Published:Updated:

`தலைமை இல்லாத அவஸ்தை..!'- ஆதங்கப்படும் கேரள பி.ஜே.பி-யின் ஒரே எம்.எல்.ஏ

பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால்
பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால்

தலைவர் இல்லாதது கட்சியின் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. இதுபோன்ற நிலை இதற்கு முன்பு இருந்ததில்லை. மாநிலத் தலைவர் இல்லாததால் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சி.பி.எம் கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் நடத்தும் போராட்டங்களுக்குப் பதிலடி போராட்டத்தை நடத்த பி.ஜே.பி-யால் முடியவில்லை.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரள மாநிலத்தில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமைச் சட்டத்திருத்தம் கொண்டுவந்த தொடக்கத்தில் கேரளத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சியான காங்கிரஸும் போராட்டம் நடத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அத்துடன் நிற்காமல் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என 11 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். மேலும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை கலந்தாலோசிக்காமல் வழக்கு தொடர்ந்ததற்கு கேரள ஆளுநர் ஆரிப் முஹம்மது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பினராயி  விஜயன், ஆரிஃப் முகமது கான்
பினராயி விஜயன், ஆரிஃப் முகமது கான்
http://www.keralacm.gov.in/

இந்த நிலையில், கேரள மாநில பி.ஜே.பி. சொல்லிக்கொள்ளும்படியாக எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பி.ஜே.பி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், குடியுரிமைச் சட்டத்தை கேரள அரசு கடுமையாக எதிர்க்கும் நிலையில், அம்மாநில பி.ஜே.பி அமைதியாக இருப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பி.ஜே.பி தலைவர் நியமிக்கப்படாததால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்குப் பதிலடி போராட்டங்கள் நடத்த முடியவில்லை என அக்கட்சி எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பி.ஜே.பி தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பி.ஜே.பி-க்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. அதுபோன்று கேரள மாநில பி.ஜே.பி தலைவராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் மாநில ஆளுநராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டர். அதன் பிறகு கேரள மாநில பி.ஜே.பி-க்கும் தலைவர் நியமிக்கப்படவில்லை. இதைத்தான் காரணமாக காட்டுகிறார் கேரள பி.ஜே.பி-க்கு கிடைத்த முதல் எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால்.

ஓ.ராஜகோபால்
ஓ.ராஜகோபால்

இதுகுறித்து அவர் கூறுகையில், ``கேரளத்தில் பி.ஜே.பி தலைவர் இல்லாதது கட்சியின் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. இதுபோன்ற நிலை இதற்கு முன்பு இருந்ததில்லை. மாநிலத் தலைவர் இல்லாததால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சி.பி.எம் கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் நடத்தும் போராட்டங்களுக்குப் பதிலடி போராட்டத்தை தீவிரமாக நடத்த பி.ஜே.பி-யால் முடியவில்லை.

சமயோஜிதமாக முடிவு எடுப்பதற்கு தலைமை இல்லாத அவஸ்தை முதன்முறையாக கேரள பி.ஜே.பி-க்கு ஏற்பட்டுள்ளது. மாநில பி.ஜே.பி-க்கு நெருக்கடி இருக்கிறது. பல தலைவர்கள் இங்கு இருந்தாலும், பொறுப்பான தலைவர் என குறிப்பிட்ட ஒருவர் இருக்க வேண்டுமல்லவா. இதுகுறித்து அமித் ஷாவுக்கு கடிதம் மூலமும், அகில இந்திய பி.ஜே.பி தலைவர் ஜே.பி.நட்டாவிடம் நேரடியாகவும் தெரிவித்துள்ளேன்" என்றார்.

பின் செல்ல