Published:Updated:

``மாவீரர்களுக்கு `திதி' கொடுத்துக்கொண்டிருக்கிறார் காசி ஆனந்தன்!'' - கொளத்தூர் மணி காட்டம்

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி ( எம்.விஜயகுமார் )

ஈழ ஆதரவுத் தலைவர்கள் சமீபகாலமாக இந்துத்துவப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பது குறித்த கேள்விக்கு, ``ஈழப் போரில் வீர மரணமடைந்த மாவீரர்களுக்கு இப்போது `திதி' கொடுத்துக்கொண்டிருக்கிறார் காசி ஆனந்தன்'' என்கிறார் கொளத்தூர் மணி.

துக்ளக் பத்திரிகை விழாவில், பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே தடதடக்க வைத்துவிட்டது!

'1971-ல் பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில், ராமர் - சீதை படங்கள் மோசமாகச் சித்திரிக்கப்பட்டதாகப் பேசினார் ரஜினிகாந்த். ஆனால், ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சைக் கண்டித்துப் போராடிவரும் திராவிடர் கழகத்தினரோ, ''பேரணியில், ராமர் - சீதை படங்கள் ஆடை அணிந்த நிலையில்தான் கொண்டுவரப்பட்டன. உண்மைக்கு மாறாக ரஜினிகாந்த் பேசுவது, பெரியாரை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டது'' என்று கொந்தளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இதன் வெளிப்பாடாக, ரஜினிகாந்த்தின் பேச்சைக் கண்டித்து நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில், ''நான் கற்பனையாக எதையும் பேசவில்லை; நடந்ததைத்தான் பேசியிருக்கிறேன். எனவே, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்'' என்று தனது நிலைப்பாட்டில் ரஜினிகாந்த் உறுதி காட்டியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இப்பிரச்னையில் இருதரப்பையும் சாராதவர்கள், 'பெரியார் பற்றிய ரஜினிகாந்த் பேச்சை, திராவிடர் கழகத்தினர் கண்டும்காணாமல் விட்டிருந்தால், பிரச்னை இவ்வளவு பெரிதாக வெடித்திருக்காது. அதேபோல், இந்து மதக் கடவுள்களை ஆபாச நிலையில், ஊர்வலமாகக் கொண்டுசென்று இந்து மதத்தை அசிங்கப்படுத்தியவர் பெரியார் என்று குற்றச்சாட்டு வைப்பவர்களும்கூட, திரும்பத் திரும்ப இவ்விஷயத்தைப் பெரிதுபடுத்திக்கொண்டு பேசிவருவது, அவர்கள் சொல்கிற கருத்துக்கே முரணானதாக இருக்கிறது'' என்கின்றனர் அக்கறையோடு.

பெரியார்
பெரியார்

இந்நிலையில், 1971-ல் சேலத்தில் நடைபெற்ற `மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி - மாநாட்டில்' கலந்துகொண்ட 'திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினேன்...

''பொதுவாக, திராவிட கழகத்தினர் குறிப்பிட்ட மதத்தில் உள்ள குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?''

''என் வீட்டில் திருட்டு நடக்கவந்தால், கதவை மூடிக்கொள்வதோ, திருடனைக் குத்துவதோ எங்களுக்கு வேலை. அதுவே 'பக்கத்து வீட்டுத் திருட்டுக்கும் போய் ஏன் குத்தவில்லை' என்று கேட்டீர்களானால், 'அதை அந்த வீட்டுக்காரன் பார்த்துக்கொள்வான்' என்பதுதான் எங்கள் பதில். நாங்கள் இந்துவாக இருக்கிறோம். அதனால், அந்த மதத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுகிறோம். மற்றபடி, `கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்ற எங்கள் பிரசாரத்தில் எந்த மாற்றமும் இல்லை!''

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி
எம்.விஜயகுமார்

``மத ரீதியாக மற்றவர்களை விமர்சிக்கிற நீங்கள், மற்றவர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது ஏன் ஆவேசப்படுகிறீர்கள்?''

''பெரியார் என்ற ஒரு தலைவரை, தமிழ் மக்களின் வழிகாட்டியை, மான மீட்பரை தத்துவமாக விமர்சிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், திட்டமிட்டு தீய நோக்கத்தோடு அவதூறாகப் பேசுவதைத்தான் நாங்கள் இப்போது எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம்.''

''தத்துவார்த்த ரீதியாக திராவிட இயக்கங்களை விமர்சித்துவரும் தமிழ்த் தேசியவாதிகளையும்கூட நீங்கள் கடுமையாகச் சாடுகிறீர்களே..?''

''தமிழ்த் தேசியவாதிகள் தத்துவார்த்த ரீதியாக ஒருநாளும் விமர்சனம் செய்ததில்லையே. விமர்சனத்தையே தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. `உங்கள் விமர்சனம் பொருள் பொதிந்ததாக இல்லை' என்றுதான் சொல்கிறோம்.''

காசி ஆனந்தன்
காசி ஆனந்தன்

''ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், `காவி ஆனந்தன்' ஆகிவிட்டார் என்று மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்களே..?''

''விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவாக இருந்தவரை, `மாவீரர் நாள்' உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்த காசி ஆனந்தன்தான், இப்போது இந்து மக்கள் கட்சியோடு சேர்ந்துகொண்டு நவம்பர் 27-ம் தேதியன்று மாவீரர்களுக்கு `திதி' கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள்களாக இவர்கள் உண்மையிலேயே `மாவீரர் நாள்' எடுத்தார்களா, செயற்கையாக இருந்தார்களா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!''

மேலும் காரசாரமான கேள்விகளுக்கு கொளத்தூர் மணியின் பதில்களை நாளைய ஆனந்த விகடனில் படிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு