Published:Updated:

சசிகலா ரீ-என்ட்ரி முதல் செந்தில் பாலாஜியின் அதிமுக பாசம் வரை ! - கழுகார் அப்டேட்ஸ்

``உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை கவனித்துவருகிறேன்... செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் கழுகார்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி...
சசிகலாவுக்குச் சாதகமா?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான அக்டோபர் 12-ம் தேதி காலையிலேயே செய்தி சேனல்கள் முன்பு உட்கார்ந்துவிட்டாராம் சசிகலா. அன்று மதியம் வரை வெளிவந்த முடிவுகள் அனைத்தும் அ.தி.மு.க-வுக்குப் பாதகமாகவே இருந்ததால், தென்மாவட்டங்களிலிருந்து அ.தி.மு.க தலைவர்கள் சிலர் சசிகலாவின் உதவியாளருக்குத் தொடர்ச்சியாக அழைத்திருக்கிறார்கள். ‘‘சின்னம்மாகிட்ட பேசணும். பன்னீர், எடப்பாடி ரெண்டு பேரும் கட்சியையே காலி பண்ணிட்டாங்க.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.

2019 உள்ளாட்சித் தேர்தல்ல தி.மு.க சரிபாதி எண்ணிக்கையில ஜெயிச்சிருந்தது. அந்த அளவுக்குகூட இப்போ நாம ஜெயிக்கலை. சின்னம்மா வந்தாத்தான் எல்லாம் சரியாகும்’’ என்றிருக்கிறார் தூங்கா நகரத்து முன்னாள் அமைச்சர் ஒருவர். ஆனால், யாருடனும் சசிகலா பேசவில்லையாம். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பின்னடவைச் சந்தித்திருப்பதையே, தனக்கான ரீ-என்ட்ரியாகப் பார்க்கிறாராம் சசி!

பொறுப்புக்கு முட்டிமோதும் ‘காளை’ பிரமுகர்!

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு கோவை தி.மு.க மாவட்டப் பொறுப்பில் மாற்றங்கள் வரும் என்று ஏற்கெனவே தலைமையில் சொல்லப்பட்டதாம். இதையடுத்து, புதிய பொறுப்புகளுக்குக் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

கோவை
கோவை

இதில் பக்கத்து மாவட்ட ‘காளை’ பிரமுகரும் முட்டிமோதுகிறாராம். ‘அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவரை இழுத்துவருகிறேன்’ என்று சொல்லி, கோவை பொறுப்புக்காகத் தலைமையிடம் தூதுவிட்டிருக்கிறார். உள்ளூர் உடன்பிறப்புகளோ, ‘அவர் தேர்தல் நேரத்துலயே இறங்கி வேலை செய்யலை... அவரெல்லாம் மாவட்டப் பொறுப்புக்கு செட் ஆக மாட்டார்’ என்று காளை பிரமுகருக்கு எதிராகப் புகார்களை அனுப்பத் தொடங்கிவிட்டார்கள்.

``துரைமுருகனை எதிர்க்கக்கூடத் துணிவில்லையா?’’
மனம் புழுங்கும் ம.தி.மு.க நிர்வாகிகள்!

வைகோவை ‘துரோகி’ என்று உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது ம.தி.மு.க-வினரை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கொதித்துப்போய், துரைமுருகனைக் கண்டித்துப் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள்.

வைகோ
வைகோ

விஷயம் ம.தி.மு.க தலைமைக்குத் தெரியவந்ததும், போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டதாம். ‘துரைமுருகனின் பேச்சைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிடுகிறோம்’ என்று கேட்டதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாம். ``எம்.ஜி.ஆரை துரோகினு துரைமுருகன் சொன்னதற்கு, அ.தி.மு.க-வினர் தங்களோட எதிர்ப்பைக் காட்டிட்டாங்க. ஆனா, எங்களால அது மாதிரி எதிர்ப்பை வெளிப்படுத்த முடியலையேனு வேதனையா இருக்கு. கூட்டணியில இருக்குறதால, தி.மு.க-வையோ, ஸ்டாலினையோ விமர்சிக்கவேண்டியதில்லை. ஆனா, துரைமுருகன்கிற தனிநபரைக் கண்டிச்சு போராட்டம் நடத்தவோ, கண்டன அறிக்கை வெளியிடவோகூட சுதந்திரம் இல்லையே?’’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள் திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க நிர்வாகிகள்.

மிஸ்டர் கழுகு: சென்டிமென்ட்... காமெடி... காரசாரம்... அ.தி.மு.க ‘நவரசா’ கூட்டம்!
அ.தி.மு.க-வினர்மீது செந்தில் பாலாஜிக்கு என்ன அக்கறை?

தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதுபான கிடங்கிலிருந்து மதுபாட்டில்களை லோடு வேன் மூலம் டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு ஒப்பந்தம்விட வேண்டும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் விடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளே எடுத்திருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதத்துடன் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்ட நிலையில், புதிய ஒப்பந்தம் விட வேண்டும். இதை எடுக்க தி.மு.க புள்ளிகள் முயன்றுவரும் நிலையில், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி டெண்டரை நடத்தவிடாமல் இழுத்தடிக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஏற்கெனவே ஒப்பந்தம் எடுத்திருக்கும் அ.தி.மு.க புள்ளிகள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்பதால், இதற்கான டெண்டர்விட செந்தில் பாலாஜி முட்டுக்கட்டை போடுகிறார். அவர்கள்மீது அமைச்சருக்கு ஏன் இந்த அக்கறை?’’ என்று கொந்தளிக்கிறார்கள் டெல்டா மாவட்ட தி.மு.க புள்ளிகள்!

ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்த கனிமொழி!

தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பாட்டிலுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொழுதுபோக்குப் பூங்காக்கள், நவீன பேருந்து நிறுத்தங்கள் ஆகிய பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. பேருந்து நிலையம், தார்ச்சாலைகள், கழிவுநீர்க்ல்வாய்கள் உள்ளிட்ட பணிகள் ஆமை வேகத்திலேயே நடந்துவருகின்றன. இது றித்து தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் மக்கள் புகார் வாசித்திருக்கிறார்கள். இதையடுத்து திடீரென ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டிய கனிமொழி, பணிகளின் மந்தமாக நடந்துவருவது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் விசாரித்திருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

அவர்கள் கொரோனா ஊரடங்கைக் காரணமாகச் சொன்னாலும், உண்மையில் ஒப்பந்ததாரர்கள் பலரிடமும் அந்த வேலையைச் செய்வதற்கான கட்டமைப்பே இல்லையாம். இதையடுத்து, ஒப்பந்ததாரர்களையும், மாநகராட்சி அதிகாரிகளையும் கடுமையாக டோஸ்விட்ட கனிமொழி, ``என்ன செய்வீங்களோ தெரியாது... இன்னும் ஒன்றரை வருஷத்துக்குள்ள எல்லா வேலைகளையும் முடிச்சாகணும்!” என்று உத்தரவிட்டிருக்கிறார்!

ஒலிம்பிக் சங்கத்தில் அ.தி.மு.க ஆதிக்கம்!

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு செய்யப்பட்டதில் முதலமைச்சர் குடும்ப உறுப்பினரின் ஆசியும் காரணமாம். அதேநேரம், ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவராக 3-வது முறையாக மதுரையைச் சேர்ந்த சோலைராஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். செல்லூர் ராஜூவின் தீவிர ஆதரவாளரான இவர், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத் தலைவராகவும், எம்.ஜி.ஆர் இளைஞரணி மதுரை மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார்.

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

`கடந்த ஆட்சியில் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆசிரியர்களை வைத்து எடப்பாடிக்கு பல விழாக்களை எடுத்தவர், எப்படி மீண்டும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் என்ற பவர்ஃபுல்பான பதவிக்கு வர முடிந்தது?’ என்று அ.தி.மு.க தரப்பில் விசாரித்தால், ‘‘தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் ஆசியால்தான் இது சாத்தியப்பட்டது’’ என்கிறார்கள். இதுபோல் ராஜன் செல்லப்பா மகனும், அ.தி.மு.க ஐடி விங் செயலாளருமான ராஜ் சத்யனும் ஒலிம்பிக் சங்க துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதைப் பார்த்து ‘நடப்பது நம்ம ஆட்சியா... இல்லை அ.தி.மு.க ஆட்சியா?’ என்று ஆதங்கப்படுகிறார்கள் உடன்பிறப்புகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செல்லூர் ராஜூவுக்கு எதிராக சீனியர்கள் சீற்றம்!

``கட்சியில் புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால்தான் வருகிற மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற காரணத்தைச் சொல்லியே, நீண்டகாலமாக அ.தி.மு.க-வில் வட்டச் செயலாளர்களாக இருந்தவர்களைத் தூக்கிவிட்டு, தனக்கு வேண்டப்பட்ட ஆட்களையே நியமித்துவருகிறார்’’ என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது மதுரை அ.தி.மு.க-வுக்குள் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. அத்துடன், ``கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்குத் தொகுதியில் ம.தி.மு.க-வின் பூமிநாதனுக்கு வேலை பார்த்தவர்களுக்கும், டி.டி.வி.தினகரன் அணிக்குப் போய்விட்டு அ.தி.மு.க-வுக்குத் திரும்பியவர்களுக்கும்தான் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

தன் மகளை மேயராக்க, ஒவ்வொரு வார்டிலும் தனக்கு நெருக்கமானவர்களை நியமித்துவருகிறார். அதற்கு வயதைக் காரணம் காட்டுகிறார். அவருக்கும்தான் வயதாகிவிட்டது. மாநகரச் செயலாளர் பொறுப்பை இளைஞர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதுதானே?’’ என்று பொங்கும் சீனியர்கள், செல்லூர் ராஜூவுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட திட்டமிட்டுவருகிறார்கள்.

ரவிச்சந்திரனுக்கு பரோல்...
உறுதியளித்த கனிமொழி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, தற்போது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் வசித்துவருகிறார். சமீபத்தில் ‘என் மகனை பரோலில் விட அனுமதிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேஸ்வரி தொடர்ந்த வழக்கில், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு பரிசீலனை செய்து, தகுந்த உத்தரவு வழங்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறது நீதிமன்றம்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

இந்த நிலையில்தான், தூத்துக்குடியில் கனிமொழியைச் சந்தித்து மனு அளித்த ரவிச்சந்திரனின் தாயார், ``என் மகன் எங்களைவிட்டுப் பிரிஞ்சு போயி 30 வருஷமாச்சும்மா. எனக்கும் உடம்புக்கு முடியலை. என்னோட கடைசி காலத்துல எனக்கு ஆறுதல் சொல்லவும், கவனிச்சுக்கவும் என் மகன் எங்கூட இருக்கணும்னு நினைக்கேன். அவனை பரோலுல விடறதுக்கு முதல்வர்தான் மனசுவெக்கணும். நீங்களும் ஒரு வார்த்தை சொல்லுங்கம்மா’’ என்று முறையிட, ‘‘சீக்கிரமே உங்க மகன் உங்ககிட்ட வருவாங்கம்மா’’ என்று கனிமொழியும் உறுதியளித்திருக்கிறார்.

`கலகம் மூட்டத் தயாராகும் அதிமுக வேட்பாளர் முதல் கைக்கு வராத ஸ்வீட் பாக்ஸ்கள் வரை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு