Published:Updated:

`வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா..?!’ - மின் கட்டண விவகாரத்தில் கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன்

ஈ.ஆர்.ஈஸ்வரன்
ஈ.ஆர்.ஈஸ்வரன்

ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்ற மக்கள், மன அழுத்தம் வராமல் இருக்க பல்வேறு மின்சார உபகரணங்களை உபயோகப்படுத்திதான் ஆக வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று மின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால், `கடந்த மாத மின் கட்டணத்தையே இந்த மாதக் கட்டணமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பின்வரும் மாதங்களில் அது கணக்கிடப்பட்டு சரி செய்யப்படும்’ என்றதோடு மின் கட்டணம் செலுத்தவதற்கு ஏப்ரல் 14 வரை கால அவகாசத்தையும் கொடுத்திருந்தது தமிழ்நாடு மின்வாரியம். இந்த நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மே 6-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, `ஊரடங்கால் சிரமப்படும் மக்களுக்கு ஆறுதலாக, இந்த மின் கட்டணத்தை ரத்து செய்யுங்கள்’ என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அந்தவகையில், கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரனும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசாங்கத்தினுடைய உத்தரவின்படி அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன. அனைத்து வியாபாரங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. மொத்த தமிழகமும் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கிறது. வருமானம் என்பதே யாருக்கும் கிடையாது. அரசாங்கம் கொடுக்கின்ற மிகக் குறைந்த உதவிகளும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான்கைந்து நாள்கள் சமாளிப்பதற்குக் கூட தேவையான அளவு இல்லை. சென்ற மாதத்தினுடைய கணக்கீட்டின்படி இந்த மாதக் கட்டணம் வரும் என்று மின்சாரத்துறை சொல்லியிருப்பது பொருத்தமற்றது. ஒவ்வொரு தொழிலகமும் இணைப்பு பெற்றிருக்கின்ற அளவுக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தவில்லை என்று சொன்னாலும், நிரந்தரத் தொகை (Fixed Charges) ஒன்று கணக்கிடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தைப் பொறுத்தவரை அந்தத் தொகையைக் கூட கட்டும் நிலையில் வர்த்தக நிறுவனங்கள் இல்லை.

அதனால் ஏப்ரல் மாதத்துக்கு மின்சார கட்டணம் இல்லை என்று மின்சாரத்துறை அறிவிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்ற மக்கள் மன அழுத்தம் வராமல் இருக்க பல்வேறு மின்சார உபகரணங்களை உபயோகப்படுத்திதான் ஆக வேண்டும். வருமானம் இல்லாமல் ஏப்ரல் மாதத்துக்கு மின்கட்டணத்தை யாரும் செலுத்த முடியாது. அனைத்துத் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைவருக்கும் மின் கட்டணங்களைக் கட்டுவதற்கு கால அவகாசம் கொடுத்து மின்சாரத்துறை அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

தமிழ்நாடு மின் வாரியம்
தமிழ்நாடு மின் வாரியம்

ஏப்ரல் மாதத்துக்கு மின்கட்டண கணக்கை எடுக்காமல் மார்ச் மாதத்தினுடைய அளவுபடியே கட்டலாம் என்று அறிவித்திருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போலவே இருக்கிறது. உண்மை நிலையைப் புரிந்துகொண்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கின்ற காலத்துக்கு மின்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது, மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை மின்துறை அறிவிக்க வேண்டும்” கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு