Published:Updated:

`சிபாரிசு செய்த செந்தில் பாலாஜி முதல் தம்பியை நலம் விசாரிக்காத சசிகலா வரை!?' கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

''மெயிலை செக் செய்யும்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்தார் கழுகார். மெயிலில் வந்து விழுந்தன ரகளையான செய்திகள்.

தம்பியை நலம் விசாரிக்காத சசிகலா!

சசிகலாவின் தம்பியும், அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளருமான திவாகரன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்து மீண்டிருக்கிறார். இரண்டு முறை அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், குடும்பத்தினர் பெரும் பதற்றத்தோடு இருந்திருக்கிறார்கள். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள மருத்துவமனையில் ஜூலை 4-ம் தேதிவரை சிகிச்சையில் இருந்திருக்கிறார் திவாகரன்.

சசிகலா
சசிகலா

இந்தத் தகவல் சென்னை தி.நகர் வீட்டிலுள்ள சசிகலாவுக்குத் தெரியப்படுத்தியும், திவாகரனை நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லையாம். திவாகரனின் குடும்பத்தினரிடமும் பேசவில்லை என்கிறார்கள். ``சசிகலாவுக்கு இருப்பது ஒரே தம்பி. அரசியலில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக, உடல்நலம் பாதிக்கப்பட்டபோதுகூடவா பேசாமல் இருப்பது?’’ என்று மனம் வெதும்பும் திவாகரன் தரப்பு, ``சசிகலாவைச் சுற்றியிருக்கும் இளவரசி குடும்பத்தினர்தான் அவரை திவாகரனுடன் பேசவிடாமல் செய்துவிட்டார்கள்’’ என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். உடன்பிறவா சகோதரிக்கு, உடன்பிறந்த தம்பி மீது கோபம் இருக்கலாமா?!

அமைச்சர் குடும்பத்துக்கு ஏக டிமாண்ட்!

வடமாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு மனுக்கள் வாங்குவதற்குக்கூட உடம்பு வளைவதில்லையாம். அந்தப் பொறுப்பைத் தன் குடும்பத்தாரிடமே அவர் ஒப்படைத்துவிட்டார். அமைச்சரின் மனைவியும் மகனும்தான் இப்போது பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பரிசீலித்து, எந்தெந்தத் துறைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சரின் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார்கள். அது மட்டுமல்லாமல், துறையில் டீல் பேசி முடிக்கும் விஷயங்களையும் இவர்களே கவனித்துக்கொள்கிறார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால், காரியங்கள் கச்சிதமாக முடிவதால், அமைச்சரைவிட அவரின் குடும்பத்தினருக்குத்தான் இப்போது ஏக டிமாண்ட் என்கிறார்கள். சர்... சர்ர்னு இப்போ வேலை முடியுதுபோல!

பொன்.குமாரைச் சுற்றும் சர்ச்சை!

சமீபத்தில் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் வாரியத் தலைவர் பதவிக்கு பொன்.குமாரை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நியமனம் நடந்த பிறகு முதல்வரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார் பொன்.குமார். அப்போது அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான விருகை ரவியின் சகோதரர் கண்ணனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இதனால் கொந்தளித்துப்போன தி.மு.க-வினர், ``போன எலெக்‌ஷன்ல தி.மு.க-வுக்கு எதிரா வேலை செஞ்சவங்களைக் கூட்டிட்டு வந்து தலைவரோட நிக்கவெச்சிருக்கார் பொன்.குமார்” என்று புலம்புகிறார்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

அதேபோல, சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், நியமன விஷயத்தை முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தெரிவிக்கவில்லை என்று புகைச்சல் எழுந்துள்ளது. இதில் அழகிரியும் அப்செட் என்கிறார்கள். தி.மு.க பிரமுகர் ஒருவர் மூலமாகத் தன் வருத்தத்தை ஸ்டாலினிடம் அழகிரி கொண்டு சென்றபோது, ``நான் ஒப்புதல் வாங்க வேண்டியது ராகுலிடம்தான். அழகிரியிடம் இல்லை’’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். ஜி.பி.ரோட்டுல பிபி ஏறிக் கிடப்பாரே!

ஹெச்.ராஜாவைக் காப்பாற்றிய டெல்லி லாபி!

ஹெச்.ராஜா மீதான ஊழல் புகாரில், புகார் அளித்தவர்களையே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க அமைப்பு பொதுச்செயலாளரான கேசவ விநாயகம் மீது ``இவர் எப்பவுமே இப்படித்தான்... தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லாம, புகார் சொன்னவங்களையே கட்சியிலிருந்து கட்டம்கட்டுவார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

ஏற்கெனவே ஒருமுறை வானதி சீனிவாசன் மேல ஒரு புகார் வந்தப்பயும் இதேமாதிரிதான் செஞ்சார்” என்று கமலாலயத்தில் முணுமுணுப்பு எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் எல்.முருகனும் அப்செட் என்கிறார்கள். ``டெல்லியிலிருந்து சிலர் லாபி செய்து ராஜாவைக் காப்பாற்றிவிட்டனர்" என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் முருகன். நியாயம் மலர்ந்தே தீரும்னு யாரும் கிளம்பலையா?!

தங்கக் கடத்தல்... வெளிறிப்போன ஆளுங்கட்சி!

கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற கார் ஒன்று, கடந்த மாதம் விபத்தில் சிக்கியது. அந்த வழக்கை போலீஸார் விசாரித்தபோது, அது தங்கக் கடத்தல் கும்பல் வந்த கார் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சிலர் கைதுசெய்யப்பட்டார்கள். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு ஆடியோவில், தங்கக் கடத்தலில் கிடைக்கும் தொகையை மூன்றாகப் பிரித்து அதில் ஒரு தொகையை பார்ட்டிக்குக் கொடுப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

தடதடக்கும் தங்கக் கடத்தல்...
தடதடக்கும் தங்கக் கடத்தல்...

உடனே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க ஆகியவை, ``தங்கக் கடத்தல் கும்பல் சி.பி.எம் பார்ட்டிக்குப் பங்கு கொடுக்கிறது. இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வேண்டும்’’ என்று விமர்சித்தனர். போலீஸ் விசாரணையில், `பார்ட்டி’ என்று கடத்தல்காரர்கள் குறிப்பிட்டது சி.பி.எம் கட்சியை இல்லை; இடைத்தரகர்களைத்தான் அப்படி அழைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. ஆனாலும், ஆளுங்கட்சியான சி.பி.எம் இந்த விவகாரத்தால் சற்று வெளிறித்தான் போயிருக்கிறது. இனிமே... யார்கிட்டயும் பர்த்டே பார்ட்டிகூட கேட்க மாட்டாங்கன்னு சொல்லுங்க!

சிபாரிசு செய்த செந்தில் பாலாஜி...
கொதிப்பில் கரூர் தி.மு.க!

அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவர்களுக்கே கட்சிப் பதவியை வாங்கித்தருகிறார் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. தற்போது அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் இந்த விமர்சனம் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. பொதுவாக, இது போன்ற பதவிகளுக்கு கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

ஆனால், செந்தில் பாலாஜி தலையிட்டு, அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த விஜயகுமாரை கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் பதவிக்கும், அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த தாசபிரகாஷை கூடுதல் சிவில் அரசு வழக்கறிஞர் பதவிக்கும் சிபாரிசு செய்திருக்கிறாராம். இவர்கள் தவிர, குற்றவியல் அரசு வழக்கறிஞர் பதவிக்கு, ம.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த செந்தில்குமார் என்பவரை சிபாரிசு செய்திருக்கிறாராம். இந்த விவகாரத்தால் கரூர் தி.மு.க கொதிநிலையில் இருக்கிறது. திடீர் முன்னேற்ற கழத்தினர்!

``அந்தம்மாவை எங்கே நியமிக்குறது?’’
சீனியர் ஐ.ஏ.எஸ்-கள் யோசனை...

பெரும்பாலான ஐ.ஏ.எஸ் இடமாற்றங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐந்து அதிகாரிகளுக்கும் சில நாள்களுக்கு முன்பு போஸ்ட்டிங் கொடுத்துவிட்டார்கள். ஆனால், இன்னும் ஒரு பெண் அதிகாரிக்கு மட்டுமே போஸ்ட்டிங் போட வேண்டியிருக்கிறது. அது பற்றி சமீபத்தில் முதல்வர் அலுவலகத்தில் பேச்சு எழுந்தபோது, ``அந்தம்மாவை எங்கே நியமிக்குறதுனுதான் தெரியலை. ரொம்ப யோசிக்க வேண்டியிருக்குது!” என்றார்களாம் சீனியர்கள். காரணம், கடந்தகாலத்தில் அந்தப் பெண் அதிகாரி பணியாற்றிய துறைகளில் ஃபைல்களில் கையெழுத்து போடுவதில் கறார்காட்டுவாராம்.

'தூது'விட்ட ராஜேந்திர பாலாஜி முதல் ஐ.டி வளையத்தில் தி.மு.க பிரமுகர் வரை கழுகார் அப்டேட்ஸ்...

வேளாண்துறையில் அந்தப் பெண் அதிகாரி பணியாற்றியபோது தனது துறையில் இதர அதிகாரிகள் செய்த ஊழல்களைப் பட்டியலெடுத்து தலைமைச் செயலாளருக்கு அனுப்பிவிட்டாராம். ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றியபோது மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தன் மேலதிகாரி செய்த கோல்மாலைத் தோலுரித்து, தொங்கவிட்டுவிட்டாரம். இப்படி, செல்லுமிடமெல்லாம் மேலதிகாரிகளையே ஆட்டம் காணவைப்பதால், இவரை எங்கே நியமிப்பது என்று யோசிக்கிறதாம் சீனியர் வட்டாரம். நல்லவங்களுக்கு காலம் இல்லைங்கிறது இதுதானோ!

ஆவின் முறைகேடு
ஒன் டு ஒன் டீலிங்!

ஆவின் நிர்வாகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தற்போதைய அமைச்சர் நாசர் ஊழல் புகார் தெரிவித்துவருகிறார். தவிர, பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் நீண்டகாலமாக கோலோச்சிய ஒப்பந்ததாரர்கள் சிலரை நீக்கியது உட்பட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஆனால், இவையெல்லாமே வெறும் நாடகம்தானாம்... கடந்த ஆட்சியில் பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஃபைல் ஒன்று தொகை அதிகம் என்பதால் முறைப்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்குத்தான் செல்ல வேண்டுமாம். ஆனால், தென் மாவட்டம் ஒன்றிலிருந்து வந்த போனை அடுத்து, ‘ஒன் டு ஒன்’ டீலிங் பேசப்பட்டு, அந்த ஃபைல் ஆவின் துறையிலுள்ள விஜிலென்ஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். இதனால், குற்றம்சாட்டப்படுபவர்கள் தப்பவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்! ஃபைலுக்கு பால் ஊத்திட்டாங்க!

அடுத்த கட்டுரைக்கு