Published:Updated:

`காங்கிரஸ் போட்டு வைத்திருந்த கணக்கு!' - ரஜினி மீது கே.எஸ்.அழகிரி பாய்வதன் பின்னணி என்ன?

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

``நண்பர் ரஜினிகாந்த் அவர்களே… உடன் இருப்பவர்கள் கூறுவதை நம்பி நீங்கள் பேசுவதால் இதுவரை பல விளைவுகளைச் சந்தித்து வருகிறீர்கள். இது நீடித்தால் கடுமையான வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுவீர்கள் என்று உங்களை எச்சரிக்க விரும்புகிறேன்.”

மத்திய பி.ஜே.பி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியிருக்கிறது. தமிழகத்திலும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கூறியிருக்கும் கருத்துக்கு, அவரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அந்த அறிக்கையில், ``குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது, `அதனால் நாட்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசியல் கட்சிகள் மக்களிடையே தவறான பிரசாரத்தின் மூலம் பீதியைக் கிளப்பி வருகின்றன” என்று கருத்து கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் யாரென்று அடையாளம் காட்டுவதற்கு இந்தக் கருத்து ஒன்றே போதுமானது. அவருடைய ஆன்மிக அரசியல் என்ற முகமூடி இன்று கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மதங்களைப் பிளவுபடுத்துவதுதான் அவரின் ஆன்மிக அரசியலா? நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்பும் நீ எந்த மதம், உன் தந்தை எந்த மதம்? நீ எங்கே பிறந்தாய் என்று நதிமூலம், ரிஷிமூலம் கேட்டு ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கூறுவதுதான் ஆன்மிக அரசியலா?

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

நண்பர் ரஜினிகாந்த் அவர்களே… உடன் இருப்பவர்கள் கூறுவதை நம்பி நீங்கள் பேசுவதால் இதுவரை பல விளைவுகளைச் சந்தித்து வருகிறீர்கள். இது நீடித்தால் கடுமையான வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுவீர்கள் என்று உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். சினிமா வேறு அரசியல் வேறு. சினிமாவில் எழுதப்படும் கதை வசனங்களை அப்படியே பேசுவது உங்களுக்குக் கைவந்த கலை.

ஆனால், அரசியலில் பிறர் எழுதிக்கொடுப்பதை நீங்கள் உள்வாங்கிக்கொண்டு அதை ஏற்றுக்கொண்டீர்களா? என்று உங்கள் அறிவைப் பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வந்தபின் கருத்துகள் கூறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். அஸ்ஸாமில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களை இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாரா ரஜினிகாந்த்? இலங்கைக்குச் செல்ல விரும்பாத பெரும்பாலான மக்களை, அவர்கள் விருப்பத்திற்கேற்ப இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை பி.ஜே.பியின் குடியுரிமை திருத்தச் சட்டம் வழங்கவில்லை. அதை எதிர்த்து குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? அதற்காக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நரேந்திர மோடியிடம் பேசுவாரா? இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் பொத்தாம் பொதுவாக குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்துப் பேசும் ரஜிகாந்தைப் பற்றி, தமிழக மக்கள் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தியிருக்கிறார். தமிழர்களின் விரோதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதன்மூலம் வகுப்புவாத பி.ஜே.பிக்குத் தமிழக அரசியலில் பல்லக்குத் தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார். அவரின் ஆன்மிக அரசியல் முகமூடி இன்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பி.ஜே.பியின் தூண்டுதல்களுக்கெல்லாம் ரஜினிகாந்த் பலியாக மாட்டார் என்று சொல்லிவந்த காங்கிரஸ், இப்போது கடுமையாக விமர்சித்துள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. இதுதொடர்பாக அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``பி.ஜே.பியின் தூண்டுதல்களுக்கெல்லாம் ரஜினிகாந்த் பலியாக மாட்டார், இரையாக மாட்டார் என்று அவர் பக்கமும் துண்டு போட்டு வைத்திருந்தது காங்கிரஸ். ஒருவேளை தேர்தல் நேரத்தில் தி.மு.கவின் கதவுகள் மூடப்படும் நிலை வந்தால் ரஜினிகாந்தை வைத்துக்கொண்டு அவர்களிடம் பேரம் பேசுவதுதான் காங்கிரசின் `2021 தேர்தல் திட்டம்’. அதன்மூலம் கூட்டணி பலம், ரஜினியின் இமேஜ் மற்றும் அகில இந்திய அளவில் பட்டியலின சமூக மக்கள் மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும் அவருக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் அதிக இடங்களைப் பெறலாம் என்பதுதான் காங்கிரஸ் போட்டு வைத்திருந்த கணக்கு. தற்போது அது தகர்ந்துவிட்டது என்பதுதான் காங்கிரசின் கோபத்திற்கான காரணம். மேலும், அந்தக் கோபத்தின் மூலம் தி.மு.க தலைமையையும் கூல் செய்வதற்குத்தான் ரஜினி மீது பாய்கிறார் கே.எஸ்.அழகிரி” என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு