Published:Updated:

`பஞ்சாயத்தைக் கலைத்த எடப்பாடி முதல் முன்னுதாரணமான ஸ்டாலின் வரை!' கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...

‘‘வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். செய்திகளை மெசஞ்சரில் அனுப்பி வைக்கிறேன்’’ என்று கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. சற்று நேரத்தில் மெசஞ்சரில் வந்துவிழுந்தன செய்திகள்.

`பஞ்சாயத்தைக் கலைத்த எடப்பாடி முதல் முன்னுதாரணமான ஸ்டாலின் வரை!' கழுகார் அப்டேட்ஸ்

‘‘வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். செய்திகளை மெசஞ்சரில் அனுப்பி வைக்கிறேன்’’ என்று கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. சற்று நேரத்தில் மெசஞ்சரில் வந்துவிழுந்தன செய்திகள்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்...
“பொட்டியைத் திறங்க!”
பஞ்சாயத்தைக் கலைத்த எடப்பாடி!

ஜூலை 9-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியைத் தயார்செய்வது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாம். அப்போது தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள், “சட்டமன்றத் தேர்தலின்போதே, ஏகப்பட்ட பணத்தை கட்சி ஒன்றிய நிர்வாகிகள் செலவழித்துவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடந்தால் சமாளித்துவிடலாம்.

எடப்பாடி
எடப்பாடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றால் சமாளிக்க முடியாது. கடந்த ஆட்சியில் பசையான இலாகாக்களை வைத்திருந்தவர்கள், இந்த முறை பொட்டியைத் திறந்தால்தான் வெற்றி சாத்தியப்படும்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டதும் முன்வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுக்கள் சிலரின் முகம் கறுத்துப்போனதாம். பெட்டியைத் திறக்க வேண்டிய முதல் நபரே எடப்பாடி பழனிசாமிதான் என்பதால், “நிதி விவகாரத்தை அப்புறம் பாத்துக்கலாம். நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க” என்று மா.செ-க்களிடம் சொல்லி அனுப்பினாராம்.

கிளம்புங்க கிளம்புங்க... அதான் பஞ்சாயத்து முடிஞ்சதுல்ல!

“கட்சிக்கு வந்துடுங்கண்ணே!”
அழைப்புவிடுத்த சீமான்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறிய தொழிலதிபர் சி.கே.குமரவேலை நாம் தமிழர் கட்சிக்கு வருமாறு சீமான் அழைப்பு விடுத்திருக்கிறாராம். தேர்தலுக்குப் பிறகு பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற குமரவேல், “தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே கமல்ஹாசன் கவனம் செலுத்தியதால்தான் கட்சி தோல்வியைத் தழுவியது. ஆனால், சீமான் அப்படியல்ல... தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கிறார்” என்று பாராட்டிப் பேசினார்.

சீமான்
சீமான்

இதனால் நெகிழ்ந்துபோன சீமான், சி.கே.குமரவேலை போனில் அழைத்துப் பாராட்டியதுடன், “நீங்க நம்ம கட்சிக்கு வந்துடுங்க அண்ணே" என்று அழைப்பு விடுத்தாராம். சீமானின் அழைப்பை இதுவரை குமரவேல் ஏற்கவில்லை என்றாலும், விரைவிலேயே அவர் நாம் தமிழர் மேடை ஏறுவார் என்கிறார்கள் தம்பிகள்.

போலாம் போலாம் ரைட்!

கொரோனா நிதி கலெக்‌ஷன்...
டோஸ்விட்ட அமைச்சர்!

முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி கொடுக்க விரும்பிய சென்னை இ.எஸ்.ஐ மண்டல அதிகாரி ஒருவர், துறை சார்ந்த பணியாளர்களிடம் நிதி வசூலித்திருக்கிறார். இதற்கு கொடுங்கையூரில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் உதவியாக இருந்திருக்கிறார். இந்த டாக்டர், சுகாதாரத்துறை அமைச்சரின் வாரிசுக்கு நெருங்கிய நண்பராம்.

கொரோனா சிகிச்சை பிரிவு
கொரோனா சிகிச்சை பிரிவு

நிதி வசூல் செய்வதைக் கேள்விப்பட்ட உயரதிகாரி, அந்த மண்டல அதிகாரியிடம் "பணத்தை என்கிட்ட கொடுங்க... நான் சி.எம் கிட்ட கொடுக்கிறேன்" என்று கேட்டபோது, அவர் மறுத்துவிட்டாராம். அதனால் கோபமடைந்த உயரதிகாரி, பழிவாங்குவதற்காகக் கொடுங்கையூர் டாக்டரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “நிதி வசூலிச்சதுக்காக இடமாற்றம் செய்வீங்களா?” என்று உயரதிகாரிக்கு டோஸ் விட்டாராம். உடனே அந்த இடமாற்ற உத்தரவும் கேன்சல் செய்யப்பட்டதாகச் சொல்கிறது சுகாதாரத்துறை வட்டாரம்.

லேசுப்பட்டவரல்ல மா.சு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டபுள் மாஸ்க்...
முன்னுதாரணமான ஸ்டாலின்!

முதல்வர் மு.க.ஸ்டாலினை அலுவல் நிமித்தமாக தலைமைச் செயலக அதிகாரிகள், விசிட்டர்கள் என தினமும் 500 பேர் வரை சந்திக்கிறார்கள். அப்படி வருபவர்கள் மாஸ்க் அணிந்திருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, தெர்மல் டெஸ்ட் மட்டும் எடுத்து முதல்வர் அறைக்குள் அனுப்புவார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த ஒரு வாரமாக, இரண்டு செவிலியர்களை முதல்வர் அலுவலகத்தில் நியமித்திருக்கிறார்கள். முதல்வரைக் காண வருபவர்கள் ஏற்கெனவே அணிந்திருக்கும் மாஸ்க்குகளை செக் செய்யும் அந்த செவிலியர்கள், அது சரியில்லாவிட்டால் தங்கள் வசமுள்ள இரண்டு மாஸ்க்குகளை விசிட்டர்களிடம் கொடுத்து அணியச் சொல்கிறார்களாம். அதன்பிறகே முதல்வர் கேபினுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதையடுத்து, “பரவாயில்லையே... சுகாதாரம் தொடர்பான விஷயத்தில் முதல்வர் முன்னுதாரணமாக இருக்காரு” என்கிறார்கள் விசிட்டர்கள்.

