அடிப்படை வசதிகளைச் செய்து தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது, ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஓர் உத்தி. ஆனால், ``கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் 20 அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், 24 வார்டுகளிலும் பொது வேட்பாளராகக் களமிறங்குவோம்’’ என்று எச்சரிக்கைவிடுத்திருக்கிறது இளைஞர் அமைப்பு ஒன்று.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் 200 பேர் இணைந்து, ‘குளித்தலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பைத் தொடங்கி, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது இளைஞர்கள் சிலருடன் உருவான இந்த அமைப்பு, இப்போது விருட்சமாக வளர்ந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரண்டாயிரம் இளைஞர்களைத் திரட்டி, குளித்தலையில் பிரமாண்டமான பேரணியை நடத்தியவர்கள் இந்த அமைப்பினர். திருச்சி, கரூர் மாவட்டங்களைத் திகைக்கவைத்தது அந்தப் போராட்டம். குளித்தலை நகருக்குள் வராமல் பைபாஸில் மட்டுமே விரைந்த அரசுப் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக குளித்தலை நகருக்குள் அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன. குளித்தலை கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட, எம்.பி டி.கே.ரெங்கராஜனிடம் 25 லட்சம் ரூபாய் நிதி பெற்றார்கள். குளித்தலை - முசிறி பெரியார் பாலத்தில் தங்களது போராட்டம்மூலம் மின்விளக்குகள் பொருத்தவைத்தார்கள். இப்படி இந்த இளைஞர்கள், போராட்டங்கள்மூலம் சாதித்தவை ஏராளம்.

இந்த நிலையில்தான், ‘குளித்தலை நகராட்சியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்’ என்று 20 பிரச்னைகள்குறித்து தீர்மானம் நிறைவேற்றி, அதை அரசின் கவனத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதை நிறைவேற்றாதபட்சத்தில் குளித்தலை நகராட்சியின் 24 வார்டுகளிலும் பொது வேட்பாளராகக் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர் சுந்தரிடம் பேசினோம். ‘‘குளித்தலை, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இங்கே நிரந்தரமான பேருந்துநிலையம்கூட கிடையாது. பேராளம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பெயருக்கு சிறு பேருந்து நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு ஐந்து பேருந்துகள்கூட நிற்க முடியாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, டோல்கேட் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை எந்த வேலையையும் தொடங்கவில்லை. எனவே, அங்கு புதிய பேருந்துநிலையம் அமைக்க வேண்டும். குளித்தலை நகரில் தீயணைப்பு நிலையம் இல்லை; துணை மின்நிலையம் கிடையாது; விளையாட்டு மைதானம் ஒன்றுகூட கிடையாது; மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் குளித்தலை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப்படவில்லை. இப்படி இங்கு எல்லாமே `இல்லை’மயம்தான்.

குளித்தலை மற்றும் சுற்றி உள்ள கிராம மக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். இங்கே விவசாயம் சார்ந்த புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். கடம்பர் கோயில் காவிரி ஆற்றுப்பகுதியில், புதிய பூங்கா மற்றும் உயர் மின்கோபுர விளக்கு அமைத்து அந்தப் பகுதியைச் சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். வாரச்சந்தைக்கு தனி இடம் ஒதுக்கி, அனைத்து வசதிகளுடன் வாரச்சந்தை உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், “குளித்தலை நகரத்தில் உள்ள ஒன்றிய அரசுப் பள்ளிகளை, நகராட்சிப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். இங்கு எந்தத் தொழில் வளர்ச்சியும் கிடையாது. இதனால், இங்கு இருந்து கரூர் மற்றும் திருச்சிக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்குச் செல்கிறார்கள். இங்கேயே தொழிற் சாலைகளை அமைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். ஒருகாலத்தில் குளித்தலையில் 13 பாசன வாய்க்கால்கள் ஓடிக்கொண்டிருந்தன. இப்போது பெரிய வாய்க்கால் ஒன்று மட்டுமே ஓடுகிறது. மற்றவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. அவற்றை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி 20 பிரச்னைகளை நாங்கள் பட்டியலிட்டிருக் கிறோம்.

இவற்றுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் இளைஞர்கள் நாங்கள் பொது வேட்பாளர்களாகக் களமிறங்குவோம். இதையே தீர்மானமாக நிறைவேற்றி, கரூர் மாவட்ட நிர்வாகம் உட்பட தமிழக அரசுக்கும் அனுப்பியிருக்கிறோம். இளைஞர்கள் நாங்கள் பதவிக்கு வந்தால், குளித்தலை நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக மாற்றிக்காட்டுவோம்” என்றார்.

குளித்தலை இளைஞர்கள் கோரிக்கையை வென்றெடுத்தால், தேசத்துக்கே முன்மாதிரியாக இருக்கும்.