கொடைக்கானல்: சுவர் விளம்பரம் முதல் பூத் கமிட்டி வரை - பரபரக்கும் பா.ஜ.க!

தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகாத நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானலில், தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில் ஒன்று பழநி சட்டமன்றத் தொகுதி. பழநி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள், கொடைக்கானல் மலை கிராமங்கள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பழநி தொகுதியை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க கேட்டுவருகிறது. தங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலில், பழநி தொகுதியைக் குறிப்பிட்டிருந்தது பா.ஜ.க.

அ.தி.மு.க-வுடனான கூட்டணியில் பா.ஜ.க உறுதியான இடத்தைப் பிடித்திருந்தாலும், எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தபோதும், கடந்த சில நாள்களாகவே, பழநி தொகுதி முழுக்க, தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டிவருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அதன் ஒரு பகுதியாக, கொடைக்கானல் பகுதியில், தாமரைச் சின்னம்கொண்ட சுவர் விளம்பரம் வரையும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கூடவே, பூத்கமிட்டி அமைத்து களப் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறும் போது, ``பழநி தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளில், பா.ஜ.க-வின் களப்பணிகள் அதிகம். மக்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு நல்ல பெயர் இருக்கிறது. கூடவே, பழநி ஒரு ஆன்மிகத் தலம். இவை எல்லாவற்றையும் வைத்துதான், பா.ஜ.க-வுக்கு பழநி தொகுதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டோம். பழநி தொகுதி எங்களுக்குத்தான் ஒதுக்கப்படும். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதையெல்லாம் வைத்துதான் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என்றார் அவர்.
தி.மு.க-வின் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார்தான் மீண்டும் பழநி தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படும் நிலையில், தி.மு.க சார்பிலும் தேர்தல் பணிகள் விறுவிறுவென நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.