Election bannerElection banner
Published:Updated:

மதுரை:`ஒவ்வொரு வீட்டு மொய் நோட்டிலும் என் பெயர் உள்ளது’- டஃப் கொடுக்கும் சுயேச்சை கிரம்மர் சுரேஷ்!

கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்

சுயேச்சையாகக் களமிறங்கி பரபரப்பு கிளப்பிவரும் கிரம்மர் சுரேஷ் பேட்டி.

மதுரை அ.தி.மு.க-வில் முக்கியமானவரான கிரம்மர் சுரேஷ், தன்னுடைய வித்தியாசமான போஸ்டர்கள் மூலம் மக்களை மட்டுமல்ல, ஜெயலலிதாவின் கவனத்தையும் ஈர்த்தவர். சமீபகாலம் வரை செல்லூர் ராஜூவுக்கு நெருக்கமானவராக வலம்வந்தவர், தற்போது சுயேச்சையாகக் களம் இறங்கியிருப்பதுதான் மதுரை அரசியலில் பரபரப்புப் பேச்சு.

கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்

கட்சியில் உழைக்கும் உண்மையான தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமலும், தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாதவர்களை நிறுத்துவதை எதிர்க்கும் விதமாகவும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்த கிரம்மர் சுரேஷ், தற்போது தீவிர பிரசாரம் செய்துவருகிறார். இந்த முடிவை எடுப்பதற்கு முன் கட்சியில் தான் வகித்த இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

மத்திய தொகுதியின் சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பசும்பொன் தேசிய கழகத்தைச் சேர்ந்த ஜோதி ராமலிங்கத்துக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில், அந்த வேட்பாளரை இன்னும் பலவீனமாக்கும் வகையில் கிரம்மரின் பிரசாரமும், அவருக்கு கிடைக்கும் வரவேற்பும் அ.தி.மு.க தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மீது பெரும் மரியாதை வைத்திருப்பதால், தற்போது பி.டி.ஆர். தியாகராஜன் ரிஸ்க் இல்லாமல் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, கிரம்மர் சுரேஷ் போட்டியிடுகிறார் என்று அ.தி.மு.க தரப்பிலும், `இல்லை, பி.டி.ஆருக்கு விழும் சமூகம் சார்ந்த வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகளில் சேதத்தை ஏற்படுத்த செல்லூர் ராஜூவின் ஏற்பாட்டின்படி போட்டியிடுகிறார்’ என்று தி.மு.க-வினரும் மாறி மாறி கிரம்மர் மீது குற்றம்சாட்டிவருகிறார்கள்.

கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்

இந்தநிலையில், தொப்பிச் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் செய்துவரும் கிரம்மர் சுரேஷிடம் இது குறித்துப் பேசினோம். அவர், ``வாக்குகளைப் பிரிப்பதற்காக நான் போட்டியிடவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை. காலம் முழுவதும் கொடிபிடித்தும், வழக்குகளைச் சந்தித்தும் ரத்தம் சிந்தி உழைக்கும் கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் யாருக்கோ வழங்குவது ஏன் என்பதை தலைமைக்கு உணர்த்துவதற்காகத்தான் மக்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன். நான் நிற்பதால் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு விழும் வாக்குகள் பிரிந்துவிடும் என்று சிலர் சொல்வதை கண்டுகொள்ளவில்லை. இந்தப் பகுதி மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன்.

இன்னொரு விஷயம், தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காகப் போட்டியிடுவதாக பலர் நினைக்கிறார்கள். அது தவற. விருப்ப மனுவே கொடுக்காமல்தான் இருந்தேன். அமைச்சர் செல்லூர் ராஜூதான் வற்புறுத்தி விருப்ப மனு அளிக்கச் சொன்னார். அதனால் மனு அளித்தேன். ஆனால், ஏற்கெனவே வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்து வைத்துவிட்டு கண்துடைப்புக்காக நேர்காணல் நடத்தினார்கள். இது மாதிரி ஒரு நேர்காணல் வேறு எங்கும் நடந்திருக்காது. விருப்ப மனு அளித்தவர்களை கும்பல் கும்பலாக உள்ளே வரச் சொன்னார்கள். பந்திக்கு முண்டியடித்து செல்வதுபோல் சென்ற பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி நொந்து நூலானார்கள். இப்படித்தான் நடந்தது நேர்காணல்.

கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்

எனக்கு சீட் கொடுக்க வலியுறுத்தவில்லை என்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வருத்தமில்லை. ஆனால், மத்திய தொகுதியில் யாருக்கு சீட் கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதைத் தலைமை விசாரித்திருக்கலாம். எனக்குத் தராவிட்டாலும், இதே தொகுதியில் கட்சிக்காக உழைத்த ஒருவருக்குக் கொடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இந்தத் தொகுதிக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லாத நபரைக் கூட்டணி கட்சி என்ற பெயரில் போட்டியிட சீட் வழங்கியிருக்கிறார்கள். கேட்டால், இவர் கட்சித் தலைமையில் உள்ளவரின் ஆதரவைப் பெற்றவர் என்கிறார்கள்.

யாராக இருந்தாலும் கட்சிக்குத்தான் ஆதரவாளராக இருக்க முடியும். தலைமையில் உள்ளவர்களுக்கு ஆதரவாளராக எப்படி இருக்க முடியும்? அப்படி இருப்பதற்கு என்ன தகுதி வேண்டும் என்று தெரியவில்லை. எனக்குக் கூழைக்கும்பிடு போடப் பிடிக்காது. காக்கா பிடிக்கத் தெரியாது. சுயமரியாதையோடு வாழ்ந்துவருபவன். கட்சியைவைத்தோ, அமைச்சரைவைத்தோ ஆதாயம் தேட விரும்புகிறவன் அல்ல. ஆளும்கட்சி நிர்வாகிகள் வருமானத்துக்காக மதுக்கடை பார் நடத்துவார்கள். நானோ, ஓடாமல் மூடிக்கிடந்த ஆவின் பார்லரை எடுத்து நடத்துகிறேன்.

கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்

தி.மு.க-வில் இருந்த நான் பெரிதும் மதிக்கும் பி.டி.ஆர் அய்யா மறைவுக்குப் பின் நடந்த தேர்தலில் அவர் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தராததால் ஆவேசப்பட்டு ஆளும்கட்சியான தி.மு.க-விலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தேன். அந்த அளவுக்கு அறச்சீற்றம் கொண்டவன்.

மக்களுக்குச் சேவை செய்வதை வாழ்க்கையாக்கிக்கொண்டவன் நான். இன்றுவரை ஆதரவற்றவர்களுக்கும், எளிய மக்களுக்கும் பல வகையில் உதவிவருகிறேன். அதுபோல் கட்சியிலும் விசுவாசமாக இருந்தேன். கட்சி சொன்ன வேலைகள் அனைத்தையும் செய்தேன். என்னால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டதில்லை.

தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் உயர் கல்வி வரை பயிலும் செலவை ஏற்றுவருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆதரவற்ற பெரியவர்கள் 150 பேருக்கு தினமும் தரமான உணவு அளித்துவருகிறேன். ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறேன். என்னை கவனித்துக்கொண்ட தாயாரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார். எனக்கென்று தனியாகக் குடும்பம் இல்லை. நான் இந்தப் பகுதி மக்களுக்காகச் சேவை செய்து இங்கேயே மரணித்துவிடுவேன். இதுதான் என் வாழ்க்கை.

நான் அ.தி.மு.க-வுக்கு வந்த பின்பு, தி.மு.க ஆட்சியில் பல வழக்குகளை என்மீது போட்டார்கள். அனைத்தையும் எதிர்கொண்டேன். அவற்றில் சில வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி என ஒவ்வொரு தேர்தலின் போதும் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை, கடைசி நேரத்தில் என்னை மறந்துவிடுவார்கள்.

இந்த முறை எனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. இந்தத் தொகுதியைச் சேர்ந்த கட்சியினரை தலைமை மறந்துவிட்டதால், கொந்தளித்துப்போன மக்களின் பிரதிநிதியாக நான் போட்டியிடுகிறேன். கொள்கை, திட்டத்தைச் சொல்லி வாக்கு கேட்காமல், பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியினர் இருக்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேலைக்காக மட்டுமே கட்சியினரைப் பயன்படுத்தும் மோசமான கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் இவர்களை மறந்துவிடுவார்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

 கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்

மக்களிடம் சென்று வாக்கு கேட்க அனைத்துத் தகுதிகளும் எனக்கு இருக்கின்றன. அவர்கள் குடும்பத்தில் ஒருவன். ஒவ்வொரு வீட்டு மொய் நோட்டிலும் என் பெயர் இருக்கிறது. அதேபோல் இந்தத் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் பெயர் இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள். நான் வெற்றி பெற்றால் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வார்டிலும் மூன்று மாதம் வீடெடுத்துத் தங்கி அங்குள்ள பிரச்னைகளை சரிசெய்துவிட்டு அடுத்த வார்டுக்கு சென்றுவிடும் திட்டம் எனக்கு இருக்கிறது. ஒப்பந்த வேலைகள் அனைத்தையும் கண்காணிக்க, தொகுதி மக்களைக்கொண்ட குழுக்களை அமைப்பேன். இதுபோல பல திட்டங்கள் இருக்கின்றன. என்னைக் கொண்டாடும் மக்கள், எனக்கு ஆதரவு அளிக்கிறார்களா என்பதைப் பார்க்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது'' என்றார்.

மதுரை மத்திய தொகுதியில் கிரம்மர், வின்னரா, ரன்னரா, ஃபன்னரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு