Published:Updated:

‘டெண்டருக்காக மோதும் எம்.எல்.ஏ-க்கள்’ முதல் ‘அண்ணாமலைக்கு எதிரான மூத்த நிர்வாகிகள்’ வரை!

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

‘‘இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் செல்கிறேன். இன்று அலுவலகம் வர மாட்டேன்’’ - கழுகார் அனுப்பிய குறுந்தகவல் வந்த சற்று நேரத்தில், நமது வாட்ஸ்அப்பை நிரப்பியிருந்தன அவர் அனுப்பிய செய்திகள்!

வேணும் பதவி...
விழுப்புரத்தைப் பிரி!

அ.தி.மு.க-வின் விழுப்புரம் நகரச் செயலாளராக இருந்த பாஸ்கரன், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மரணமடைந்ததால், அந்தப் பொறுப்பு காலியாக இருக்கிறது. தற்போது அந்த இடத்தைப் பிடிக்கக் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக இருந்த ராமதாஸ், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பசுபதி, செந்தில் எனப் பலருக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறதாம். இதனால், ‘விழுப்புரம் நகரத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு நகரச்செயலாளர் பொறுப்பு கொடுக்கலாமா?’ என்று யோசித்து வருகிறதாம் மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் தரப்பு.

விடியல் வருமா...
காத்திருக்கும் பி.ஆர்.ஓ-க்கள்!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பிறகு, பல துறைகளிலும் உள்ள மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், இதுவரை செய்தித்துறையில் பி.ஆர்.ஓ-க்கள் மாற்றம் நடக்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட பி.ஆர்.ஓ-க்களே முக்கியப் பதவிகளில் தொடர்கிறார்கள். `தி.மு.க ஆதரவாளர்கள்’ என முத்திரை குத்தப்பட்டு, கடந்த பத்து ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்ட பலரும், எப்போது தங்களுக்கு மாற்றம் வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். செய்தித்துறையில் கூடுதல் பொறுப்பிலுள்ள முக்கியமான அதிகாரி ஒருவர்தான், ஏற்கெனவே இந்தத் துறையில் உச்சத்திலிருந்த அதிகாரியோடு கூட்டணி போட்டுக்கொண்டு, இந்த மாற்றங்களைத் தள்ளிப்போடுகிறார் என்று புலம்புகிறார்கள் தி.மு.க ஆதரவு அதிகாரிகள்.

உஷ்ணமாகும் ஊட்டி
அதிகார யுத்தம்!

நீலகிரி மாவட்டத்தில், பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த நபர், அனைத்துத் துறைகளையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு நிழல் ஆட்சியராகவே வலம்வந்தார்.

ஊட்டி
ஊட்டி

கலெக்டராக இன்னசென்ட் திவ்யா அங்கு வந்தபிறகும், அந்த நபர் அதே லாபியைச் செய்ய, அவரை வேறு துறைக்குத் தூக்கியடித்தார் இன்னசென்ட் திவ்யா. தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, மாவட்ட உச்சப் புள்ளியிடம் அடைக்கலமானவர், மீண்டும் தனது பழைய லாபியைக் கையிலெடுத்திருக்கிறாராம். அத்துடன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு எதிராகவும் காய்நகர்த்தி வருவதால், நீலகிரி மாவட்டத்தில் அதிகார உஷ்ணம் அதிகமாக இருக்கிறதாம்.

அண்ணாமலைக்கு எதிராக அஸ்திரம்...
தெறிக்கவிடும் மூத்த நிர்வாகிகள்!

``தமிழக பா.ஜ.க-வில் நீண்டகாலமாக இருந்து, பல்வேறு வழக்குகளைச் சந்தித்து, கட்சியை வளர்த்தவர்களுக்குப் பொறுப்புகளை வழங்காமல், சமீபத்தில் சேர்ந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை" என்று பொருமிக்கொண்டிருக்கிறார்கள் பல மூத்த நிர்வாகிகள். ஒரு வருடத்துக்கு முன்பு கட்சியில் சேர்ந்த அண்ணாமலைக்கு முதலில் துணைத் தலைவர் பதவி, அடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, தற்போது மாநிலத் தலைவர் பதவி என வாரி வாரிக் கொடுக்கப்பட்டதில் அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை
வி.ஸ்ரீனிவாசுலு

"இப்படி, மக்களிடம் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு, எந்தக் கள அனுபவமும் இல்லாமல் குறுகிய காலத்தில் உச்சத்துக்குச் சென்றுவிடுகிறார்கள்... இது கட்சிக்கு நல்லதா?" என்று பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் தங்களுக்குள் காரசாரமாக விமர்சித்துவருகிறார்கள். அவர்களின் ஆதரவாளர்களும் வாட்ஸ்அப் குரூப்களில் தலைமைக்கு எதிராகச் சரமாரியாகப் பதிவுகளை போட்டுத் தெறிக்கவிட்டு வருகிறார்கள். இன்னும் சில நிர்வாகிகள், கட்சி மாறும் முடிவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!

ஏடிஎம் கொள்ளையனுக்கு பிரியாணி
நொந்துபோன காவல்துறை!

நாடு முழுவதும் நூதன முறையில் நடந்த ‘ஸ்டேட் பேங்க் ஏடிஎம் கொள்ளை’ வழக்கில் சிக்கிய கொள்ளைக் கும்பலின் தலைவன் சௌகத் அலியை, ஜூலை 2-ம் தேதி ஹரியானாவில் வைத்துக் கைதுசெய்து சென்னைக்கு அழைத்துவந்தார்கள். விசாரணைக்காக அவரைக் காவலில் எடுத்த போலீஸார், பிரியாணி வாங்கிக் கொடுத்தே நொந்துபோய்விட்டார்களாம்.

கழுகார்
கழுகார்
வி.ஸ்ரீனிவாசுலு

க்ரைம் ஏரியாவில் பெரிய அனுபவமில்லாத ஒரு இன்ஸ்பெக்டரிடம், சௌகத் அலியை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததே இதற்கு காரணம் என காவல்துறையினரே புலம்புகிறார்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் ‘தெரியாது’ என்றோ, அமைதியாக இருந்தோ சமாளித்த சௌகத் அலியை, அந்தப் பெண் இன்ஸ்பெக்டர் ‘விசாரிக்க வேண்டிய விதத்தில்’ விசாரிக்கவில்லை என்ற அதிருப்தி உயரதிகாரிகளுக்கு இருக்கிறது. இதனால், மீண்டும் சௌகத் அலியைக் காவலில் எடுத்து வேறொரு அதிகாரி மூலம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

டெண்டருக்காக அடிதடி
மல்லுக்கட்டும் புது மாவட்ட எம்.எல்.ஏ-க்கள்!

சமீபத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றில், மூன்று தொகுதிகளில் இரண்டை தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. அவற்றில் காப்பிய நகரில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் மலைக்கடவுள் பிரமுகர், மாவட்டத்துக்கும் பொறுப்பு வகிக்கிறார். அந்த கோதாவில், பொதுப்பணித்துறை டெண்டர்களை அவரே கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஒப்பந்ததாரர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறாராம்.

மாப்பிள்ளை சீர்வரிசை முதல் திமுக அமைச்சருக்கு சால்வை அணிவித்த பாஜக பிரமுகர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

இந்த விவகாரத்தில் தன்னை கலந்தாலோசிப்பதில்லை என்று பக்கத்து தொகுதியைச் சேர்ந்த வாசனை எம்.எல்.ஏ-வுக்கு ஏக வருத்தமாம். "டெண்டர் இறுதி செய்யும்போது என்னிடமும் ஆலோசிக்க வேண்டும்" என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறாராம் வாசனை எம்.எல்.ஏ. இதனால் கட்சிக்குள் ஏகத்துக்கும் புகைச்சல் எழுந்திருக்கிறது.

