Published:Updated:

`2021ல் அவர் எடுக்கப்போகும் படத்தின் தலைப்பாகக் கூட இருக்கலாம்!’ - ரஜினி குறித்து கே.எஸ்.அழகிரி

``நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதை ரசிக்கலாம். ஆனால், அவர்கள்.. நானே அரசியல் செய்வேன், நானே வழிநடத்துவேன் எனச் சொல்வது தவறு. நடிகர்களின் அரசியல் பிரவேசம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துவிட்டது” எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தூத்துக்குடியில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,``மத்திய பா.ஜ.க ஆட்சியில் 3.5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மத்திய அரசின் எந்த ஒரு நடவடிக்கையும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக இல்லை. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் வந்திருந்தால், மக்களுக்கு பல நன்மைகளைச் செய்திருப்போம்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஆட்சியில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் விழுக்காடு குறைவாக இருந்ததற்காக ஐ.நா விருது வழங்கியது. இதுபோன்று காங்கிரஸ் பெற்றுத்தந்த அனைத்தையும் பா.ஜ.க அரசு இழந்து நிற்கிறது. வரும் 2021-ல் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பது, 2021- ல் அவர் எடுக்கப்போகும் படத்தின் தலைப்பாகக்கூட இருக்கலாம். அதே ஆண்டில் தி.மு.க கூட்டணி ஆட்சி அமையும் என்பதைக்கூட அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

`2021-ல் தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்!' - ரஜினி

நடிகர்கள் ரஜினி, கமல் போன்றோர் மக்களின் சமூகப் பிரச்னைக்காக என்றாவது போராடி இருக்கிறார்களா? அரசின் பிரச்னைகளை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்களா? அவர்கள் சொன்ன கருத்தில் ஆணித்தனமாக நிலை பெற்றிருக்கிறார்களா?. ரஜினி, கமலின் அரை நூற்றாண்டுக்கால சினிமா வாழ்வில் பொதுமக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்? நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதை ரசிக்கலாம்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஆனால், அவர்கள்.. நானே அரசியல் செய்வேன், நானே வழிநடத்துவேன் எனச் சொல்வது தவறு. ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறு என்பது எனது கருத்து. நடிகர்கள் சினிமாவில் ஓய்வு பெறும் காலத்தில் அரசியலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடிகர்களின் அரசியல் பிரவேசம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துவிட்டது. அதன்பிறகு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியினர் பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பகுதியாக, புதிய மாவட்டங்களில் தொகுதி மறுவரையரை செய்யப்படவில்லை என்பதும் அவர்களின் சூழ்ச்சிகளில் ஒன்று.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தினால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தில்தான், மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இதை அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான பா.ஜ.கவே எதிர்த்துள்ளது”என்றார்.