Published:Updated:

`ஆட்சி மாற்றத்தின் அறிகுறி இதுதான்'- இடைத்தேர்தல் குறித்து கே.எஸ்.அழகிரி!

``நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிறது என்பதே ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிதான்” எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்‌.அழகிரி தெரிவித்துள்ளார்.

KS Alagiri
KS Alagiri

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்‌ அழகிரி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”காந்தியின் நினைவுக்கும் கன்னியாகுமரிக்கும் மிகுந்த பொருத்தம் உள்ளது. காந்திக்கும் காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால், பா.ஜ.கவிற்கு துப்பாக்கியுடன்தான் உறவு உண்டு. சுதந்திரத்திற்காக பா.ஜ.கவினர் ஒரு நிமிடம்கூட சிறையில் இருந்தது இல்லை. ஆனால், எங்களது ஜனநாயகம் அவர்களையும் அங்கீகரித்துள்ளது.

KS Alagiri press meet
KS Alagiri press meet

தபால்துறை, ரயில்வே துறை ஆகியவற்றில் தமிழில் தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுத்து, ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே மாதத்தில் செய்துள்ளனர் தமிழக எம்.பிக்கள். தமிழக அரசு செயலிழந்து விட்டது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்களை இந்த அரசால் பெற முடியவில்லை. மத்திய அரசை எதிர்த்துகூட பேச முடியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அடிமை அரசு தேவையா? மத்தியிலும் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. மோட்டார் வாகன உற்பத்தி சரிவடைந்து விட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயப் பொருள் உற்பத்தியும் 2 சதவிகிதம் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலை அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

மத்திய அரசின் ஆண்டுச் செலவு 14 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஏனெனில், செலவு செய்வதற்கு மத்திய அரசிடம் பணம் இல்லை. தொழில் உற்பத்தியைப் பெருக்க ஜி.எஸ்.டி வரியை நெறிப்படுத்தி குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்துள்ளது மத்திய அரசு. இதனால் பெரு நிறுவனங்களும், பெரும் முதலாளிகள் மட்டுமே லாபம் அடைவர். மத்திய அரசு எதிருக்குப் புதிரான செயல்களைச் செய்து வருகிறது. இதற்கு பெயர்தான் துக்ளக் ஆட்சி. மோடி என்பவர் ஒரு மாயை. அவருடைய பிம்பம் மெல்ல மெல்ல உடைந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு எல்லாவற்றையும் கார்ப்பரேட் போல விளம்பரம் செய்து வருகிறது‌. காங்கிரஸால் மட்டுமே இந்தியாவில் நிலையான, வலிமையான ஆட்சியைத் தர முடியும்.

KS Alagiri
KS Alagiri

தமிழகத்தில் தொழில் தொடங்க பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவிகரமாக இல்லை. அதனாலேயே தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களின் ஆலை விரிவாக்கத்தை மற்ற மாநிலங்களில் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவதைப் போல உள்ளது தமிழக ஆட்சியாளர்களின் செயல். மக்களை திசை திருப்ப மத்திய பா.ஜ.க ஆட்சி என்ன செய்து கொண்டு இருக்கிறதோ, அதைப் பின்பற்றியே இங்குள்ள அ.தி.மு.க அரசும் செய்கிறது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் கடுமையாகப் பணியாற்றுவோம். இடைத்தேர்தலில், பணம் மக்களை சென்று சேராது. சேவைதான் மக்களைச் சென்று சேரும். சேவையை முன்வைத்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரசாரத்திற்கு அழைப்போம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிறது என்பதே ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி” என்றார்.