அமைச்சருடன் மல்லுக்கட்டும்
மாவட்டச் செயலாளர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் கலந்துகொள்வதில்லை. ஆனால், அந்தந்தப் பகுதி ஒன்றியச் செயலாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அதேசமயம் வெளியூர்களிலிருந்து அமைச்சர்கள் அந்த மாவட்டத்துக்கு வந்தால், சுரேஷ்ராஜன் முதல் ஆளாகக் கலந்துகொள்கிறார்.

சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ்
சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ்
ராம்குமார்

மனோ தங்கராஜுக்கும் சுரேஷ் ராஜனுக்கும் உட்கட்சித் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட பகை இன்னும் தொட்டுத் தொடர்கிறது என்கிறார்கள்.

துரை.செந்திலின் கைதுப் பின்னணி?

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரான துரை.செந்திலை, மதுக்கூர் போலீஸார் சமீபத்தில் கைதுசெய்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதத்தில் பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஒதியடிக்காடு கிராமத்துக்கு ‘அம்மா மினி கிளினிக்’ திறப்புவிழாவுக்கு வருகை தந்தார் அப்போது எம்.பி-யாக இருந்த வைத்திலிங்கம். அவர் நான்கு மணி நேரம் தாமதமாக விழாவுக்கு வந்ததால், ‘`நீயெல்லாம் ஒரு ஆளு... உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது?’’ எனக் கேட்டு வைத்திலிங்கத்தைத் தகாத வார்த்தைகளால் திட்டினார் வைரவமூர்த்தி எனும் நபர். அவரை அப்போதே கைதுசெய்தார்கள் மதுக்கரை போலீஸார். அந்த வழக்கில், வைரவமூர்த்தி அப்படி பேசத் தூண்டுதலாக இருந்தார் என்றுதான் துரை.செந்திலைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

துரை.செந்தில் -  வைத்திலிங்கம்
துரை.செந்தில் - வைத்திலிங்கம்

அதுகுறித்து விசாரிக்கச் சென்றால், "வைத்திலிங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை துரை.செந்தில் குறிவைத்ததால்தான், பழைய வழக்கு தூசு தட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" என்று காதைக் கடிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். மாநிலக் கூட்டுறவு வங்கியின் தலைவரான சேலம் இளங்கோவன் மூலம், சமீபத்தில் துரை.செந்தில், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியபோது, ‘‘வைத்திலிங்கத்தின் நடவடிக்கையால தஞ்சாவூர் மாவட்டத்துல கட்சி வளர்ச்சியடையாம தேஞ்சுகிட்டு இருக்கு. அவர் வகித்துவரும் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எனக்குக் கொடுங்க. சிறப்பாகச் செயல்படுவேன்’’ என்று கொளுத்திப் போட்டாராம். இந்தத் தகவல் முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் வைத்திலிங்கத்தின் காதுகளுக்கு வரவே, இந்த நடவடிக்கை என்கிறார்கள்!

தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு
அ.தி.மு.க பிரமுகரின் பாரட்டு போஸ்டர்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான கதிரவனின் செயல்பாடுகளைப் பாராட்டி, அ.தி.மு.க-வின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்கும் சம்பவம்தான் ஏரியாவில் ஹாட் டாபிக்.

போஸ்டர்
போஸ்டர்
தீட்ஷித்

‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் சில எம்.எல்.ஏ-க்கள் தொகுதிக்குள் தலைகாட்டாதது, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யாதது என, எதுவும் பெரிதாகச் செய்யாத நிலையில், கதிரவன் மட்டும் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்ததோடு, வீட்டில் ஒருவருக்கு இலவச மருத்துவம் எனப் பல பணிகளை மேற்கொண்டுள்ளார்’ எனப் பாராட்டி போஸ்டர் அடித்திருக்கிறார் அந்த அ.தி.மு.க நிர்வாகி. ‘‘அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு எப்படி தி.மு.க எம்.எல்.ஏ-வைப் புகழலாம்? அவரைக் கட்சியை விட்டு நீக்குங்கள்...’’ என்று அ.தி.மு.க-வில் முருகானந்தத்துக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன!

அடுத்த கட்டுரைக்கு