Published:Updated:

`அன்பில் மகேஷுக்கு மா.செ பதவி; பிரிக்கப்படும் திருச்சி?'- பொங்கும் நேரு ஆதரவாளர்கள்

அன்பில் மகேஷ் - கே.என்.நேரு
அன்பில் மகேஷ் - கே.என்.நேரு

அன்பில் மகேஷுக்காக திருச்சி மாவட்டத்தை மூன்றாக பிரிக்க இருக்கிறது தி.மு.க தலைமை. அன்பில் மகேஷை திருச்சி மாவட்டத்துக்குள் கொண்டுவருவதற்காகதான் இந்த ஏற்பாடு என்று ஆதங்கப்படுகிறார்கள் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள்.

தி.மு.க-வின் முதன்மைச் செயலராக இருந்து வந்தவர் டி.ஆர் பாலு. அவரிடமிருந்த அந்தப் பதவி கட்சித் தலைமையால் பறிக்கப்பட்டு கே.என்.நேருவுக்கு கொடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் ஆளும் கட்சியினர் மீது இவ்வளவு வெறுப்புகள் இருந்தும் எதிர்பார்த்த வெற்றிகள் பெறமுடியவில்லை என்பதை ஸ்டாலின் பேச்சின் மூலமாகக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. இந்த நிலையில் கோஷ்டி பூசல், உள்ளடி வேலைகள் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரானது தலைமை. அத்தோடு அறிவாலயத்தின் தலைமைப் பொறுப்புகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

ஸ்டாலின், கே.என்.நேரு
ஸ்டாலின், கே.என்.நேரு

இதனிடையே, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, கூடுதலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கான வேலைகளையும் பார்த்து வந்தார். இரு பதவிகள் வகிப்பதால் அவருக்கு கூடுதல் சுமையாக இருந்தது. அதனால் கே.என்.நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. முதலில், தி.மு.க தலைமையின் இந்த முடிவை கே.என்.நேருவும் ஆட்சேபித்ததாகவும் ஸ்டாலின் சமாதானம் செய்த நிலையில் அவர் அமைதியானதாகவும் சொல்கிறார்கள்.

`நான் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன்!'- பதவி பறிப்பால் கொதித்த டி.ஆர்.பாலு

இதன் காரணமாக தற்பொழுது திருச்சி மாவட்டச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், திருச்சி தி.மு.க-வில் தற்போது வடக்கு மற்றும் தெற்கு என உள்ளது. தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர்தான் கே.என் நேரு. வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளார். தற்போது நேரு மாநில பதவிக்குச் செல்வதால் அவருக்குப் பிறகு மாவட்டச் செயலாளராக யார் வந்தாலும் சமாளிக்க முடியாது என்பதால் திருச்சியை தி.மு.க மூன்றாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற ரீதியில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இதன் அடிப்படையிலும் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஒரு மாவட்டச் செயலாளருக்கும், திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி ஆகியவை ஒரு மாவட்டச் செயலாளருக்கும் ஒதுக்கப்படலாம். இல்லை மணச்சநல்லூர் துறையூர், முசிறி ஆகியவை மாவட்டச் செயலாளர்களுக்கு ஒதுக்கப்படலாம். இல்லை என்றால் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பறை ஒரு மாவட்ட செயலாளருக்கும், திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஒரு மாவட்டச் செயலாளருக்கும் கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் திருச்சி மூன்றாகப் பிரிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் அந்தந்த மாவட்டங்களுக்கு யார் தலைவர்கள் என்ற தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. இது எல்லாமே அன்பில் மகேஷை திருச்சி மாவட்டத் தலைமைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் என அக்கட்சி நிர்வாகிகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். முக்கியத் தலைவர்களுக்குகூட இந்த மாதிரி மாவட்டங்களைப் பிரித்தது கிடையாது. ஆனால், மகேஷுக்காக பிரிக்க என்ன காரணம் என்றெல்லாம் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு