Published:Updated:

`நாங்கள் உதவி செய்வதும் ஓட்டு வாங்கத்தானே சார்...!' - திருச்சியில் கலகலத்த கே.என்.நேரு

கே.என்.நேரு
கே.என்.நேரு

`முன் `கை' நீண்டால் முழங்கை நீளும் என்பதைப் போல, நாங்கள் உதவி செய்வது, மக்களிடம் ஓட்டு வாங்கத்தான்' என்கிறார் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், `ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தினைச் செயல்படுத்தியுள்ளார்.

மனுக்களை ஆட்சியரிடம் ஒப்படைத்தபோது
மனுக்களை ஆட்சியரிடம் ஒப்படைத்தபோது

அந்தவகையில், திருச்சி மாவட்டத்திலிருந்து உதவிகள் கேட்ட 8,000 பயனாளிகளின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் திருச்சி தி.மு.க எம்.எல்.ஏ-க்களான லால்குடி சௌந்தர்ராஜன், திருவெறும்பூர் அன்பில் மகேஷ், துறையூர் ஸ்டாலின் குமார், திருச்சி வடக்கு மா.செ காடுவெட்டி தியாகராஜன், மத்திய மா.செ வைரமணி மற்றும் மாநகரச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சகிதமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்தார், கே.என்.நேரு.

அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு, `இவ்வளவு மனுக்களா.?' எனக் கேட்க, `உங்களை வேலை வாங்கணும்ல சார்' எனத் தனது பாணியில் கிண்டலடித்த கே.என்.நேரு, கொண்டுவந்த மனுக்களை ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கே.என்.நேரு,

``திருச்சி மாவட்டத்திலிருந்து உதவிகள் கேட்டு வந்த 18,000 அழைப்புகளில், அத்தியாவசியப் பொருள்களான மளிகைச் சாமான்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவை இல்லாமல் தவித்த 10,000 பேருக்கு உதவியுள்ளோம். மேலும், வாடகை கட்டமுடியவில்லை உள்ளிட்ட தீர்க்கமுடியாத பிரச்னைகள் குறித்து உதவிகள் கேட்டிருந்த 8,000 பேரின் கோரிக்கைகளை அரசு மூலம் தீர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். இந்த விவரங்களை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மின்னஞ்சல் மூலமாகத் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார்" என்றார்.

திருச்சி தி.மு.க., சார்பில் உதவிகள் வழங்கியபோது
திருச்சி தி.மு.க., சார்பில் உதவிகள் வழங்கியபோது

தொடர்ந்து, ``ஆளுங்கட்சியினர், தினமும் கூட்டம் நடத்துகிறார்கள். கொரோனா கட்டுப்பாட்டுப் பணி செய்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு சில இடங்களில் அமைச்சர்கள் உதவிகள் செய்கிறார்கள். பெரும்பான்மையான மக்களுக்குத் தேவையான உதவிகளை இவர்கள் செய்திருந்தால் எங்களுக்கு ஏன் இவ்வளவு சங்கடம்” என்றார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

நாங்கள் உதவிகள் செய்வதும், மக்களிடம் ஓட்டுவாங்கத்தானே சார். முன் `கை' நீண்டால் முழங்கை நீளும் என்பதைப் போலத்தான் இதுவும். நாங்கள் 4 எம்.எல்.ஏ-க்கள் வந்துள்ளோம். எங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு உதவி செய்துவருகிறோம்.

கடந்த தேர்தலில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாகக் குறைப்போம் என உறுதியளித்திருந்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் சொன்னபடி செய்திருப்போம். அது நடக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி நிச்சயம் செயல்படுவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு