Published:Updated:

`பயப்படாதீங்க எடியூரப்பா... நான் கவிழ்க்க மாட்டேன்!'- பி.ஜே.பி-யைக் கலாய்த்த குமாரசாமி

குமாரசாமி
குமாரசாமி ( ANI )

காங்கிரஸ் - மஜதவுக்கு ஏற்பட்ட அதே ’அமைச்சர்’ பதவி பிரச்னை தனது கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதால் நொந்துபோய் இருக்கிறார் எடியூரப்பா.

ஒருவழியாக தனது முதல்வர் பதவிக்குப் பங்கம் வந்துவிடாத வண்ணம் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் எடியூரப்பா வெற்றிபெற்றுவிட்டார். நான்காவது முறையாக முதல்வர் ஆனாலும், `இம்முறை முழு ஆட்சிக்காலத்தையும் முடிப்பேன்’ என்ற சூளுரையுடன் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். இடைத்தேர்தல் அவருக்கு தெம்பு அளித்தாலும் காங்கிரஸ் - மஜதவுக்கு ஏற்பட்ட அதே ’அமைச்சர்’ பதவி பிரச்னை தனது கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதால் நொந்துபோய் இருக்கிறார் எடியூரப்பா.

எடியூரப்பா
எடியூரப்பா

எனினும் தனக்கு ஆட்சி அமைக்க உதவிய காங்கிரஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பேர் அடங்கிய அமைச்சர் பட்டியலை பா.ஜ.க தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார் எடியூரப்பா. அவரின் பட்டியலுக்கு இதுவரை பா.ஜ.க டெல்லி தலைமை ஒப்புதல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஹசன் தொகுதியில் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, எடியூரப்பாவைக் கலாய்த்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசும்போது, ``15 முதல் 20 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெளியே வரத் தயாராக உள்ளனர். எனினும் எடியூரப்பா தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தும் எந்தவொரு 'தீய செயலிலும்' ஈடுபட மாட்டேன்.

ஒரு முன்னாள் கர்நாடக முதல்வராக மாநிலத்தின் வளர்ச்சியே எனக்கு முக்கியமான ஒன்று. எடியூரப்பா பெரிய கஷ்டங்களை அனுபவித்து நான்காவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். அதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் உங்கள் அரசாங்கத்தைத் தொந்தரவு செய்வேன் என்று எங்கும் சொல்லவில்லை. எந்த வகையிலும் நான் உங்கள் ஆட்சிக்கு இடையூறு தரமாட்டேன்.

எடியூரப்பா, குமாரசாமி
எடியூரப்பா, குமாரசாமி

பா.ஜ.க-வை விட்டு 15 முதல் 20 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறி வரத் தயாராக இருக்கும்போது நான் ஏன் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கக் கூடாது என என்னிடம் சிலர் கேட்கின்றனர். ஏன் இன்னும் அமைதியாக இருக்கின்றீர்கள் என்றும் கூறுகின்றனர். இதற்கு நான் என்ன எடியூரப்பாவா ஆட்சியைக் கவிழ்க்க? எனக்கு என் மாநில நலனே முக்கியம். பயப்பட வேண்டாம் நான் ஆட்சியைக் கவிழ்க்க போவதில்லை" என்று கலாய்த்துள்ளார். இதில் பா.ஜ.கவிலிருந்து வெளியேற எம்.எல்.ஏ-க்கள் தயாராக இருக்கிறார்கள் என்று புதுக் குண்டை குமாரசாமி போட்டுள்ளது கர்நாடக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு