Published:Updated:

``மு.க.ஸ்டாலின் அநீதி இழைப்பவர்களுக்குத்தான் ஆபத்தானவர்" - தி.க தலைவர் கி.வீரமணி பேச்சு!

மு.கருணாநிதியைவிட மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என ஓர் அறிவாளி பேசியிருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதியைத் தூக்கித் திரிவோர்களுக்கும், அநீதி இழைப்பவர்களுக்கும்தான் ஆபத்தானவர். 

திண்டுக்கல்லில் திராவிடர் கழகம் சார்பில் `கற்போம் பெரியாரியம்', `ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை' என்ற இரண்டு நூல் வெளியீட்டு விழா, `நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன், எதற்காக?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ``பாஜக-வினர், பலருக்குப் பயிற்சி கொடுத்து இணையத்தில் பொய்த் தகவல்களைப் பரப்பிவருகின்றனர். ஆர்எஸ்எஸ், பாஜகவிலுள்ள பார்ப்பனர் அல்லாத பெற்றோர்களின் குழந்தைகளுக்காகவும்தான் திராவிடர் கழகம் போராடிவருகிறது. நீட் தேர்வு நம் மீது திணிக்கப்படுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து பேசிவருகிறேன். எல்லாப் பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன்.

நூல் வெளியீடு
நூல் வெளியீடு

பெரியாரின் சிந்தனை எழுத்துகள் இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் புத்தகங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதன் மூலம் பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தில் சிலர் தமிழர்கள், திராவிடர்கள் என டிரோஜன் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்களையும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கவனமாகக் கையாள வேண்டும். டாஸ்மாக்கால் வீழ்ந்தவர்கள், திராவிடத்தால் வீழ்ந்தோம் எனப் பேசிவருகின்றனர்.மு.கருணாநிதியைவிட மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என ஓர் அறிவாளி பேசியிருக்கிறார். அவர் சொன்னதுபோல மு.க.ஸ்டாலின் சாதியைத் தூக்கித் திரிவோர்களுக்கும், அநீதி இழைப்பவர்களுக்கும்தான் ஆபத்தானவராக இருக்கிறார். அவர் மு.க.ஸ்டாலினை நல்லவர் எனப் பேசியிருந்தால்தான் நாம் யோசித்திருக்க வேண்டும்.

``ஊழலில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும்'' - கி.வீரமணி
தி.க தலைவர் கி.வீரமணி
தி.க தலைவர் கி.வீரமணி

குலக்கல்வித் திட்டம்தான் நீட் தேர்வாக வந்துள்ளது. இது சட்டவிரோதம் மட்டுமல்ல; மாநில உரிமையைப் பறிக்கும் திட்டமாக உள்ளது. திமுக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் வித்தை காட்டுவதாகச் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். திமுக அரசு மிகவும் தெளிவாக இந்த விவகாரத்தை அணுகுகிறது. சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு மாசோதாக்களை நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு முன்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்து நீட் தேர்வு பாதிப்பு குறித்து அறிக்கை பெற்றிருக்கிறது. இந்த அறிக்கையின்படி, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை இந்தி உட்பட எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருகிறது. இது பிற மாநில அரசுகளுக்கும் தேவைப்படும். இந்தியாவுக்குத் தமிழகம்தான் முன்னோடியாக எப்போதும் இருக்கிறது.

நீட் தேர்வு கொண்டுவர இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை. நீட் தேர்வு காரணமாக, தமிழகத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இனி ஒரு தற்கொலை சம்பவம் நடந்துவிடக் கூடாது. அதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் போராடத் தயாராக இருக்க வேண்டும். அரசு செய்துவிடும் எனக் காத்திருக்கக் கூடாது. மருத்துவப் படிப்புக்கு மாநில அரசு 85 சதவிகிதம் நிதி கொடுக்கிறது. மத்திய அரசு 15 சதவிகிதம்தான் நிதி கொடுக்கிறது. ஆனால் தேர்வு மட்டும் நாங்கள் நடத்துவோம் என்பதை ஏற்க முடியாது. சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வுக்கு தமிழகத்து விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு