Published:Updated:

`டெல்லிக்கு டி.ஆர்.பாலு; அறிவாலயத்துக்கு கே.என்.நேரு!' - திடீர் மாற்றத்தின் பின்னணி

ஸ்டாலின் - கே.என்.நேரு
ஸ்டாலின் - கே.என்.நேரு

சென்னையில் ஸ்டாலினுடன் இருக்கும் வகையில் ஏற்கெனவே துரைமுருகன் வகித்த, தற்போது டி.ஆர்.பாலு வகித்துவரும் முதன்மைச் செயலாளர் பதவியில் கே.என்.நேருவைக் கொண்டுவந்திருக்கிறார்கள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அறிவாலயத்தின் தலைமைப் பொறுப்புகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். அந்தவகையில், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகவும் டி.ஆர்.பாலு இருந்து வருகிறார்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருப்பவருக்கு அறிவாலயத்துக்கு வரும் புகார்கள், மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தொடர்பான முரண்பாடுகள், சண்டைகள் குறித்து விசாரித்து அவற்றைத் தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இதனால், நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியோடு சேர்த்து இந்தப் பணிகளையும் பார்ப்பது முடியாத காரியம் என நினைத்த தி.மு.க தலைமை, கே.என்.நேருவை அந்த இடத்துக்குக் கொண்டுவர திட்டமிட்டது. இந்தநிலையில், கே.என்.நேரு தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்தத் தீடீர் மாற்றத்தின் பின்னணி என்ன என தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

``சென்னையில் ஸ்டாலினுடன் இருக்கும் வகையில் ஏற்கெனவே துரைமுருகன் வகித்த, தற்போது டி.ஆர்.பாலு வகித்துவரும் முதன்மைச் செயலாளர் பதவியில் கே.என்.நேருவைக் கொண்டுவந்திருக்கிறார்கள். திருச்சியில் மாவட்டச் செயலாளராக கே.என்.நேரு சிறப்பாகப் பணியாற்றினார். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களையும் கைப்பற்றி முழுமையாக தி.மு.க வெல்ல கே.என்.நேரு முக்கியமான காரணமாக இருந்தார்.

`இதோடு அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுங்கள்!' - அவசர செயற்குழுவில் கொதித்த ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஆனால், கே.என்.நேரு தரப்பில் இதற்கு முதலில் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. மாவட்டத்தில் இருந்தே கட்சிப்பணி செய்யலாம் என நேரு நினைத்திருக்கிறார். அதேபோல், தலைமைக் கழகப் பொறுப்பேற்றால் சென்னையிலேயே இருக்க வேண்டி வரும். அதனால், மாவட்டத்தில் தனக்கான செல்வாக்கு குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் நினைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அவரை ஸ்டாலின் சமாதானப்படுத்தினார். பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

உடலில் புண் வந்துவிட்டது. அந்த இடத்தில் சீல் வடிகிறது. புண்ணுக்கு மருந்து போடவில்லையென்றால், அது கொப்புளத்தை ஏற்படுத்தி பெரிய விளைவுகளை உண்டாக்கும். அந்த அளவுக்கு நாம் விட முடியாது. ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஸ்டாலின்

அதேபோல், தற்போது கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் திருச்சி பகுதியை மூன்றாகப் பிரிக்கவும் தி.மு.க தலைமை யோசித்து வருகிறது. இதன்மூலம் கே.என்.நேருவைச் சமாதானப்படுத்த முடியும் என்று நம்புகிறது தி.மு.க தலைமை. இளைஞர் அணியின் துணைப் பொதுச்செயலாளராக உதயநிதி ஸ்டாலினுக்கு ஆல் இன் ஆலாக இருந்து வரும் அன்பில் மகேஷை மாவட்டச் செயலாளராக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உதயநிதியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி, அவருடனேயே பயணித்து வரும் அன்பில் மகேஷுக்கு அடுத்த பொறுப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

இதனால், கே.என்.நேரு அதிருப்தியாளர்கள் அன்பில் மகேஷ் தலைமையில் அணி திரளவும் வாய்ப்பு ஏற்படும். இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வரலாம் என்கிறார்கள். அதேபோல், இளைஞர் அணி நிர்வாகிகள் சிலருக்கு மாவட்டங்களில் பொறுப்புகள் வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மாவட்டப் பொறுப்புகளில் இருப்பவர்களை உதயநிதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் எனவும் தி.மு.க தலைமை கணக்குப் போடுகிறது. குறிப்பாக இளைஞர் அணியின் நிர்வாகிகளில் 3 பேரை நீக்கவும் வேலைகள் நடக்கின்றன. மன்னார்குடி எம்.எல்.ஏவான டி.ஆர்.பி.ராஜாவை இளைஞர் அணியில் முன்னிறுத்துவதற்கான வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரிய அளவில் வெற்றிபெறாத கொங்கு மண்டலம், நீலகிரி, அரியலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிர்வாகிகளை அதிரடியாக மாற்ற தலைமை முடிவு செய்திருக்கிறது. அதன் ஒருபகுதியாக மாவட்டச் செயலாளர்களை நீக்குவதற்கான வேலைகள் நடக்கின்றன. அதேசூழலில் புதிய நிர்வாகிகள் நியமனமும் நடக்கும். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்'' என்றனர் விரிவாக.

அன்பில் மகேஷ் - கே.என்.நேரு
அன்பில் மகேஷ் - கே.என்.நேரு

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கொங்கு மண்டலம் உள்ளிட்ட சில பகுதிகளில் பின்னடைவைச் சந்தித்தது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நடந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் இதுதொடர்பாக நேரடியாகவே தனது கோபத்தைக் காட்டினார். அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ``தி.மு.க இன்றைக்கு ஆட்சியில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், கொங்கு மண்டலம். உள்ளாட்சித் தேர்தலிலும் மறுபடியும் அதே நிலைமை நீடிக்கிறது. கொங்கு மண்டலத்தின்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

என்னுடைய நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் யாராவது (மேடையில் இருப்பவர்களைக் கைகாட்டி) சிபாரிசுக்கு வந்தால், அவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே நடவடிக்கை மற்ற மாவட்டங்கள் மீதும் பாயும்.

தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர்
தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர்
ஸ்ரீனிவாசுலு

உடலில் புண் வந்துவிட்டது. அந்த இடத்தில் சீல் வடிகிறது. புண்ணுக்கு மருந்து போடவில்லையென்றால், அது கொப்புளத்தை ஏற்படுத்தி பெரிய விளைவுகளை உண்டாக்கும். அந்த அளவுக்கு நாம் விட முடியாது. ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நீங்கள் மட்டுமே காரணம் எனக் கூறிக்கொண்டு காலரைத் தூக்கிக்கொண்டு அலையாதீர்கள். உள்ளாட்சியில் பெற்ற வெற்றிக்குக் கலைஞரின் உடன்பிறப்புகள்தான் காரணம்'' என்று காட்டமாகவே பேசியிருந்தார்.

பின் செல்ல