பலத்த எதிர்பார்ப்புகளுடன் பா.ஜ.க-வுக்குத் தாவிய தி.மு.க-வின் சீனியர் கு.க.செல்வத்துக்கு ‘பல்பு’ கொடுத்துவிட்டது அந்தக் கட்சி. அங்கு இருக்கும் இடம் தெரியாமல் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து, பா.ஜ.க-வில் சேர்ந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் யூ டர்ன் அடித்து மீண்டும் தனது தாய்க்கழகமான தி.மு.க-வுக்கே திரும்பியிருக்கிறார் கு.க.செல்வம். தி.மு.க-விலிருந்து அவர் நீக்கப்பட்டபோது தலைமைக்கு எதிராகக் கடுமையாகக் கொந்தளித்தவர், இப்போது பா.ஜ.க-வுக்கு எதிராகக் கருத்துகளைக் கொட்டியிருக்கிறார். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...’ என்றாலும், கட்சியிலிருந்து விலகும்போது அவர் பேசிய வார்த்தைகளையும், தற்போது தி.மு.க-வில் இணைந்த பிறகு அவர் பேசிய வார்த்தைகளையும் இங்கே பார்ப்போம்...
அப்போ...
* “என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை... என்னைக் கட்சியிலிருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை!”
* “தந்தை சொன்னார், பிறகு பிள்ளை சொன்னார், இப்போது பேரன் சொல்கிறார்!”
* “வாரிசு அரசியல் போய், இப்போது குடும்ப அரசியலாக மாறிவருகிறது!”
* “தி.மு.க-வில் தயவுசெய்து யாரும் 55 வயதுக்கு மேல் கட்சியில் இருக்காதீர்கள். என் நிலைமைதான் உங்களுக்கும் வரும்!”
* “உதயநிதி இளைஞர் அணியில் இருப்பவரை மட்டுமே ஊக்குவித்துவருகிறார். கட்சியில் இருக்கும் மூத்தவர்களை டம்மி ஆக்குகிறார்!”

இப்போ...
* “தமிழகத்தை மத்திய பா.ஜ.க அரசு முற்றிலும் புறக்கணிக்கிறது. நீட் தேர்வு, வெள்ள நிவாரண நிதி, ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை ஆகிய விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து பா.ஜ.க-விலிருந்து விலகினேன்!”
* “விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது!”
* “நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. இவை அனைத்தையும் கண்டித்துத்தான், நான் பா.ஜ.க-விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க-வில் இணைந்துள்ளேன்!”
* “குடும்பத்தில் அண்ணன் தம்பிக்கு இடையே சின்ன பிரச்னை ஏற்பட்டால், எப்படி வெளியே செல்வார்களோ, அதுபோலத்தான் நானும் சென்றேன். இப்போது மீண்டும் தி.மு.க-வில் இணைந்துள்ளேன்!”
* “தமிழ்நாட்டில் வருங்காலத்தில் பா.ஜ.க-வுக்கு இருண்ட காலம்தான். 10 ஆண்டுகளுக்கு பிறகும் இங்கு தி.மு.க ஆட்சிதான் தொடரும்!”