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரும் தி.மு.க-வுக்கு சார்பான இளம் காவல்துறை அதிகாரிகளை ஒன்று திரட்டிவருகிறார்களாம். ‘தி.மு.க வாரிசு பிரமுகர் நம்ம பக்கம்தான் இருக்கிறார். நாங்கள் இருவருமே உளவுத்துறை அல்லது சென்னை பெருநகர காவல்துறையில் முக்கிய இடங்களில் அமரப்போகிறோம். உங்களுக்கும் உரிய மரியாதையைப் பெற்றுத் தருகிறோம்’ என்று இவர்கள் வலைவிரிப்பது, அ.தி.மு.க சார்புள்ள காக்கிகள் வட்டாரத்தை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. இவர்கள் இருவரையும் பற்றி, முன்னாள் உளவுத்துறை அதிகாரி மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு ரகசிய ரிப்போர்ட் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

உளவுத்துறையில பிளவு ஏற்படுத்திடாதிங்கப்பு!

தினகரனை எச்சரித்த சசிகலா!

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் திருமணம், ஜூன் 13-ம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் நடைபெறவிருக்கிறது. திருமணத்தை சசிகலா முன்னின்று நடத்திவைக்கிறார். இதையொட்டி, உறவுகளுக்கு திருமணப் பத்திரிக்கை வைக்க வேண்டியிருப்பதால், டெல்டாவில் ஒரு மினி சுற்றுப் பயணத்துக்கு தினகரன் தயாரானாராம்.

சசிகலா
சசிகலா
ம.அரவிந்த்

உடனடியாக அவரது லைனுக்கு வந்த சசிகலா, ‘கொரோனா நேரத்துல ஏன் தேவையில்லாம வெளியே சுத்துற... எல்லாருக்கும் தபால்லயே பத்திரிகையை அனுப்பிட்டு, போன்ல பேசு போதும். முக்கியமானவங்களுக்கு மட்டும் நேர்லவெச்சுக்கலாம். கல்யாணத்தை பக்கத்துலவெச்சுக்கிட்டு விலைகொடுத்து வினையை வாங்கக் கூடாது’ என்று எச்சரித்தாராம்.

அதானே!

அடுத்த கட்டுரைக்கு