Published:Updated:

`என்ன தவறு செய்திருந்தாலும் மன்னித்துவிடுங்கள்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் கலங்கிய கே.என்.நேரு

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு -அன்பில் மகேஷ்
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு -அன்பில் மகேஷ்

``தி.மு.க காரனுக்கு சாதி இல்லை. கட்சிக்காரர்களிடம் சாதி பார்க்காதீங்க" என தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. சமீபத்தில், தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டார்கள். அதன்பிறகு நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டம் என்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.

அன்பில் மகேஷ் அரசியலுக்கு செக் வைத்த கே.என்.நேரு... மகனைக் களத்தில் இறக்கி பதிலடி!

கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் குழந்தைவேலு, மாவட்டப் பொறுப்பாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வழக்கறிஞர் வைரமணி, அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.

`தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு வேளாண் மண்டலத்தில் திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்க வேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது' உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலில் பேசிய அன்பில் மகேஷ், ``திருச்சி மாவட்டத்தில் 27 வருடங்களாக மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.என்.நேரு. அவர், கட்சியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அளவுக்கு கட்சிக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பவர். அவர் போட்டுவைத்த சாலையில் தடம் மாறாமல் நாங்கள் செல்வோம்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

மாவட்டச் செயலாளரான பிறகு, புதிய அலுவலகம் திறப்பது குறித்து அவரிடம் கூறினேன். உடனடியாக ஓ.கே சொன்னவர், கட்சி ஆலோசனைக் கூட்டங்களை கலைஞர் அறிவாலயத்தில் நடத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.

எனது அப்பா மறைவின்போது, நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, மறைந்த ராமஜெயம் என்னை அழைத்து, `இப்படியே இருக்கக்கூடாது மகேஷ். அரசியலுக்கு வரத்திட்டமிடுங்கள்' என்றார். அதன் தொடர்ச்சியாகவே, நான் தளபதி மற்றும் உதயநிதி ஆகியோர் மூலம் அரசியலுக்கு வந்தேன். என்னைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளராக எந்தவொரு முடிவு என்றாலும் அண்ணன் நேருவை கேட்டுத்தான் முடிவெடுப்பேன்” என்றார்.

`அன்பில் மகேஷுக்கு மா.செ பதவி; பிரிக்கப்படும் திருச்சி?'- பொங்கும் நேரு ஆதரவாளர்கள்
தொண்டர்கள்
தொண்டர்கள்

தொடர்ந்து பேசிய வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் காடுவெட்டி தியாகராஜன், ``அண்ணன் நேரு போட்ட பாதையில் நாங்கள் செல்வோம் என அன்பில் மகேஷ் கூறினார். அந்தப் பாதையில் அவர் மட்டுமே செல்ல முடியும். நாம தனியாகப் போனால், வெடிகுண்டு வெடிக்கும். அதனால் ஜாக்கிரதையாகச் செல்ல வேண்டும். நேருவுக்குத் தெரியாமல் நான் எந்த முடிவும் எடுப்பதில்லை. அவர் சொல்லும்படி நடந்ததால்தான் திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற்றோம். அதைப்போலவே, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று தலைவர் ஸ்டாலினை முதல்வராக அமர்த்துவோம்” என்றார்.

இறுதியாகப் பேசிய கே.என்.நேரு, ``எனக்குப் பிறகு அன்பழகனை மாவட்டச் செயலாளராக்கிட விரும்பினேன். இதுகுறித்து தலைமையிடமும் கூறினேன். மகேஷ் மாவட்டச் செயலாளராகும் வாய்ப்பு இருந்ததால், அன்பழகனுக்கு வாய்ப்பில்லாமல்போனது. அதையடுத்து, தலைவர் ஸ்டாலின் அன்பழகனை அழைத்துப் பேசினார். அந்த வகையில் அன்பழகனுக்கு நிச்சயம் நல்ல இடம் உண்டு.

`டெல்லிக்கு டி.ஆர்.பாலு; அறிவாலயத்துக்கு கே.என்.நேரு!' - திடீர் மாற்றத்தின் பின்னணி

நான் மாவட்டச் செயலாளராக வந்தபோது, அவமானங்களைச் சந்தித்தேன் .புதிய மாவட்டச் செயலாளர்கள், தங்கள் சாதியைத் தாண்டி கட்சிக்காரர்களை நம்புங்கள். தற்போதுள்ள நிர்வாகிகள் எள் அளவும் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். உங்கள் அனைவரின் ஆதரவால்தான் நான் இப்போது முதன்மைச் செயலாளராக உயர்ந்திருக்கிறேன். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்'' என்று கண்கலங்கினார்.

தொடர்ந்து, ``மாவட்டச் செயலாளர்கள் பெரும்பான்மை சமூகத்தில் இருப்பதால், தங்கள் உறவுக்காரர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

கே. என். நேரு,
கே. என். நேரு,

ஆனால், கட்சியினர் மத்தியில் சாதி பார்க்காதீர்கள். குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரையும், பட்டியல் இனத்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதுதான், கட்சி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நான் சாதி பார்த்து ஆட்களை உடன் வைத்துக்கொண்டதில்லை. தி.மு.க காரனுக்கு சாதி ஏது?

ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் அவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒற்றுமையோடு உழைத்து திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், டெல்டா மாவட்டத்தில் உள்ள 90 சதவிகிதத் தொகுதிகளில் தி.மு.க-வை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நான் என்ன தவறு செய்திருந்தாலும், என்னை மன்னித்துவிடுங்கள்'' என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு