Published:Updated:

சசிகலாவைச் சமாளித்து தப்பிய முன்னாள் அமைச்சர் முதல் விஜய்யிடம் காம்ப்ளக்ஸை விற்கும் எஸ்.ஏ.சி வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

‘‘சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடச் செல்கிறேன். உமக்குத் தேவையான தகவல்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கிறேன்’’ - சுருக்கமாகச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் கழுகார். சற்று நேரத்தில் நமது வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு செய்தியாக வந்து விழுந்தன!

அ.தி.மு.க-வுக்கு உதவிய ‘ராஜ’ அதிகாரி!

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வெற்றிபெற அதிகாரிகள் திரைமறைவாக உதவியது, வால்பாறை தொகுதியில் நடந்த விவகாரங்கள் மூலம் ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது. இதனால், வால்பாறை நகராட்சியில் பணியாற்றிய முக்கிய ‘ராஜ’ அதிகாரி மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்-கள் பதியப்பட்டுள்ளனவாம். காவல்துறையின் உயர் பொறுப்பிலிருக்கும் ‘ஏழுமலையான்’ பெயர் கொண்ட ஓர் அதிகாரி பாதுகாப்பதால், ‘ராஜ’ அதிகாரியை போலீஸாரால் நெருங்க முடியவில்லையாம். விவகாரத்தை `நோட்’ போட்டு முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறது உளவுத்துறை!

போனில் பேசிய சசிகலா...
சமாளித்து தப்பிய முன்னாள் அமைச்சர்!

அதிரடிக்குப் பெயரெடுத்த தென் மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சமீபத்தில் சசிகலா போன் செய்திருக்கிறார். ‘‘நான் சசிகலா பேசுறேன்’’ என்று சொன்னவுடன், மறுமுனையில் பதறிப்போன அந்த முன்னாள் அமைச்சர், ‘‘ஹலோ, ஹலோ... உங்களுக்கு யார் வேணும்? நீங்க பேசுறதே புரியலை...’’ என்று போன் இணைப்பைத் துண்டித்துவிட்டு, சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.

சசிகலா,தினகரன்
சசிகலா,தினகரன்

இந்தச் சம்பவம் நடந்த ஓரிரு நாள்களில், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு சசிகலாவிடமிருந்து போன் சென்றிருக்கிறது. அவரோ எந்தப் பதற்றமும் இல்லாமல் சசிகலாவை நலம் விசாரித்துவிட்டு, ‘‘எப்போதும் நான் உங்க விசுவாசிதான் அம்மா. ஆனா, இன்னைக்கு இருக்குற அரசியல் சூழ்நிலையில, உங்களை வெளிப்படையா ஆதரிக்க முடியாத நிலையில இருக்கேன். உங்களை நான் வெளிப்படையா ஆதரிச்சாலுமேகூட, உங்களுக்கு அதனால எந்த பிரயோஜனமும் இல்ல. என்னை நான் தக்கவெச்சுக்க மனசாட்சிக்கு விரோதமா நடக்க வேண்டியதா இருக்கு’’ என்று ராஜதந்திரமாகப் பேசிப் புலம்பி, சமாளித்திருக்கிறார். இந்தத் தகவல் ஆடியோவாக வெளியில் கசிந்தால் ஏதேனும் பிரச்னை வந்துவிடும் என்று பதற்றமடைந்த அந்த அமைச்சர், அடுத்த இரண்டே நாள்களில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ‘அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு இடம் இல்லை’ என்று தீர்மானமும் போட்டுவிட்டாராம்.

உச்சபுள்ளியைக் குஷிப்படுத்த ஸ்வீட் பாக்ஸ்!

உள்ளாட்சித்துறையில் முக்கியப் பதவிக்கு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய ‘பொன்’மயமான அதிகாரியே நியமிக்கப்பட்டது சமீபத்தில் சர்ச்சையானது. அவர் வந்ததும் வராததுமாக, முன்பு 7.5 சதவிகிதமாக இருந்த கமிஷன் தொகையை 10 சதவிகிதமாக மாற்றியமைத்துவிட்டாராம். இதனால், துறையில் டெண்டர் எடுத்தவர்களும், நேர்மையான அதிகாரிகளும் புகார்களைத் தட்டிவருகிறார்கள். நகரமைப்புப் பிரிவில் கடந்த ஆட்சியில் சர்ச்சையில் சிக்கிய அந்த மூவர் கூட்டணிதான் இந்த ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறதாம். துறையின் உச்சபுள்ளியைக் குஷிபடுத்த, அவருக்கே தெரியாமல் மாவட்டங்களில் வசூல் செய்து மூன்று ஸ்வீட் பாக்ஸ்களைத் தயார்செய்து வைத்திருக்கிறார்களாம்.

‘‘கேட்டது ஒண்ணு... கொடுத்தது வேறொண்ணு!’’
கொந்தளிப்பில் அரசு மருத்துவர்கள்!

‘கடந்த 2009-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354-ஐ நிறைவேற்ற வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, அ.தி.மு.க ஆட்சியில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இது குறித்து ‘கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவாரா?’ என்று ஜூன் 20-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் கட்டுரையும் வெளியானது. இதையடுத்து, அவசர அவசரமாக அரசு மருத்துவர்களின் ஊதியம் தொடர்பாக அரசாணை 293 என்கிற புதிய ஆணையை அரசு பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை

இது அரசு மருத்துவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘நாங்கள் கேட்பது கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354... ஆனால், எடப்பாடி ஆட்சியில் தயாரிக்கப்பட்ட அரசாணை 293-ஐ நிறைவேற்றியிருக்கிறீர்கள். இது நியாயமா?” என்று கொந்தளிக்கிறார்கள். காரணம், கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில்தான் ஊதியம் அதிகமாம்!

கட்சி கரைந்து போகும்!
கலங்கும் டி.டி.வி.தினகரனின் விசுவாசிகள்

சட்டமன்றத் தேர்தலின்போது எதிர்பார்ப்போடு இருந்த அ.ம.மு.க நிர்வாகிகள், தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறார்கள். இடையே, சசிகலா பேச்சு காரணமாக சிறிது உற்சாகம் அடைந்திருந்த நிலையில், மாவட்டம்தோறும் அ.தி.மு.க சார்பாக சசிகலாவுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதால், அந்த உற்சாகம் குறையத் தொடங்கியிருக்கிறது. வேறொரு கட்சிக்கு ஜாகை மாறுவதற்குப் பல மாவட்டங்களில் அ.ம.மு.க-வினர் பாய்ச்சல் காட்டுகிறார்கள்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

அ.ம.மு.க நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த பரமசிவ அய்யப்பன், தன் ஆதரவாளர்களோடு தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார். அவர் மூலமாக அ.ம.மு.க நிர்வாகிகள் பலரையும் இழுக்க தி.மு.க-வினர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். அ.தி.மு.க தரப்பிலிருந்தும் சில நிர்வாகிகளுக்கு வலை வீசப்பட்டிருக்கிறது. ‘‘இப்படியே போனால் கடலில் கரைத்த பெருங்காயம்போல கட்சியே காணாமல் போய்விடும்’’ என்று கலங்குகிறார்கள் டி.டி.வி.தினகரனின் உண்மையான விசுவாசிகள்.

மணல் மோசடி...
விசாரணைக்கு உத்தரவிட்ட ஆணையர்!

நெல்லை மாநகராட்சியின் ஆணையராக விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டதும், மாநகர் முழுவதும் ‘ஸ்மார்ட் சிட்டி’ வேலை என்ற பெயரில் வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு அரைகுறையாக போட்டுவைக்கப்பட்டிருந்த சாலைப் பணிகளை வேகமாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

சசிகலாவைச் சமாளித்து தப்பிய முன்னாள் அமைச்சர் முதல் விஜய்யிடம் காம்ப்ளக்ஸை விற்கும் எஸ்.ஏ.சி வரை! -கழுகார் அப்டேட்ஸ்
எல்.ராஜேந்திரன்

இதற்கிடையே, ஸ்மார்ட் சிட்டி பணிக்காகத் தோண்டிய இடத்தில் கிடைத்த மணலை, ஒரு கும்பல் மோசடி செய்து கோடிக்கணக்கில் விற்பனை செய்த விவகாரம் அவர் காதுக்குச் சென்றிருக்கிறது. அது தொடர்பாக ரகசிய விசாரணைக்கு விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார் என்கிறது மாநகராட்சி வட்டாரம். இந்த விவகாரத்தில், முன்பு அதிகாரியாக இருந்த சிலருக்குத் தொடர்பு இருப்பதால், அவர்கள் மத்தியிலும் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது!

சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை...
ஆர்வம் காட்டாத வைத்திலிங்கம்!

அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளருமான வைத்திலிங்கம், சசிகலாவுக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தீர்மானம் போடுவதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறாராம். வைத்திலிங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல், அவருக்கு நெருக்கமானவர்களே குழம்பிவருகிறார்கள்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

கொறடா பதவியைத் தனக்குத் தரும்படி வைத்திலிங்கம் கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி தரப்பு மறுத்துவிட்டதாகவும் டெல்டாவில் பேச்சு ஓடுகிறது. அந்த வருத்தத்திலேயே சசிகலாவுக்கு எதிராக எதையும் செய்யாமல் வைத்திலிங்கம் அமைதிகாப்பதாக அ.தி.மு.க-வினர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

மணிமாறன் விடுமுறையில் சென்றது ஏன்?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் நெருங்கிய உறவினர் மணிமாறன். தலைமைச் செயலகத்தில், செய்தித்துறை துணை இயக்குநராகச் சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டார். ஒரே வாரத்தில் திடீரென அவர் மெடிக்கல் லீவில் போய்விட்டார். ஏன் அவர் லீவில் போனார் என்பதுதான் தற்போது செய்தித்துறையில் பேசப்படும் ஹாட் டாபிக். துறையின் விளம்பரப் பிரிவை கவனிக்கும் பொறுப்பை மணிமாறன் எதிர்பார்க்க... அதைக் கொடுக்க விரும்பாத சிலர் செய்த பாலிடிக்ஸில் மணிமாறன் விடுமுறையில் சென்றதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

விஜய் - எஸ்.ஏ.சி டீல்!

சென்னை சாலிகிராமத்தில், முக்கியமான தெருவில் ஏழு வீடுகள்கொண்ட காம்ப்ளக்ஸ் ஒன்று நடிகர் விஜய் பெயரில் இருக்கிறது. அதையொட்டி ஐந்து வீடுகள்கொண்ட காம்ப்ளக்ஸ் அவரின் அப்பா எஸ்.ஏ.சி பெயரில் உள்ளது.

சசிகலாவைச் சமாளித்து தப்பிய முன்னாள் அமைச்சர் முதல் விஜய்யிடம் காம்ப்ளக்ஸை விற்கும் எஸ்.ஏ.சி வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கொரோனா காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்குவதைத் தள்ளிப்போட்டிருக்கும் எஸ்.ஏ.சி., பணத் தேவை காரணமாக தனது காம்ப்ளக்ஸை விற்க முடிவுசெய்தாராம். மீடியேட்டர் ஒருவர் மூலம் விஜயிடம், ‘நீயே வாங்கிக்கொள்கிறாயா?’ என்று கேட்டனுப்பினராம். அதையடுத்து, நடிகர் விஜய் நேரில் சென்று காம்ப்ளக்ஸைப் பார்த்துவிட்டு, இரண்டு ஸ்வீட் பாக்ஸ் தருகிறேன் என்று பதில் சொல்லியனுப்பினாராம். எஸ்.ஏ.சி தரப்பில் இந்த டீலுக்கு ஓ.கே-தான் என்றாலும், உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்!

அடுத்த கட்டுரைக்கு