சேஃப்டி ஃபர்ஸ்ட்... செக்கப் மஸ்ட்!

பொன்னார் இடத்தைப் பிடிக்கும் காந்தி!

கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வில் கோலோச்சிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்த பிறகு சென்னையில்தான் அதிகமான நாட்களை கழித்துவருகிறார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருப்பதால் அவர் ஒதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்து வருகிறார்.

 பொன்னார்
பொன்னார்

பொன்னாருக்கு சீனியரான எம்.ஆர்.காந்தி, சுமார் 30 ஆண்டுகளாக டம்மியாக இருந்தார். இப்போது அதிகாரம் கையில் கிடைத்திருப்பதால், பொன்னார் விட்டுச் சென்ற இடத்தைப் பிடிக்க காந்தியின் வேகம் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். இது ஒருபக்கம் காந்தியின் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொன்னாரின் ஆதரவாளர்கள் சுணங்கிப் போயிருக்கிறார்கள்.

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!

‘‘திருப்பி வாங்கிக் கொடு!’’
பஞ்சாயத்து கூட்டும் அ.தி.மு.க புள்ளி...

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் யூனியன் சேர்மனாக இருப்பவர் மகேந்திரன். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவரை சேர்மன் ஆக்குவதற்காக மூன்று தி.மு.க கவுன்சிலர்களை பசையாகக் கவனித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவர்.

தற்போது மகேந்திரன் திடீரென தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்துவிட்டார். கட்சி மாறியதால் அதிர்ச்சியடைந்த அந்த அ.தி.மு.க முக்கியப் புள்ளி, "உன்னை நம்பித்தானே செலவழிச்சேன். இப்ப நீ கட்சி மாறிட்ட. உனக்காக தி.மு.க கவுன்சிலர்களுக்குக் கொடுத்ததையெல்லாம் திருப்பி வாங்கிக்கொடு’’ என்று கேட்டு பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கிறாராம்.

ஆத்தா வையும் காசைக் கொடு!

‘‘நான் கெட்டவனாகிவிடுவேன்!’’
பப்ஜி மதன் டயலாக்

பப்ஜி லைவ் விளையாட்டின்போது ஆபாசமாகப் பேசிய குற்றச்சாட்டில் யூ-டியூபர் மதன், அவனின் மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட கிருத்திகாவுக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது. வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர் போலீஸாருக்கு எதிரான கருத்துக்களை கூறவே... போலீஸ் தரப்பு கடும் டென்ஷனாகியிருக்கிறது இதனால், "நிபந்தனை ஜாமீனில் வந்திருக்கும் நீங்கள் இனிமேல் பிரஸ் மீட் கொடுக்கக்கூடாது" என்று கிருத்திகாவிடம் சொல்லியிருக்கிறார்கள்.

யூடியூபர் மதன்
யூடியூபர் மதன்

இன்னொரு பக்கம் சிறையிலிருக்கும் மதனைச் சந்தித்த அவரின் குடும்பத்தினர், "கவலைப்படாதே, சீக்கிரம் வெளியில் எடுத்துவிடுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு நடைபெற்ற சில தினங்களிலேயே மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. சிறையிலிருக்கும் மதன், "இங்கேயெல்லாம் நீண்ட நாள் இருந்தால் நான் கெட்டவனாகிவிடுவேன்" என்று டயலாக் பேசிவருகிறாராம்.

அப்பவும் திருந்தற மாதிரி தெரியலை!

திருத்தணி கோயிலை வட்டமடிக்கும் சர்ச்சை!

திருத்தணி முருகன் கோயிலில் முக்கியப் பதவியில் சசிகலாவின் ஆசியால் நியமிக்கப்பட்ட பழைய நடிகர் பெயரைக் கொண்ட ஒருவர், தி.மு.க ஆட்சியிலும் தொடர்ந்து கோலோச்சி வருகிறாராம். கடந்த ஆட்சியில் அ.தி.மு.க விசுவாசியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர், தற்போது தி.மு.க-வினர் சிலரை நன்றாக கவனிப்பதுடன், தி.மு.க-வின் விசுவாசியாகவும் காட்டிக்கொள்கிறாராம். அவர் இடத்துக்கு வரத்துடிக்கும் தி.மு.க நிர்வாகிகள் சிலர் மத்தியில் இந்த விவகாரம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க... திருத்தணி கோயிலில் போலிச்சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்கள் தொடர்பான வழக்கு, தங்கம் மாயமான வழக்கு ஆகியவை நிலுவையில் இருக்கின்றன. தற்போது, திருத்தணி கோயிலில் புதிதாக ஊழியர்களை நியமிக்கப்போகும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கோயிலில் அதிகாரியாக இருக்கும் ஒளியின் பெயரைக் கொண்டவர் மீது ஏற்கெனவே முறைகேடு குற்றச்சாட்டுக்கள் வட்டமடிப்பதால், இந்த புதிய நியமன அறிவிப்பு நியாயமாக நடக்குமா என்ற கேள்வியைக் கோயில் நிர்வாகத்தினர் எழுப்புகிறார்கள்.

முருகனுக்கே வெளிச்சம்