Election bannerElection banner
Published:Updated:

சசிகலாவுக்கு ஜோசியர் அட்வைஸ் முதல் சண்முகத்துக்காக சமரசம் பேசிய வைத்தி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

“புதுச்சேரிக்குச் செல்கிறேன். மெயில் செக் செய்யவும்” என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தார் கழுகார்...

திருவள்ளூர் மாவட்ட ரகளை
ஆர்.எஸ்.பாரதி மீது புகார்!

தி.மு.க-வில் கட்சிரீதியாக திருவள்ளூர் மாவட்டம் கிழக்கு, மேற்கு, மத்தி என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக, ‘ராகவரெட்டிமேடு ஒன்றியப் பிரதிநிதி ரமேஷ் என்பவருக்கு மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவர் பதவி அளிக்க வேண்டும்’ என்று தலைமைக்கு கோவிந்தராஜன் பரிந்துரைக் கடிதம் அனுப்பினாராம். இந்தக் கடிதம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கே செல்லாமல், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

ஒன்றியக்குழுத் தலைவர் பொறுப்பை, முன்னாள் மாவட்டச் செயலாளர் வேணுவின் மகன் ஆனந்துக்கு பெற்றுத் தர ஆர்.எஸ்.பாரதி காய்நகர்த்துகிறாராம். இதனால், கோவிந்தராஜன் கடும் அப்செட்டில் இருக்கிறார். கோவிந்தராஜன் மட்டுமல்லாமல் திருவள்ளூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் பலரும், தங்கள் மாவட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி அத்துமீறி ஆதிக்கம் செலுத்துவதாகப் புலம்புகிறார்கள்.

ஆர்.எஸ்-க்கு எதிராக கோரஸ்!

மயிலாடுதுறையைக் குறிவைக்கும் ம.தி.மு.க

மயிலாடுதுறைத் தொகுதியில் தி.மு.க உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடுவதால், இந்த முறை தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிடலாம் என்று ஐபேக் ஐடியா கொடுத்திருக்கிறதாம். இந்த விவரம் அரசல் புரசலாக லீக் ஆனவுடன், காங்கிரஸ் கட்சியும், ம.தி.மு.க-வும் தொகுதியைக் கைப்பற்ற கடுமையாக மோதுகிறார்கள்.

வைகோ - ம.தி.மு.க
வைகோ - ம.தி.மு.க

தொகுதியைத் தனது கட்சிக்கு ஒதுக்கும்படி வைகோவே நேரடியாக ஸ்டாலினிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. தொகுதி கையைவிட்டுச் செல்லும் வாய்ப்பு இருப்பதால், லோக்கல் மயிலாடுதுறை தி.மு.க புள்ளிகள் அரண்டுகிடக்கிறார்கள்.

வடை போச்சா!

சசிகலா மெளனம்...
பிப்ரவரி 17-க்குப் பிறகு கலையுமா?

சிறையிலிருந்து விடுதலையாகி தமிழகம் வந்ததிலிருந்து சசிகலா அமைதியாக இருக்கிறார். அதற்கு ஜோதிடர் ஒருவர் கொடுத்த அட்வைஸ்தான் காரணம் என்று மன்னார்குடி வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசிக்காரான சசிகலாவுக்கு பிப்ரவரி 17-ம் தேதிக்குப் பிறகுதான் நல்ல நேரம் ஆரம்பிக்கிறது.

சசிகலா
சசிகலா

அதன் பிறகு அரசியல்ரீதியிலான சந்திப்புகளை வைத்துக்கொள்ளும்படி அந்த ஜோதிடர் கட்டங்களைக் கணித்துப் பார்த்துச் சொல்லியிருக்கிறாராம். அதேசமயம், மோடியும் தமிழகம் வந்து சென்றிருப்பதால், `இப்போதைக்கு எந்த அதிரடியும் வேண்டாம். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை நீதிமன்றம் மூலம் பெற்ற பிறகு, நமது கச்சேரியை வைத்துக்கொள்ளலாம்’ என்பதுதான் சசிகலாவின் எண்ணமாம்.

ஜோசியரைக் கட்டம் கட்டாம இருந்தா சரி!

தூத்துக்குடி அ.தி.மு.க கோஷ்டிப்பூசல்!
சாதகமாக்கிக்கொள்ளும் பா.ஜ.க.

தூத்துக்குடி அ.தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் சத்தம் காதைக் கிழிக்கிறது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்க அமைச்சர் செல்லப்பாண்டியன் முயல்கிறார். ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தரப்பினர் ‘தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை’ என்று கூறி, தொகுதியை பா.ஜ.க-வுக்குத் தள்ளிவிட காய்நகர்த்துகிறார்களாம்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

இதையறிந்து செல்லப்பாண்டியன் தரப்பினர் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். இவர்கள் கோஷ்டிப்பூசலை தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட பா.ஜ.க-வின் சசிகலா புஷ்பா, தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்க டெல்லி மேலிடம் மூலம் எடப்பாடி தரப்பிடம் பேசிவருகிறாராம். ஜெயலலிதாவையே நேரடியாக எதிர்த்தவர் என்பதால் யோசிக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

எத்தனை சசிகலாவைத்தான் சமாளிப்பாரு எடப்பாடி!

சண்முகத்துக்காக சமரசம் பேசிய வைத்தி!

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, டெல்டா மாவட்டங்களிலுள்ள ஒரு சமூகத்தினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தஞ்சையைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, தமிழ்நாடு முழுவதும் முக்குலத்தோர் இயக்கங்களை ஒருங்கிணைத்து தஞ்சாவூரில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
ம.அரவிந்த்

இந்தத் தகவல் மாநிலங்களவை எம்.பி வைத்திலிங்கத்தின் கவனத்துக்குச் சென்றதும், பதறிப்போய்விட்டாராம். உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்பினரிடம் பேசிய வைத்திலிங்கம், ``எனக்காக இதை அமைதியா விட்டுடுங்க. சி.வி.சண்முகத்தை வருத்தம் தெரிவிக்கவைக்கிறேன்’’ என்று சமாதானம் செய்திருக்கிறார். இதையடுத்தே சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்ததால், போராட்டமும் கைவிடப்பட்டதாம்.

`பழரசம்’ பிரச்னைக்குச் சமரசம்னு சொல்லுங்க!

பத்து பவுன்ஸர்ஸ்
ரவுசு கட்டும் ஜெய் ஆனந்த்!

திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் எங்கு சென்றாலும், அவரது காருக்கு பின்னால் இரண்டு கார்கள் பாதுகாப்புக்காகப் பின்தொடர்கின்றனவாம். சஃபாரி உடையணிந்த பத்து பவுன்சர்ஸ் டீம் இப்படி உடன் செல்வதால், உறவினர்களின் வீடுகளுக்கு அவர் விசிட் அடிக்கும்போது, ரத்த உறவினர்களே முகம் சுளிக்கிறார்களாம். ``தஞ்சாவூரில் வசித்துவந்த சசிகலாவின் அண்ணன் மகன், மறைந்த மகாதேவன் இப்படித்தான் ஆடம்பரமாக வலம்வந்தார்.

சசிகலாவுக்கு ஜோசியர் அட்வைஸ் முதல் சண்முகத்துக்காக சமரசம் பேசிய வைத்தி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

இதனால்தான், கடைசிவரை மகாதேவனை போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. இன்று மினி மகாதேவனாக ஜெய்ஆனந்த் வலம்வருகிறார். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ?” என்று புலம்புகிறார்கள் மன்னார்குடி உறவுகள்.

பாசத்துக்காக போறாரா, பந்தாகாட்ட போறாரா!

கூட்டுறவுத்துறைக்கு வேட்டு?

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைக்கு 2,500 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதற்காக 5,604.84 கோடி ரூபாயை, நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து கூட்டுறவு வங்கிகளிலுமுள்ள டெபாசிட் இருப்புத் தொகையை, பரிசுத் தொகுப்பு திட்டத்துக்குத் திருப்பிவிட்டிருக்கிறார்களாம். இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலுக்கு எதிரானது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கூட்டுறவு வங்கிகளிலுள்ள மக்களின் பணத்தில் அரசியல்வாதிகள் இப்படிக் கைவைத்துவிடுகிறார்கள் என்பதால்தான், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு நடத்திவருவது தனிக்கதை. இப்படிப் பணத்தை மடைமாற்றியதால், கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் தொகை முதிர்வடைந்தவர்களுக்குப் பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தநிலையில்தான் தற்போது 12,110 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது தமிழக அரசு. அதைச் சரிக்கட்ட மீண்டும் கூட்டுறவு வங்கிகளின் டெபாசிட் இருப்பில் கைவைக்கலாமா என்று தமிழக அரசு யோசிக்கிறதாம். மொத்ததில், `இந்த ஆட்சி முடிவதற்குள் கூட்டுறவுத்துறைக்கு பூட்டு போட்டுவிடுவார்கள்’ என்று பதறுகிறது கூட்டுறவுத்துறை வட்டாரம்.

கூட்டுறவே `ஓட்டுயர்வு’னு நினைச்சிட்டாங்களோ!

சிக்கிய ஆடியோ...
சிக்கலில் வனத்துறை

மசினகுடியில் காட்டுயானைக்குத் தீவைத்த வீடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நாட்டையே கொந்தளிக்கவைத்தது. அந்த நிகழ்வு தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் பேசிய செல்போன் பேச்சின் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

யானை
யானை

விடுதித் தரப்பில் தொடர்புகொண்ட வனத்துறை அதிகாரிகள் சிலர், `விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள். மேலும், விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் எடுத்திருந்த வீடியோவையும் வனத்துறை அதிகாரிகள் வாங்கி அழித்திருக்கிறார்களாம். விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள்.

தீ பரவட்டும்!

புகழேந்திக்கு ஜாக்பாட்!

சசிகலாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பெங்களூரு புகழேந்திக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்து விவரங்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குளிலுள்ள ப்ளஸ் மைனஸ் அனைத்தும் அத்துபடி என்கிறார்கள். இதனால்தான், அவரை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவந்து, கழகச் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பையும் அளித்து பக்கத்திலேயே வைத்திருந்தார் முதல்வர் பழனிசாமி.

புகழேந்தி
புகழேந்தி

தற்போது சசிகலா வெளியே வந்திருக்கும் நிலையில், பழைய விசுவாசத்தில் அவரிடம் புகழேந்தி சென்றுவிடக் கூடாது என்பதற்காக, புகழேந்திக்கு அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறதாம். சசிகலா வரவு புகழேந்திக்கு ஜாக்பாட்டாக அமைந்துவிட்டது என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

பதவி, புகழ் எதுவுமே நிரந்தரமில்லைங்க!

``கூட்டத்துல ஜிகினா இல்லையே!”
சிக்கலில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ...

செங்கல்பட்டு தி.மு.க எம்.எல்.ஏ வரலட்சுமியின் கணவர் மதுசூதனன் மீதும், மதுசூதனனின் அண்ணன் சந்தானத்தின் மீதும் ஏகப்பட்ட புகார்கள் அறிவாலயத்தில் குவியத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில், கழக நிர்வாகி ஒருவர் திருமணப் பத்திரிக்கை வைக்க எம்.எல்.ஏ வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பால்கனியிலிருந்தபடியே, `அம்மாவை பார்க்க முடியாது. பத்திரிகையை டேபிள்லவெச்சுட்டுப் போய்யா...’ என்று கூறி அனுப்பிவிட்டாராம் மதுசூதனன். அழைப்பிதழ் கொடுக்கச் சென்றவர் நொந்துபோய்த் திரும்பியிருக்கிறார்.

முதல்வரை எச்சரித்த ஓ.எஸ்.மணியன் முதல் அழகிரியை உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் உத்தரவுப்படி கிராமசபைக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் தண்டபாணி என்பவர் ஏற்பாடுகள் செய்திருக்கிறார். இந்தக் கூட்டத்துக்கு வந்த மதுசூதனின் அண்ணனும், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான சந்தானம், `என்னய்யா ஏற்பாடு பண்ணிவெச்சிருக்க... ஒரு ஜிகினா வேண்டாமா, கூட்டம் ஜவ்வடிக்குது...’ என்று சலித்துக்கொண்டாராம். கிராமசபைக் கூட்டத்தில் என்ன ஜிகினா ஏற்பாடுகளைச் செய்வது என்று புரியாமல் சீனியரான தண்டபாணி புலம்பியிருக்கிறார். ``இதெல்லாம் செங்கல்பட்டு தொகுதியில் சீட்டுக்காகக் காய்நகர்த்தும் எதிர்த் தரப்பினரின் உள்ளடி வேலைகள்” என்று வரலட்சுமி மதுசூதனன் தரப்பு பொங்கினாலும், விசாரணையை ஆரம்பித்திருக்கிறது அறிவாலயம்.

பால்கனி அரசியல் பாழாப்போகும்னு தெரியாதா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு