Published:Updated:

தடையை மீறிய ஸ்டாலினின் மகள் டு அமைச்சர் கனவிலிருக்கும் பா.ம.க வேட்பாளர்கள் வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

`மெயில் செக் செய்யவும்...’ கழுகாரிடமிருந்து குறுந்தகவல் ஒளிர்ந்தது. துணுக்குகளைக் கொட்டியிருந்தார் கழுகார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“தலீவரே... டூர் ப்ளீஸ்!”
விஜயபாஸ்கரை வெறுப்பேற்றிய நிர்வாகிகள்...

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலரை குற்றாலம் அழைத்துச் சென்று தடபுடலாகக் விருந்து வைத்து ‘கூல்’ செய்தாராம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதை மனதில் வைத்துக்கொண்டு விராலிமலையைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் விஜயபாஸ்கரைச் சந்தித்து, “தலைவரே எப்படியும் நீங்கதான் ஜெயிக்கப்போறீங்க.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

போன முறை மாதிரி, இந்த தடவையும் நம்ம ஆளுங்களை எங்காச்சும் ரிசார்ட்டுக்கு அழைச்சுக்கிட்டுப்போய் பெருசா விருந்துவெக்கணும்” என்று தலையைச் சொறிந்திருக்கிறார்கள். இதைக் கேட்டதும் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க... “தேர்தல் ரிசல்ட் எப்படி வரப்போகுதுன்னே தெரியலை... நானே ஏகப்பட்ட பிரச்னையிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்னு டென்ஷன்ல இருக்கேன். இந்த லட்சணத்துல டூர் கேட்குதா?” என்று கடுகடுத்துவிட்டாராம் அமைச்சர்.

விருந்தா... மருந்தான்னு மே 2-ம் தேதி தெரிஞ்சுடும்!

தடையை மீறி ஸ்டாலின் மகள் கிரிவலம்!

கொரோனா பரவல் காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26-ம் தேதி சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, தடையை மீறி கிரிவலம் சென்றிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் என்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த அ.தி.மு.க-வினர், செந்தாமரை மீது வழக்கு பதிவு செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். ஸ்டாலின் காதுகளுக்கு இந்த விவகாரம் செல்லவே... கூப்பிட்டவர், “இதெல்லாம் தேவையாம்மா?” என்றாராம். செந்தாமரையோ... “எல்லாம் உங்களுக்காகத்தாம்ப்பா” என்று சொல்ல, தலைமையால் பதிலேதும் சொல்ல முடிவில்லையாம்.

அப்பா நகர்வலம் போறதுக்காக இப்பவே கிரிவலம் போனாங்கனு சொல்லுங்க!

சிக்கலில் சோழவந்தான் எம்.எல்.ஏ!

மதுரை மாவட்டத்தில் அலைபேசி உரையாடல் ஒன்று அ.தி.மு.க கட்சித் தொண்டர்களிடையே வாட்ஸ்அப்பில் வைரலாகிவருகிறது. அலங்காநல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ‘அண்ணே, டோக்கன் வாங்குனவங்க பணம் கேட்டு நெருக்கடி கொடுக்குறாங்க. உடனே பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க’ என்கிறார். மறுமுனையில், ‘தலைமைகிட்டருந்து வர வேண்டிய பணம் இன்னும் வரலை. ஜெயிச்சதும் தலைமை கொடுக்கலைன்னாலும் நானே கொடுத்துடுறேன்’ என்கிறது அந்த ஆடியோ பதிவு. இதைப் பேசியது சோழவந்தான் சிட்டிங் எம்.எல்.ஏ மாணிக்கம்தான் என்று கட்சியினர் மத்தியில் பரவலாகப் பேச்சு ஓடுகிறது. இந்த விவகாரம் கட்சித் தலைமை வரை சென்றதால், தலைமையும் அப்செட் என்கிறார்கள்.

டோக்கன் வாங்குனவங்க எல்லாம் வரிசையில வாங்க!

பினாமி சொத்து விவகாரம்!
தி.மு.க-வில் சேர்ந்த நடராசன் உதவியாளர்!

சசிகலா கணவர் நடராசனின் உதவியாளராக இருந்தவர் பிரபு. நடராசன் தனக்கு நெருக்கமாக இருந்த சிலரது பெயர்களில் சொத்துகளை வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. நடராசன் மறைவுக்குப் பிறகு அவரின் சகோதரர்கள், பிரபு உள்ளிட்ட சிலரை அழைத்து இது குறித்து விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த பிரபு, இந்த விவகாரத்தை இளவரசி தரப்புக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

தடையை மீறிய ஸ்டாலினின் மகள் டு அமைச்சர் கனவிலிருக்கும் பா.ம.க வேட்பாளர்கள் வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

அதற்கு அவர், ‘அக்காகிட்ட (சசிகலா) சொல்றோம். எல்லாத்தையும் அவங்க பார்த்துப்பாங்க’ என்று நம்பிக்கை அளித்தாராம். இதையடுத்து, சமீபத்தில் தஞ்சாவூர் வந்த சசிகலாவை பிரபு சந்திக்க முயன்றும் நேரம் கொடுக்கப்படவில்லை. அதேநேரம், நடராசனின் சகோதரர்களும் பிரபுவிடம் தொடர் அழுத்தம் கொடுக்கவே... அதிருப்தி அடைந்தவர், ஒரத்தநாடு தி.மு.க எம்.எல்.ஏ ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துவிட்டார்.

இப்ப என்ன பண்ணுவீங்க!

தூக்கியடிக்கும் செல்லூர் ராஜூ!

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரின் ஆதரவாளர்களையெல்லாம் பதவியிலிருந்து தூக்கியடித்தார் அமைச்சரும், மாநகர அ.தி.மு.க செயலாளருமான செல்லூர் ராஜூ. ஒவ்வொரு பகுதிச் செயலாளர் பொறுப்பையும் மூன்று பேருக்குப் பகிர்ந்தளித்ததால், சுணங்கிப்போன பழைய பகுதிச் செயலாளர்கள் அமைச்சருக்காக இறங்கி தேர்தல் வேலைப் பார்க்கவில்லை.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

இதில் கண்ணன் என்ற பகுதிச் செயலாளர், ‘கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த நான் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்’ என்று சமீபத்தில் போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், இவை எதையும் கண்டுகொள்ளாமல் இப்போதும் நிர்வாகிகளை நீக்குவதும், புதியவர்களை நியமிப்பதுமாக கூலாக இருக்கிறார் செல்லூர் ராஜூ. இதனால், தேர்தல் முடிவுகள் வருவதற்குள் மதுரை மாநகர அ.தி.மு.க கலகலத்துவிடும் என்று புலம்புகிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

கவலைப்பட வேணாம்... தெர்மாகோல் போர்த்தி கட்சியைக் காப்பத்திடுவாரு!

சுகாதார ஆய்வாளர் தற்கொலை!
பவுன்ராஜைச் சுற்றும் சர்ச்சை

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ் மீது மோசடி வழக்கு பாய்ந்தது குறித்து ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை எழுதியிருந்தோம் அல்லவா... அவருடன் தொடர்பிலிருக்கும் அதிகாரிகளும், சில அ.தி.மு.க புள்ளிகளும்தான் பவுன்ராஜைக் காப்பாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் பவுன்ராஜூக்கு நெருக்கமாக இருந்த ஜான்சன் என்கிற சுகாதார ஆய்வாளர், வேலூரிலுள்ள ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இவர் வால்பாறை நகராட்சியிலிருந்து சமீபத்தில்தான் பொள்ளாச்சி நகராட்சிக்கு பணிமாறுதல் பெற்றிருக்கிறார். இதையடுத்து, மேற்கண்ட வழக்கில் மேலும் பல திருப்பங்கள் நடக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மர்மம் விலகட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீட்டுக்கு நோட்டு விவகாரம்!
குமரியைத் தவிர்க்கும் குண்டு ராவ்

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைகாட்ட தயங்கிவருகிறாராம். சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக நியமிக்கப்பட்ட பிரவின் என்பவர் ஏப்ரல் 10-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதன் பின்னணியில், சீட்டுக்கு நோட்டு விவகாரம் விளையாடியதுதான் காரணம் என்கிறார்கள்.

தினேஷ் குண்டு ராவ்
தினேஷ் குண்டு ராவ்

பிரவினுக்கு விளவங்கோடு தொகுதியை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி தினேஷ் குண்டு ராவ் சொல்லியிருந்த நிலையில், அந்தத் தொகுதியை விஜயதரணிக்கு காங்கிரஸ் தலைமை ஒதுக்கியது. இதையடுத்து, குண்டு ராவ் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி டெல்லி வரை புகார் சொன்னாராம் பிரவின். தேர்தலுக்கு முன்பு வரை அடிக்கடி குமரி மாவட்டம் வந்த குண்டு ராவ், தேர்தலுக்குப் பிறகு குமரிக்கு வருவதை முற்றிலும் தவிர்ப்பதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் கதர் வேட்டிகள்.

குண்டு ராவை நோக்கிப் பாயும் குண்டு!

அமைச்சரவையில் பங்கு...
இது அய்யா கணக்கு!

அமைச்சரவையில் பா.ம.க இடம்பெறப்போவதாக, அந்தக் கட்சியினர் சிலர் சொல்லிவருவது அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ‘அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், மூன்று அமைச்சர் பதவிகளை பா.ம.க-வுக்கு ஒதுக்குமாறு மருத்துவர் அய்யாவே எடப்பாடியிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டார். ஆட்சி அமைந்தவுடன் அமைச்சராகிவிடுவோம்’ என்று பா.ம.க வேட்பாளர்கள் சிலர் குதூகலத்துடன் கூறிவருகிறார்களாம். இதைக் கேட்டு வட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர், “நாங்களே ஜெயிப்போமா... அப்படியே ஜெயித்தாலும் அமைச்சர் பதவி கிடைக்குமான்னு ஜோசியம் பார்த்துக்கிட்டிருக்கோம். இதுல இவங்க வேற குறுக்கும் நெடுக்கும் ஓடி விளையாடுறாங்க!” என்று சலித்துக்கொள்கிறார்களாம்.

அமைச்சர் பதவி என்ன... துணை முதல்வர் பதவியே கேட்கலாமுல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு