Election bannerElection banner
Published:Updated:

`வென்றது கிச்சன் கேபினெட்!’ - உதயநிதிக்கு சீட் கிடைத்தது எப்படி?

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்

ஒட்டுமொத்த தி.மு.க-வினரும் எதிர்பார்த்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுவிட்டார். போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில், எப்படி அறிவிப்பு வெளியானது? பின்னணியைப் பார்ப்போம்.

தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் எதிர்பார்த்தபடியே அதிகமான வாரிசுகள் களம் காண்கின்றனர். அதிலும், குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா, இல்லையா என்கிற விவாதம் கட்சியினர் மத்தியில் கடந்த சில நாள்களாகவே பேசுபொருளாக இருந்தது. அதற்கான விடை இன்று கிடைத்திருக்கிறது.

எதிர்பார்த்தபடியே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இது குறித்து தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இளைஞரணி மாநிலச் செயலாளராக உதயநிதி திடீரென நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக வேண்டும் என்பதுதான் உதயநிதியின் ஆசை.

இதற்கு ஸ்டாலினும் பச்சைக்கொடிகாட்டவே, தீயாக வேலை செய்தார் உதய். இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் நேரத்தில் மாப்பிள்ளை வடிவில் வந்தது வில்லங்கம். ஐபேக்கைக் கையில் போட்டுக்கொண்டு, இம்முறை உதய் போட்டியிடுவது செட்டாகாது என முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் சபரீசன். `நம் வாரிசுக்கு சீட் கொடுத்தால் எல்லோரும் கேட்பார்கள்' என்று அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். இது அரசல் புரசலாகக் கசிந்து தி.மு.க-வினர் மத்தியில் விவாதப் பொருளானது.

சபரீசன்
சபரீசன்

இது குறித்த விவாதம் குடும்பத்துக்குள்ளும் பூகம்பத்தைக் கிளப்பியது. `கிச்சன் கேபினெட்' வானத்துக்கும் பூமிக்கும் குதித்துவிட்டார். தலைவருக்கு அடுத்த இடத்தில் உதயைக் களமிறக்கினார்கள். அந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மாப்பிள்ளை இப்படிச் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

குடும்பத்தில் நடந்த பிரச்னையில் தலைவரின் உடல்நிலையே பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில், இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை நோட்டம்விட்ட கிச்சன் கேபினெட், 'இத்தனை நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கிறீர்கள்... நம் வாரிசுக்கு ஒரு சீட் இல்லையா?' என லாஜிக்கான கேக்வியைக் கேட்டிருக்கிறார். மீண்டும் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பேசி, கடைசியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உதயநிதி பெயர் சேர்க்கப்பட்டது. ஒருவழியாக கிச்சன் கேபினெட் சபதத்தில் வென்றுவிட்டார்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு