Published:Updated:

`எடப்பாடி பக்கம் திரும்பும்`வாளையார்' மனோஜ் முதல் சசிகலாவின் சமாதான முயற்சி வரை'- கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

கழுகாரிடமிருந்து அழைப்பு வந்தது... ``வாட்ஸ்அப்பிலேயே தகவல்களை அனுப்புகிறேன். எடுத்துக்கொள்ளும்’’ என்றபடி இணைப்பைத் துண்டித்தார். நொடிகளில் வாட்ஸ்அப்பை நிறைத்தன செய்திகள்!

`எடப்பாடி பக்கம் திரும்பும்`வாளையார்' மனோஜ் முதல் சசிகலாவின் சமாதான முயற்சி வரை'- கழுகார் அப்டேட்ஸ்!

கழுகாரிடமிருந்து அழைப்பு வந்தது... ``வாட்ஸ்அப்பிலேயே தகவல்களை அனுப்புகிறேன். எடுத்துக்கொள்ளும்’’ என்றபடி இணைப்பைத் துண்டித்தார். நொடிகளில் வாட்ஸ்அப்பை நிறைத்தன செய்திகள்!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
``ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்!’’
சசிகலா எடுத்த சமாதான முயற்சி

பன்னீரின் மனைவி மறைவுக்கு சசிகலா, தினகரன் ஆகியோர் நேரில் சென்று பன்னீருக்கு ஆறுதல் கூறிய பிறகு அ.தி.மு.க-வில் தனக்குச் சாதகமான சூழல் கனியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாராம் சசிகலா. இதற்கிடையே தனது குடும்பத்தில் திவாகரனும் தினகரனும் எதிரும் புதிருமாக இருப்பதை சசிகலா விரும்பவில்லை. அதனால், இருவருக்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சிகளை அவர் மேற்கொண்டுவருகிறார் என்கிறார்கள் குடும்ப உறவுகள் சிலர்.

சசிகலா - பன்னீர்செல்வம்
சசிகலா - பன்னீர்செல்வம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் தினகரன் மகளின் திருமணப் பத்திரிகை சசிகலா தரப்பிலிருந்து திவாகரனுக்குக் கொடுக்கப்பட்டு, திருமணத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது சசிகலாவிடம், ``என் மகன் கல்யாணத்துக்கு தினகரன் வரலை. நான் மட்டும் அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வரணுமாக்கும்...’’ என்று திவாகரன் முரண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கு சசிகலா, ``நமக்குள்ள சண்டை போட்டுக்கிட்டிருந்தா இழப்புகள்தான் அதிகமாகும். முதல்ல நாம ஒற்றுமையா இருக்கணும்’’ என்று சமாதானம் செய்திருக்கிறார். இதையடுத்து, தினகரன் மகள் திருமணத்துக்கு திவாகரன் என்ட்ரி கொடுப்பார் என்று நம்புகிறார்கள் மன்னார்குடி குடும்ப உறவுகள்!

மலையகத் தமிழர்களை மறந்துபோனாரா
கூடலூர் எம்.எல்.ஏ ஜெயசீலன்?

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக, பிரதான கட்சிகள் சில வேட்பாளராகப் போட்டியிட வைத்தன. அந்தவகையில், மலையகத் தமிழரான ஜெயசீலன் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஜெயசீலன்
ஜெயசீலன்

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் தாயகம் திரும்பிய தமிழர்களையும் பாதிக்கும் என்பதால், கூடலூர் தொகுதியின் மலையகத் தமிழர்கள் பலரும் ஓட்டுப்போட்டு ஜெயசீலனை வெற்றிபெற வைத்தனர். சமீபத்தில், சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராகத் தி.மு.க தீர்மானத்தை நிறைவேற்றியபோது, அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. அப்போது ஜெயசீலனும் வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, ``சி.ஏ.ஏ பிரச்னையில உசுரே போனாலும் நம்ம மக்கள் பக்கம்தான் நிப்பேன்னு சொல்லித்தான் நம்மகிட்ட ஓட்டு வாங்குனாரு. இப்ப லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டலும் பரவாயில்லை... கட்சியும் பதவியும்தான் முக்கியம்னு வெளிநடப்பு செஞ்சுட்டாரு’’ என்று புலம்புகிறார்கள் கூடலூரின் மலையகத் தமிழர்கள். ஜெயசீலனோ, ``கட்சித் தலைமையை எதிர்த்து செயல்பட முடியுமா... அதுவும் கட்சி இப்ப இருக்குற நிலைமையில நான் ஒருத்தன் மட்டும் ஆதரிச்சுப் பேசுனா, நிலைமை வேற மாதிரி ஆகிடும்!’’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துவருகிறாராம்!

பதவிச் சண்டையை சமாளிக்க புது யுக்தி...
குமரி கதர்க் கட்சியில் உருவாகுது புதுப் பதவி!

கன்னியாகுமரி மாவட்டத்தில், பதவிக்காகச் சண்டையிடும் நிர்வாகிகளைச் சமாளிப்பதற்காக புதிய யுக்தியைக் கையிலெடுத்திருக்கிறது காங்கிரஸ் மாநிலத் தலைமை.

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து, நாகர்கோவில் மாநகர், மாவட்டம் என்று விரைவில் அறிவிக்கவிருக்கிறதாம் மாநிலத் தலைமை. இதையடுத்து, மூன்றாவதாக உருவாகவிருக்கும் புதிய மாவட்டத் தலைவர் பதவியைப் பிடிக்க இப்போதே சத்தியமூர்த்தி பவனை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் குமரி மாவட்ட கதர் கட்சிக்காரர்கள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எடப்பாடிக்கு ஆதரவாக `வாளையார்’ மனோஜ்?!

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், `வாளையார்’ மனோஜ் இருவருக்குமே நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்துவிட்டது. இவர்களில் சயானுக்கு மட்டுமே தி.மு.க-வினர் உறுதிமொழிக் கையெழுத்து போட்டு வெளியில் எடுத்து கவனித்துவருகின்றனர். `வாளையார்’ மனோஜ் எடப்பாடிக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்.

வாளையார் மனோஜ்
வாளையார் மனோஜ்

மனோஜின் மனைவியிடம் சில விஷயங்களைப் பேசி முடித்துவிட்டார்கள். மனோஜ் வெளியே வந்தால், எடப்பாடி தரப்புக்குச் சாதகமாகப் பேச நிறைய வாய்ப்பு இருக்கிறது’ என்று உளவுத்துறை ஆட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறதாம். அதனால்தான் மனோஜுக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து இரண்டு மாதங்களாகியும், அவருக்கு உறுதிமொழிக் கையெழுத்து போட யாரும் முன்வரவில்லை என்கிறார்கள் போலீஸ் தரப்பில்!

நெல்லை தி.மு.க உட்கட்சி கோஷ்டிகள்...
வாட்ஸ்அப்பில் வைரலான புலம்பல்!

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பணிகளைக் கவனித்துக்கொண்ட சிலரே தற்போதும் அந்தப் பணிகளில் தொடர்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு நகரத்திலும் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள் அப்படியே இருக்கின்றன. அதேபோன்றதொரு நெல்லை மாவட்ட வாட்ஸ்அப் குழுவில், `ஒவ்வோர் ஊரிலும் கட்சிக்குள் ஏராளமான கோஷ்டிகள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன. ஒருவருக்கு எதிராக ஒருவர் போட்டுக்கொடுப்பதை மட்டுமே இவர்கள் செய்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்த கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல தேர்தலின்போது கட்சிக்கு எதிராக வேலை பார்த்தவர்களுக்கே இப்போது பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. இதேநிலை நீடித்தால், கட்சி எப்படி வளர்ச்சி அடையும்?’ என்று நிர்வாகி ஒருவர் நீண்ட பதிவைப் போட, அது அனைத்து மாவட்ட வாட்ஸ்அப் குரூப்களுக்கும் பகிரப்பட்டு, வைரலாகிவருகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளோ அந்தப் பதிவைப் படித்துவிட்டு அமுக்கமாக இருக்கிறார்கள்!

சாதி அரசியல் செய்கிறாரா துரைமுருகன்?

தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் தொகுதிக்குட்பட்ட காட்பாடி ஒன்றியத்திலிருக்கும் அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஊராட்சியில் முழுக்க முழுக்க பொதுப்பிரிவினரே வசிக்கிறார்கள். இதேபோலத்தான் பட்டியல் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குடியாத்தம் ஒன்றியத்தின் கருணிகசமுத்திரம் ஊராட்சித் தலைவர் பதவியும் சம்பந்தமே இல்லாமல் பழங்குடிப் (எஸ்.டி) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

தவிர, பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பல்வேறு ஊராட்சிகளும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, `சம்பந்தமே இல்லாமல் ஊராட்சிப் பதவியிடங்களின் பிரிவுகள் மாற்றப்பட்டதற்கு பின்னணியில் அமைச்சர் துரைமுருகனின் தலையீடு இருக்கிறது; சாதி அரசியல் செய்து எளிதாக வெற்றிபெற கணக்கு போடுகிறார்’ என்று கொந்தளிக்கிறார்கள் வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism