Published:Updated:

`இது ஒன்றும் சீனா இல்லை பினராயி விஜயன்!' - கொரோனா விவகாரத்தில் கொதித்த ரமேஷ் சென்னிதலா

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா
கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா

`வெளிநாட்டில் உள்ள மலையாளிகளை மீட்க விமானம் அனுப்பாத கேரள அரசு இப்போது வருபவர்களிடம் கொரோனா தொற்று இல்லை எனச் சான்றிதழ் கேட்கிறது' எனக் கொதிக்கிறார் ரமேஷ் சென்னிதலா.

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை எனச் சோதனை செய்துவிட்டு வர வேண்டும் எனக் கேரள அரசு கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும், வெளிநாட்டில் சிக்கியுள்ள மலையாளிகளை அழைத்து வர கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

போராட்டத்தில் பேசிய ரமேஷ் சென்னிதலா, "கொரோனா காலத்தில் இப்படி ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. வெளிநாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மலையாளிகளின் கஷ்டங்கள் சகிக்க முடியாத அளவு இருப்பதால் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த சத்யாக்கிரகப் போராட்டங்கள் நடக்கின்றன.

வெளிநாடுகளில் அதிக அளவு வசிக்கும் மலையாளிகள் அனுப்பும் பணத்தால்தான் இந்தியாவிலேயே முதல் இடத்தில் கேரளம் வளர்ந்துவருகிறது. கேரளத்தில் பேரிடர் காலங்களில் அவர்கள் தானாக முன்வந்து உதவுகிறார்கள். இப்போது அவர்களுக்குப் பிரச்னை என்றதும் கேரள அரசு வாசல்களை அடைக்கும் செயலை திருத்தவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் மலையாளிகள் ஒரு அறையில் 15, 20 பேர் வசிக்கிறார்கள். அதில் மருந்து வாங்க முடியாதவர்கள், ஒரு நேர உணவுக்குக் கஷ்டப்படுகிறவர்கள், விசா காலம் முடிந்ததும் சாலையில் நடக்க முடியாதவர்கள் என அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

போராட்டத்தில் பேசும் ரமேஷ் சென்னிதலா
போராட்டத்தில் பேசும் ரமேஷ் சென்னிதலா

விசா காலம் முடிவடைந்ததாலும், வேலை இல்லாததாலும் மனதளவில் பாதிக்கப்பட்ட 18 பேர் மனநல மருத்துவமனையில் கவுன்சலிங் பெற்றுவருகின்றனர். மத்திய மாநில அரசுகள் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் மலையாளிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுக்க முடியாது எனக் கேரள அரசு கூறியுள்ளது.

லாக்டௌன் தொடங்கிய ஒரு வாரத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளை அனுப்பி பிற மாநிலங்களில் உள்ள மலையாளிகளை மீட்டிருக்கலாம். அதை இந்த அரசு செய்யத் தவறிவிட்டது. வெளிநாட்டில் உள்ள மலையாளிகளை மீட்க விமானம் அனுப்பவில்லை. ஆனால், இப்போது வரும் மலையாளிகளிடம் கொரோனா தொற்று இல்லை எனச் சான்றிதழ் வேண்டும் என அரசு கேட்கிறது.

முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டில் வசிக்கும் மலையாளிகளை வஞ்சிக்கிறார். கேரளத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இங்கு வர உரிமை இருக்கிறது. ஐதராபாத், மும்பையில் இருந்து ரயிலில் வருபவர்கள் கொரோனா இல்லை எனச் சான்றிதழ் வாங்கிக்கொண்டா வருகிறார்கள். ஆரம்பம் முதலே கேரள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் சரியானதாக இல்லை.

ரமேஷ் சென்னிதலா
ரமேஷ் சென்னிதலா

தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்துக்கு ஷெட் அமைக்கக்கூடாது என பினராயி விஜயன் கூறுகிறார். அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு ஷெட் போட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இது ஒன்றும் சீனா அல்ல என்பதை பினராயி விஜயன் உணர வேண்டும்.

தலைமைச் செயலகம் முன்பு போராடம் நடத்த பினராயி விஜயனின் அனுமதி தேவையில்லை. இங்கு மன்னர் ஆட்சியா நடைபெறுகிறது. கொரோனா காலத்தில் நம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒருவர் வெளிநாட்டில் இருப்பார். அவர்கள் இங்கு வரக்கூடாது எனக்கூற பினராயி விஜயனுக்கு யார் அனுமதி கொடுத்தது?" என்றார் ஆவேசத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு