Published:Updated:

`பணமே பிரதானம்; சொந்தக் கட்சிக்கு அவமரியாதை!' -கே.என்.நேரு விசாரணையால் மிரண்ட அனிதா

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

’தூத்துக்குடியில் தி.மு.க ஒன்றியச் செயலாளர்களைக் காரணமின்றி நீக்கி பணத்தைப் பெற்றுக்கொண்டு, மாற்றுக்கட்சியில் வந்தவர்களுக்கு பதவி கொடுக்கிறார்’ என விசாரணையில் பொங்கியுள்ளனர் நீக்கப்பட்ட ஒ.செ -க்கள்.

தூத்துக்குடி தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார், அனிதா ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க, தி.மு.க என கட்சி மாறியபோதும், 5-வது முறையாக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, ரூ.4,90,29,040 மதிப்பில் மதுரையில் சொத்துகள் வாங்கியதாக அவரது மனைவி, மகன்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

கடந்த 10 ஆண்டுகளாக, தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில் முக்கியத் தீர்ப்பு அளிக்கப்படும் நிலையில், கொரோனா ஊரடங்கு தொடங்கி கடைபிடிக்கப்படுவதால், வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார் அனிதா. ஆனால், தீர்ப்பை நினைத்து அனிதா மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தினரும் கலங்கிவருவது தனிக்கதை.

இந்நிலையில், தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் மாடசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றியம் மகாராஜன், தெற்கு ஒன்றியம் நல்லமுத்து மற்றும் திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் ஆகிய நான்கு ஒன்றியச் செயலாளர்களும், ’தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டத்தில் ஒன்றியச் செயலாளர்களைக் காரணமே இல்லாமல் மாற்றிவருகிறார் அனிதா' என அறிவாலயத்துக்குப் புகார் அனுப்பினார்கள். தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழியின் கவனத்துக்கும் செல்ல, அவர் ஆர்.எஸ்.பாரதியைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு வலியுறுத்தினாராம்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இதையடுத்து, தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் நேரு, விசாரணை அதிகாரியாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்ட அலுவலகத்தில், கே.என்.நேரு தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, நேருவிடம் பொங்கித் தீர்த்துவிட்டார்கள் நிர்வாகிகள். ஒவ்வொரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட, ஒரு கட்டத்தில் டென்ஷனாகிவிட்டார். ஆனால், கடைசி வரையிலும் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் மெளனம் காத்திருக்கிறார் அனிதா.

இதுகுறித்து, புகார் வாசித்த 4 ஒன்றியச் செயலாளர்களிடம் பேசினோம்.``நாங்க நாலு பேருமே 25 வருசத்துக்குமேல இந்த இயக்கத்துல இருக்கோம். மாவட்டத்தில் நடக்கும் தவறுகளை ஒன்றியச் செயலாளர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டதாலேயே எங்களை ஒதுக்கினார், அனிதா அண்ணாச்சி. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, எந்தக் காரணமும் சொல்லாமல் எங்களை கட்சியிலிருந்து ஒதுக்கினார். அத்துடன், ஒன்றியச் செயலாளர்களாக நாங்க பதவியில இருக்கும்போதே, `ஒன்றியப் பொறுப்பாளர்’ என்ற பதவியை உருவாக்கி, அவருக்குப் பணம் கொடுத்த சிலரை நியமித்தார்.

அனிதா
அனிதா

இதில், சிலர் வேறு கட்சியிலிருந்து தி.மு.க-வில் இணைந்தவர்கள்தான். இதில் ஒருவருக்கு, தற்போது வரை கட்சி உறுப்பினர் கார்டுகூட கிடையாது. தெற்கு மாவட்ட தி.மு.க-வைப் பொறுத்தவரையில், பணம் இருந்தால்தான் பதவி. அதிலும் மாற்றுக்கட்சியினருக்குதான் முன்னுரிமை அளிக்கிறார். அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை. காரணமே இல்லாம நீக்கப்பட்டது குறித்து தலைமைக்கு புகார் அனுப்பினோம். விசாரணையில் நடந்தவற்றை விளக்கமாகக் கூறியிருக்கிறோம்” என்றனர்.

அ.தி.மு.கவுக்குத் தூது விடுகிறாரா அனிதா? - நெருக்கும் மகன்கள்; இறுக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் பேசினோம், “மக்களவைத் தேர்தலில் கனிமொழி அக்காவுக்கு அதிக வாக்குகள் வாங்கிக்கொடுத்தது, தெற்கு மாவட்டம்தான். அ.தி.மு.க கோட்டையான ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்ல 30 வருசத்துக்குப் பிறகு தி.மு.க வெற்றி பெற்றது அண்ணாச்சியாலதான். உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வெற்றியைக் கொடுத்திருக்கார். அந்த நாலு ஒன்றியச் செயலாளர்களும் உள்ளாட்சித் தேர்தலில் சரியாக வேலை செய்யலை. அதனாலதான் அண்ணாச்சி நடவடிக்கை எடுத்தார்.

அனிதா
அனிதா

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சியின் வெற்றிக்காக வேலை செய்பவர்களை நியமிப்பதுதானே கட்சிக்கு முக்கியம். தேவையில்லாமல் அண்ணாச்சி மீது புகார் சொல்றாங்க” என்றனர்.

``ஏற்கெனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற, ஆளும்கட்சி முக்கியப் பிரமுகரிடம் கோடிகளில் பேரம் பேசியதும், மீண்டும் அ.தி.மு.க-வில் இணையப்போவதாகவும் கசிந்த தகவல் அறிவாலயம் வரை சென்றதால், கண்காணிப்பில் இருந்த அனிதா மீது ஒன்றியச் செயலாளர்களின் புகாரால் நடந்த இந்த விசாரணையும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது" என்கின்றனர் தூத்துக்குடி உடன்பிறப்புகள்.

அடுத்த கட்டுரைக்கு