Published:Updated:

"2008 -லேயே கொங்குநாடு வேணும் எனக் கேட்டவன் நான்!" - அதிரடி கிளப்பும் ஈ.ஆர்.ஈஸ்வரன்

கொங்கு ஈஸ்வரன்
கொங்கு ஈஸ்வரன்

“கொங்கு மண்டலத்துல நான் வலுவாக இருப்பதால, என்னை இன்னும் வளர்த்து விடுறதுக்கு பி.ஜே.பியைச் சேர்ந்த சிலர் தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்காங்க!”

‘ஜெய்ஹிந்த்’ என்ற ஒற்றை வார்த்தையை மையப்படுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன், சட்டமன்றத்தில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ‘இந்தியர்களின் ஒருங்கிணைந்த உணர்வு, தேசப்பற்று மற்றும் தேசத்தின் பெருமையைச் சொல்லக்கூடிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் ஈஸ்வரன் பேசலாமா? இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது'... என இந்த விவகாரம் குறித்து பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும் ஈஸ்வரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இப்படியான சூழலில் சமீபத்தில் கோவையில் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையைச் சந்தித்த ஈஸ்வரன், அவருக்கு சால்வையை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, ‘தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தம்பி அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்’ என அந்தப் புகைப்படங்களை முகநூலிலும் பகிர்ந்திருக்கிறார். அதனையடுத்து ‘ஜெய்ஹிந்த்’ விவகாரம், பா.ஜ.க.,வினர் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள், அண்ணாமலையுடனான சந்திப்பு, கொங்கு நாடு சர்ச்சை போன்றவை குறித்து ஈ.ஆர்.ஈஸ்வரனிடம் பேசினோம்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்
ஈ.ஆர்.ஈஸ்வரன்
Admin

“சட்டசபையில் நீங்கள் பேசிய ‘ஜெய்ஹிந்த்’ விவகாரம் பெரிய சர்ச்சையானதே, ஏன்?”

“சட்டசபையில நான் பேசுறக்கு முதல் நாள் ஒரு தொலைக்காட்சியோட விவாத நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் பேசுறதுக்காக கடந்த வருட ஆளுநர் உரையையும், இந்த வருட ஆளுநர் உரையையும் பிரின்ட் எடுத்து கொடுக்கச் சொல்லி என் உதவியாளர்கிட்ட சொல்லியிருந்தேன். ரெண்டு ஆளுநர் உரைகளையும் படிச்சிப் பார்த்தப்பதான், இந்த ‘ஜெய்ஹிந்த்’ விவகாரம் கண்ணில்பட்டது. அதை அந்த தொலைக்காட்சி விவாதத்துலையும் சொன்னேன். அடுத்தநாள் சட்டபையில பேசுறப்பவும், ’கடந்த ஆட்சி பி.ஜே.பிக்கு கட்டுப்பட்டு ‘ஹெய்ஹிந்த்’ என்ற இந்தி வார்த்தையை ஆளுநர் உரையில் சேர்த்திருந்தாங்க. இந்த ஆட்சியினுடைய ஆளுநர் உரையில் அது இல்லை’ன்னு குறிப்பிட்டேன். அதாவது கடந்த ஆட்சி மற்றும் தற்போதையை ஆட்சியை ஒப்பிட்டு தான் நான் பேசுனேன். அ.தி.மு.க.,வானது பி.ஜே.பிக்கு தலைகுனிஞ்சு நின்னப்ப தமிழகம் தானே பாதிக்கப்பட்டது. இந்த தி.மு.க., ஆட்சியில் அப்படியான நிலை இல்லாததால், தமிழகம் தலை நிமிர்ந்து நிக்குதுன்னு சொன்னேன். நான் எந்த இடத்துலயும் மொழியையோ, தேசப்பற்றையோ தவறாகப் பேசலை. இதுசம்பந்தமாக நான் விளக்கம் கொடுத்த பின்னாடியும், உள்நோக்கத்தோட பி.ஜே.பியைச் சேர்ந்த சிலர் விமர்சனம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சி என சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்கித்தான் சட்டசபையில் நான் என்னோட அந்த உரையைத் தொடங்கினேன். அப்ப யாருக்கு தேசப்பற்று அதிகம். கொங்கு மண்டலத்துல நான் வலுவாக இருக்கிறதால, என்னை இன்னும் வளர்த்து விடுறதுக்கு பி.ஜே.பியைச் சேர்ந்தவங்க இப்படி பேசுறாங்களோ என்னவோ!”...

பெட்ரோல், டீசல் விலை 100-ஐ தாண்டுனதால தமிழ்நாட்டுல போராட்டங்கள் நடக்குது, தடுப்பூசி தட்டுப்பாடு, மேகதாது அணை விவகாரம் போன்ற பிரச்னைகளையெல்லாம் திசை திருப்புவதற்காகவே இந்த கொங்கு நாடு விவகாரத்தை பி.ஜே.பியினர் கையிலெடுத்ததா நான் நினைக்குறேன்.

“கொங்கு மண்டலத்தை ‘கொங்கு நாடு’ எனத் தனியாக பிரிக்க வேண்டும்... என்கின்ற குரல் எழுந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“கொங்கு மண்டலத்துல நிறைய தொழிற்சாலைகள் இருக்கின்றன. கொங்கு மண்டல மக்களுடைய கடுமையான உழைப்பினால், அதிக வருமானம் ஈட்டும் மற்றும் அரசுக்கு அதிக வரி கட்டும் பகுதியாக கொங்கு பகுதி உள்ளது. ஆனா, எந்த வசதிகளும் இந்த கொங்கு மண்டலத்திற்கு கிடைக்கிறதில்லை. ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வரவேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்குப் போனது. அ.தி.மு.க., ஆட்சியில் பல மாவட்டங்களைப் பிரிச்சப்போ, கொங்கு மண்டலத்துல இருந்த பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம் மற்றும் திருச்செங்கோட்டை பிரிக்கவே இல்லை. இதனால ‘கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது’ என நான் கடுமையாக எதிர்த்தேன். தொடர்ந்து இந்தப் புறக்கணிப்பு நடக்குமேயானால், எங்கள் வருமானத்தை நாங்களே பயன்படுத்திக்கிறோம். தனி மாநிலம் கேக்குறதைத் தவிர எங்களுக்கு வேற வழி கிடையாது என பேசியிருக்கேன். 2008-ல இருந்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என நான் பேசிக்கிட்டு இருக்கேன். ஏன், ‘புரட்சி கொங்கு நாடு படைக்கணும்’ என கொங்கு நாட்டிற்கென ஒரு தனி பிரச்சார பாடலைக் கூட நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாநிலங்களை சிறு மாநிலங்களாகப் பிரிப்பதில் தவறு கிடையாது. ஆனா, அரசியல் உள்நோக்கத்தோட அதைச் செய்யக்கூடாது”.

ஈ.ஆர்.ஈஸ்வரன்
ஈ.ஆர்.ஈஸ்வரன்

அப்போ ‘கொங்கு நாடு’ வேண்டுமென்பது தான் உங்களுடைய கோரிக்கையாகவும் இருக்கிறதா?

கொங்கு மண்டலத்துல இருக்க தொழில்களைப் பாதுகாக்கணும், இந்தப் பகுதிகளில் நிறைய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரணும்னு தான் நான் ‘கொங்கு நாடு’ என்கின்ற கோரிக்கையை வச்சிருந்தேன். ஆனா, இப்போ அரசியல் உள்நோக்கத்தோட இந்த ‘கொங்கு நாடு கோரிக்கையை முன்னெடுக்குறாங்க. பெட்ரோல், டீசல் விலை 100-ஐ தாண்டுனதால தமிழ்நாட்டுல போராட்டங்கள் நடக்குது, தடுப்பூசி தட்டுப்பாடு, மேகதாது அணை விவகாரம் போன்ற பிரச்னைகளையெல்லாம் திசை திருப்புவதற்காகவே இந்த கொங்கு நாடு விவகாரத்தை பி.ஜே.பியினர் கையிலெடுத்ததா நான் நினைக்குறேன். இதுக்கு நாம கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அதிகாரப் பூர்வமா சொன்னா அப்போ பேசலாம்”.

ஈ.ஆர்.ஈஸ்வரன்
ஈ.ஆர்.ஈஸ்வரன்

“கோவை, சேலம் என கொங்கு மண்டலத்திலுள்ள பல மாவட்டங்களுக்கு தி.மு.க., உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை” என சில விமர்சனங்கள் சொல்லப்படுகிறதே?

“நான் முதல்வரைச் சந்திக்குறப்ப எல்லாம் ‘கொங்கு மண்டலத்துல நாம ஜெயிக்கிறதுக்கு என்ன பண்ணனும். கொங்கு மண்டல மக்கள் நம்மை விரும்ப என்ன செய்யணும்’ என ஆர்வமாகக் கேப்பாங்க. அப்படியிருக்கும் ஒரு முதல்வர் எப்படி கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கணும்னு நினைப்பாரு. சமீபத்துலகூட கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேணும்னு மத்திய அரசுகிட்ட முதல்வர் கோரிக்கை வச்சிருக்காங்க. அதனால இப்போதிருக்கும் ஆட்சி கொங்கு மண்டலத்துக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. கொங்கு மண்டலத்துக்கு தேவையான திட்டங்களை நான் முதலமைச்சர் கிட்ட சொல்லியிருக்கேன். அதுமட்டுமில்லாம, ஒவ்வொரு அமைச்சரையும் நேரில் சந்தித்து கொங்கு பகுதிக்கான கோரிக்கைகளை சொல்லிக்கிட்டு இருக்கேன்.

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்கும் ஈஸ்வரன்
தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்கும் ஈஸ்வரன்

“சமீபத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து, சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்திருக்கிறீர்களே!”...

கோவையிலுள்ள சிரவை ஆதீனத்திற்கு நான் அடிக்கடி போவேன். எங்களோட கட்சி மாநாட்டிற்குகூட சிரவை ஆதீனத்தினுடைய மடாதிபதி நேரில் வந்து வாழ்த்து சொல்லியிருக்காங்க. அந்த அடிப்படையில தேர்தல்ல நான் ஜெயிச்சதுக்காக ஆசி வாங்க சிரவை ஆதினத்திற்கு போயிருந்தேன். நான் அங்க போயிட்டு வெளிய வர்றப்ப அண்ணாமலை அங்க வந்தாரு. தமிழக பா.ஜ.க., தலைவரானதற்கு வாழ்த்து சொல்லி அவருக்கு சால்வை அணிவிச்சேன். நான் ஜெயிச்சதுக்காக எனக்கும் அவர் வாழ்த்து சொன்னாரு. இது ஒரு பரஸ்பரமான அரசியல் நாகரிகம் தானே ஒழிய, வேற எதுவுமில்லை. கொங்கு மண்டலத்துல இருந்து ஒருத்தர் தமிழக பா.ஜ.க., தலைவர் ஆகியிருக்கப்ப நான் வாழ்த்து சொல்லணும்ல... எல்.முருகனுக்கும்கூட நான் சோஷியல் மீடியா மூலமா வாழ்த்து சொல்லியிருந்தனே”.

ஈ.ஆர்.ஈஸ்வரன்
ஈ.ஆர்.ஈஸ்வரன்

தி.மு.க.,வினுடைய ஆட்சி எப்படியிருக்கிறது? அ.தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் போன்ற பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தி.மு.க.,வை நோக்கி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தான் இருக்கின்ற கட்சியில் உரிய மரியாதை மற்றும் முக்கியத்துவம் இல்லைன்னு தான் பலரும் தி.மு.க.,வை நோக்கி வர்றாங்க. இது நிச்சயமாக தி.மு.க.,விற்கு பெரும் வலுவைக் கொடுக்கும். பொதுவாகவே எதிர்க்கட்சியாக இருந்து கட்சியை வழிநடத்துறது என்பது கொஞ்சம் சிரமம்தான். ஏன், தி.மு.க., கூட எதிர்க்கட்சியாக இருக்கப்ப யாருமே அதை நோக்கி வரலையே. அரசின் நடவடிக்கைகள், நியமனம் செய்யக்கூடிய அதிகாரிகள், முதல்வரோட சிறப்பான வழி நடத்தும் திறன் போன்றவையெல்லாம் மக்களுக்குப் பிடிச்சிருக்கு. எல்லா கட்சிக்கும் முதல்வர் முக்கியத்துவம் கொடுக்குறாரு. எந்தவொரு விஷயம்னாலும் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு கருத்து கேக்குறாங்க. இப்படி ஜனநாயகத் தன்மையோடு கூடிய சிறப்பான ஆட்சி தொடரணும்னு தான் நான் மட்டுமில்ல, மக்களும் ஆசைப்படுறாங்க” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு