Published:Updated:

``மோடியே கைதட்டினாராம், ரசித்தாராம்!” - வைகோ மீது பாய்ந்த கே.எஸ்.அழகிரி

பிரேம் குமார் எஸ்.கே.

``நீண்டநெடிய நாடாளுமன்ற அனுபவம் கொண்ட வைகோ, கருத்துகளை வெளிப்படுத்துவதைவிட, உரக்க குரல் எழுப்புவதன் மூலம் நிதானத்தையும் பக்குவத்தையும் இழந்திருப்பக் காண முடிகிறது. ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆத்திரமும் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது.''

நாடாளுமன்றத்தில் வைகோ
நாடாளுமன்றத்தில் வைகோ

காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. ஆனால், அதன் சலசலப்பு இன்னும் ஓயவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்ட, தி.மு.க கூட்டணியில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

“நான் இப்பிரச்னையில் காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன். என்னைப் பேச அனுமதிக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தவே, முன்வரிசையில் இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``வைகோவைப் பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்கள் கேட்கிறோம்” என்று சொன்னதும், வெங்கைய நாயுடு, வைகோவைப் பேச அனுமதித்தார். வைகோ பேச்சின் ஆரம்பம் முதலே ஆக்ரோஷம் வெளிப்பட்டது. ``காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்னை இப்படி வெடிப்பதற்கே, காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவற்றைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை, அடிமுதல் நுனிவரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது’ என மத்திய அரசை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியையும் சேர்த்து விமர்சித்தார்.

இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணியில் இருந்துகொண்டு வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்தது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் வைகோவை அரசியல் நாகரிகமற்றவர் என்று விமர்சித்திருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

கே.எஸ் அழகிரி, ``காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் முன்னறிவிப்பின்றி உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதைக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், ஒரே உறுப்பினரை மட்டும் கொண்ட ம.தி.மு.க-வின் சார்பாக வைகோ பேசுவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டார். இதைப் பார்த்த அமித்ஷா, ‘வைகோவின் பேச்சை கேட்க ஆவலோடு இருக்கிறோம். அவரை அனுமதியுங்கள்” என்று பரிந்துரை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தன்னை அண்ணாவின் வழியில் வந்ததாகக் கூறிக்கொள்கிற வைகோ, கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை வைக்க முயற்சி செய்யும் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகக் குற்றம்சாட்டி பேசினார். இப்படி பேசுவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே கருதப்படுகிறது.

நீண்டநெடிய நாடாளுமன்ற அனுபவம் கொண்ட வைகோ, கருத்துகளை வெளிப்படுத்துவதைவிட, உரக்க குரல் எழுப்புவதன் மூலம் நிதானத்தையும் பக்குவத்தையும் இழந்திருப்பதைக் காண முடிகிறது. ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆத்திரமும் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது. தெருமுனையில் மேடை போட்டு மைக்பிடித்து ஆவேசமாகக் கத்துவதுபோல, நாடாளுமன்றத்தில் கத்தி பேசுகிறார். எச்சரிக்கிறேன் என்பது போலவும் சாபம் தருவது போலவும் பேசுகிறார். அவர் பேசியபோது பிரதமர் மோடியே கைதட்டினாராம், ரசித்தாராம். வைகோ எதை எதிர்பார்த்தாரோ, அது நடந்திருக்கிறது.

``மோடியே கைதட்டினாராம்,  ரசித்தாராம்!” - வைகோ மீது பாய்ந்த கே.எஸ்.அழகிரி

காஷ்மீர் பிரச்னையில் வைகோ பேச எடுத்துக்கொண்ட நேரத்தின் பெரும் பகுதியில் அவர் காங்கிரசை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். `என்னைப் பேச விடுங்கள். நான் காங்கிரசை தாக்கிப் பேச வேண்டுமென்று” அவர் அனுமதி கேட்ட விதமும், அதை அமித்ஷா ஆமோதித்து அனுமதி வழங்க பரிந்துரை செய்ததும் மாநிலங்களவையில் நடந்திருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான பிறகு, நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது. சுப்பிரமணிய சுவாமியை சந்திக்கிறார், மோடியை சந்திக்கிறார், பா.ஜ.க-வின் தலைவர்களை சந்திக்கிறார். அவர் பா.ஜ.க-வின் ஆதரவாளர் என்ற முத்திரையைத் தவிர்ப்பதற்காக டாக்டர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கிறார். இதன்மூலம் வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வைகோவின் அரசியல் பாதையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். 18 ஆண்டுக்காலம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்து அழகு பார்த்த தி.மு.க-வுக்கு பச்சை துரோகம் செய்தவர், கருணாநிதிக்காக உயிரை விடுவேன் என்று கர்ஜித்த வைகோ, பலமுறை அவரது முதுகில் குத்தியிருக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவரை வேலூர் சிறையில் சென்று சந்தித்து தமது கூட்டணியில் இணைத்துக் கொண்ட கருணாநிதியின் பெருந்தன்மை எங்கே, வைகோவின் சிறுமைத்தனம் எங்கே ?

வைகோ
வைகோ

2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வை வீழ்த்துவதற்கு தி.மு.க தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்தபோது அதற்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் வைகோ. இதற்காகவே மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியவர் வைகோ. இதற்குக் காரணம் ‘தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது. ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது” என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சிதான்.

காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் வைகோ, என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூற தயாராக இருக்கிறோம்.
கே.எஸ்.அழகிரி

காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் என்கிறார். இதைத்தான் பா.ஜ.க-வும் சொல்கிறது. தத்துவ இயலில் ஒரு வாதம் உண்டு. தீவிர இடதுசாரிகளும், வலது சாரிகளும் வெவ்வேறாகக் காட்சி அளிப்பார்கள். ஆனால், ஒரே விதமாக பேசுவார்கள். அதைத்தான் மோடியும் வைகோவும் செய்து கொண்டிருக்கிறார்கள். நேருவினுடைய மிக உறுதியான லட்சிய நோக்கினாலும், நடவடிக்கையினாலும்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இல்லையேல், ஜின்னாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானோடு இணைந்திருக்கும். ஒருவாரகால நடவடிக்கையின் மூலம் உலகின் மிக அழகிய நிலப் பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேரு பெருமகனாருக்கு உண்டு. இதைத் துரோகம் என்று வைகோ சொல்கிறாரா ?

`ஒரே உரையில் உலக ஃபேமஸ்..!’ - காஷ்மீர் தலைவர்களை க்ளீன் போல்டாக்கிய லடாக் எம்.பி பேசியது என்ன?

காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் வைகோ, என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூற தயாராக இருக்கிறோம். பாம்பையும் கீரியையும் சண்டையிட வைப்பதாகச் சொல்லும் மோடிமஸ்தான், கடைசி வரை அந்தச் சண்டையை நடத்தவே மாட்டான். அதுபோல, துரோகம், துரோகம் என்று சொல்லும் வைகோ, எது துரோகம் என்று சொல்லாமல் தவிர்க்கக் கூடாது. தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை உலகமே அறியும். அது அவருக்குப் புரியவில்லை என்றால், அதைப் புரிய வைக்கிற ஆற்றல் தமிழக காங்கிரஸுக்கு உண்டு.

மோடி - வைகோ
மோடி - வைகோ

அண்ணாவின் பெயரை மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்குகிற வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கிற பா.ஜ.க-வின் சதி திட்டத்துக்கு துணை போகலாமா ? இதைவிட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்துவிட முடியும்? தி.மு.க - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் ம.தி.மு.க இருக்கிறது. மாநிலங்களவையில் ஒரே உறுப்பினராக இருக்கிற ம.தி.மு.க-வின் பிரதிநிதி வைகோ காங்கிரஸைப் பற்றி விமர்சிப்பதை எதிர்த்து, நூறு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வைகோவுக்கு எதிரி பா.ஜ.க.வா, காங்கிரஸா? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரஸையே விமர்சிக்கிற அரசியல் நாகரிகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் தொடருமேயானால் கடுமையான ஏவுகணைகளை காங்கிரஸ் கட்சியிலிருந்து வைகோ மீது ஏவி விடப்படும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரே கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக மோதிக்கொள்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.