Published:Updated:

கரூர்: `மோடி ஒரு ராசியில்லாத பிரதமர்!' - `கொங்கு’ ஈஸ்வரன் ஆவேசம்

கொங்கு ஈஸ்வரன்
கொங்கு ஈஸ்வரன் ( நா.ராஜமுருகன் )

`இந்தியாவுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர மோடிக்கு ராசி இல்லை எனத் தோன்றுகிறது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கொச்சைப்படுத்திவருகிறது. அரசியல் கட்சிகளின் தூண்டுதல் பெயரால் போராட்டங்கள் நடைபெறுவதாகக் கூறுவது, விவசாயிகளை அவமதிப்பதற்குச் சமமாகும்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் டெண்டர்கள் ஆன்லைன் மூலம் நேர்மையாக நடைபெறுவதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சைப் பொய்யைக் கூறிவருகிறார். செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் குழந்தைகளைப்போல, 'டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை' என எடப்பாடி பழனிசாமி கூறுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று 'கொங்கு' ஈஸ்வரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கொங்கு ஈஸ்வரன்
கொங்கு ஈஸ்வரன்
நா.ராஜமுருகன்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில், காமராஜபுரம் பகுதியிலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் 'சக்தி கோச்' நடராஜன், மாநிலப் பொருளாளர் கருப்பண்ணன், மாநில இளைஞரணிச் செயலாளர் சூரியமூர்த்தி, மாநில வர்த்தக அணிச் செயலாளர் வீ.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பேட்டியளிக்கும் கொங்கு ஈஸ்வரன்
பேட்டியளிக்கும் கொங்கு ஈஸ்வரன்
நா.ராஜமுருகன்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்,``தமிழ்நாட்டிலுள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்போலச் செயல்படுகிறார்கள். கரூர் மாவட்டப் பகுதியில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதற்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் காரணம். தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் டெண்டர்கள் ஆன்லைன் மூலம் நேர்மையாக நடைபெறுவதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சைப் பொய்யைக் கூறிவருகிறார். செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் குழந்தைகளைப்போல, 'டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை' என எடப்பாடி பழனிசாமி கூறுவது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன. `குறைந்தபட்ச ஆதரவு விலையை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யவில்லை’ என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. எங்களின் குற்றச்சாட்டும் அதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரூர்: `எனக்கு ஸ்டாலின் ஒன்றும் சான்று அளிக்க வேண்டியதில்லை!’ - முதல்வர் பழனிசாமி காட்டம்

ஆனால், தமிழக அரசு விவசாயச் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக இருப்பதும், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதும் வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. மத்திய அரசு பொறுப்பேற்று ஏழு ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில், மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை. மாறாக, பொருளாதாரம் சரிவான நிலையில் இருக்கிறது. பொருளாதாரம் விழுந்துள்ளது. கொரோனா வரவில்லை என்றாலும், இதைவிட மோசமான பொருளாதாரநிலை இருந்திருக்கும். நாட்டின் பொருளாதாரம் சரிந்துகொண்டே இருப்பதற்கு, டீசல் விலை உயர்வு மிக முக்கியக் காரணம். மத்திய அரசு நினைத்தால் ரூ.40 ரூபாய்க்கு டீசல் விற்பனை செய்ய முடியும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, 'டீசல் விலை உயர்வு பொருளாதாரச் சரிவுக்கு காரணம் இல்லை' எனக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர மோடிக்கு ராசி இல்லை எனத் தோன்றுகிறது.

கொங்கு ஈஸ்வரன்
கொங்கு ஈஸ்வரன்
நா.ராஜமுருகன்

விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கொச்சைப்படுத்திவருகிறது. அரசியல் கட்சிகளின் தூண்டுதல் பேரில் போராட்டங்கள் நடைபெறுவதாகக் கூறுவது, விவசாயிகளை அவமதிப்பதற்குச் சமம். இதை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கை, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது. இதைக்கூட தமிழக அரசும், மத்திய அரசும், பா.ஜ.க தலைவர்களும் புரிந்துகொள்ளாமல் பேசுவது கவலையளிக்கிறது. அத்தியாவசியப் பொருள்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம் எனப் புதிய வேளாண் சட்டங்களில் கூறப்பட்டிருப்பதால், விவசாயிகள் அறுவடை செய்யும்போது, பெரு நிறுவனங்கள் சந்தையில் இருப்பு வைத்திருக்கும் பொருளை விற்பனைக்கு கொண்டு வந்து, விவசாயிகளுக்கு ஆதரவு விலை கிடைக்காமல் போகலாம். குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் பொருள்களை வாங்கிவிட்டு, பெரு நிறுவனங்கள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டுவார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு