Published:Updated:

கேரளா: பி.எஸ்.பி வேட்பாளரைக் கடத்தியதாக பா.ஜ.க தலைவர்மீது வழக்கு; போராட்டம் அறிவித்த பா.ஜ.க தலைமை!

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

'நீங்கள் உங்கள் விருப்பம்போல பொய் வழக்கு போட்டால் சட்டரீதியகவும், அரசியல்ரீதியாகவும் உள்துறை அமைச்சரும் போலீஸ் அதிகாரிகளும் அதற்கான விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்' என கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் மஞ்சேஸ்வரம், கோணி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன். அவர் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கே.சுரேந்திரன் 2016 சட்டசபைத் தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவரது பெயரைப் போன்று வரும் பி.எஸ்.பி வேட்பாளர் கே.சுந்தர 467 வாக்குகள் பெற்றிருந்தார். ஒருவேளை கே.சுந்தர போட்டியிடாமல் இருந்தால் கே.சுரேந்திரன் வெற்றிபெற்றிருப்பார் என பா.ஜ.க-வினர் கருதினர். இந்தநிலையில், கடந்த தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் மீண்டும் கே.சுந்தர வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதுடன், திடீரென பா.ஜ.க-வில் இணைந்தார். இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த கே.சுந்தர, "நான் போட்டியிடாமல் வேட்புமனுவை வாபஸ் பெற்றால், 15 லட்சம் ரூபாயும், ஒரு ஸ்மார்ட்போனும் தருவதாக பா.ஜ.க-வினர் கூறினர். முதற்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாயும், ஸ்மார்ட்போனும் தந்தனர். மீதிப் பணத்தைக் கேட்டதற்கு வெற்றிபெற்ற பிறகு பார்க்கலாம் என்றனர். அதன் பிறகு என்னை ஏமாற்றிவிட்டனர்" என்றார். இது குறித்து கே.சுந்தர காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பா.ஜ.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ்
கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ்

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ் கூறுகையில், "பி.எஸ்.பி இந்தியாவின் முக்கிய தேசியக் கட்சிகளில் ஒன்று. கே.சுந்தர கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்குவதாக எழுதிக்கொடுத்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். அதை வற்புறுத்தி வாபஸ் பெறவைத்தததாக எப்படி போலீஸ் வழக்கு எடுக்கும்.

தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்த பிறகு அவர் குற்றச்சாட்டைச் சொல்கிறார். அவரை யாராவது அப்படி சொல்லும்படி கூறியிருக்கலாம். அவரைக் கடத்திக்கொண்டு போனதாக போலீஸார் கேஸ் எடுத்திருக்கிறார்கள். இது சட்டரீதியாக செய்ய வேண்டிய விஷயம். பணம் தந்தார்கள் எனக் கூறும் அதே பேட்டியில், என்னை கே.சுரேந்திரன் நேரில் பார்க்கவில்லை என்கிறார். காணாத ஒருவர் மீது எப்படி வழக்கு போடுவீர்கள்? எனவே, வேண்டுமென்றே பா.ஜ.க மாநிலத் தலைவர் மீது ஜாமீன் இல்லாத பிரிவில் வழக்கு பதிவு செய்து, வேண்டுமென்றே அவரை வேட்டையாடும் முயற்சி நடக்கிறது.

கே.சுரேந்திரன், கே.சுந்தர
கே.சுரேந்திரன், கே.சுந்தர

பா.ஜ.க மாநிலத் தலைவர் மீது பொய் வழக்கு போட்டு அவரைக் கைது செய்து கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் செயல்படக் கூடாது என முதல்வருக்கும் இந்த அரசுக்கும் கூறிக்கொள்கிறேன். பி.ஜே.பி-யோடும், கே.சுரேந்திரனோடும் உங்களுக்குக் கட்சிரீதியாக விரோதம் இருக்கலாம். அதை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மாறாக, அவர்மீது பொய் வழக்கு போட்டு, அவரைச் சிறையில் அடைத்து பழி தீர்க்கலாம் என நீங்கள் நினைக்க வேண்டாம். இது இந்தியா என்பதை முதல்வர் நினைக்க வேண்டும். இது கம்யூனிஸ்ட் நாடு அல்ல. இது ஜனநாயக நாடு.

இங்கு நீங்கள் உங்கள் விருப்பம்போல பொய் வழக்கு போட்டால் சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் உள்துறை அமைச்சரும் போலீஸ் அதிகாரிகளும் அதற்கான விலை கொடுக்க வேண்டிய நிலை வரும். மாநிலத் தலைவர் மீது வழக்கு போட்டதை கண்டித்து நாளை பத்தாயிரத்துக்கும் அதிகமான இடங்களில் போராட்டம் நடத்தவிருக்கிறொம். கொரோனா விதிகளை பின்பற்றிப் போராட்டம் நடக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு