Published:Updated:

"மகள் தமிழிசை ஆளுநர்; இருந்தும் நான் ஏன் முதல்வரிடம் வசிப்பதற்கு வீடு கேட்டேன்?!"- குமரி அனந்தன்

குமரி அனந்தன்

"எனக்கு மிகவும் குறைவான பென்ஷன் வருகிறது. அதில்தான், வீட்டிற்கு வாடகை கொடுத்துவந்தேன். மகள் தமிழிசை ஆளுநர் ஆனவுடன் என்னை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ஆனால், அங்கு..." - குமரி அனந்தன்

"மகள் தமிழிசை ஆளுநர்; இருந்தும் நான் ஏன் முதல்வரிடம் வசிப்பதற்கு வீடு கேட்டேன்?!"- குமரி அனந்தன்

"எனக்கு மிகவும் குறைவான பென்ஷன் வருகிறது. அதில்தான், வீட்டிற்கு வாடகை கொடுத்துவந்தேன். மகள் தமிழிசை ஆளுநர் ஆனவுடன் என்னை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ஆனால், அங்கு..." - குமரி அனந்தன்

Published:Updated:
குமரி அனந்தன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், `தனக்கு வசிக்க வீடு வேண்டும்' என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு முதல்வர் வீடு வழங்கியுள்ளது பாராட்டுகளைக் குவித்து வந்தாலும், `நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருக்குச் சொந்த வீடுகூட இல்லையா?', `மகள் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருந்தும், தமிழக அரசிடம் வீட்டை எதிர்பார்க்கலாமா' போன்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், குமரி அனந்தனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"முதன்முதலாக 1977-ம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினரானபோது, தமிழில் கேள்வி கேட்கும் உரிமைக்காகப் போராடினேன். அதற்காக, பத்து முறைக்குமேல் சபாநாயகர் என்னை வெளியில் அனுப்பினார். ஆனாலும், தொடர்ந்து போராடி அந்த உரிமையைப் பெற்றேன். 'தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியையே பொய்யாக்கி வெற்றி பெற்றவர் குமரி அனந்தன்' என்று அப்போது முதல்வராக இருந்த கலைஞர் என்னைப் பாராட்டினார். அந்தளவிற்கு, தமிழ்தான் எனக்கு உயிர்.

குமரி அனந்தன்
குமரி அனந்தன்

ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர், நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான், இத்தனை ஆண்டுக்காலம் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தேன். சொந்தவீடு வாங்கவில்லை. மிகக்குறைந்த அளவில் வரும் பென்ஷனை வைத்துத்தான், வாடகைக் கொடுக்கிறேன். அதனால் என்னுடைய மகள் தமிழிசை ஆளுநரானவுடன் என்னையும், எனது மனைவியையும் ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

என் மனைவி கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு மறைந்துவிட்டார். மகள் தமிழிசையும் மருமகனும் பேரப்பிள்ளைகளும், என்னை நல்லமுறையில் பாசத்தோடு கவனித்துக்கொண்டார்கள். ஆனால், என் உயிரெல்லாம் தமிழ்நாட்டின் மீதுதான் இருந்தது. மகளுக்கே தமிழிசை என்று பெயர் வைத்த என்னால், தமிழை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் எப்படி இருக்கமுடியும்? அங்கு, தமிழைக் கேட்கவே முடியவில்லை. பேசவும் முடியவில்லை. ஹைதராபாத் முழுவதும் தெலுங்கு பேசுபவர்கள்தான் இருக்கிறார்கள். அதனால், அங்கு வசிக்க எனக்குப் பிடிக்கவில்லை.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

'மகளே... நான் தமிழ் பேசவேண்டும்; தமிழ் கேட்கவேண்டும். எனது உயிரோடு இணைந்தது தமிழ். நான் தமிழகத்திற்கே செல்கிறேன். அதற்கு நீ உடன்படவேண்டும்' என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டேன். 'எங்களுடனேயே இருங்கள்' என்று, எனது மகள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டார். 'பாண்டிச்சேரி ஆளுநர் மாளிகையிலாவது இருங்களேன்' என்றார். நான் எதற்கும் உடன்படவில்லை. எனக்குத் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி வேறு சிறந்த இடம் தோன்றவில்லை. அதனால்தான், தமிழ்நாட்டிற்கு வந்தவுடன், நமது முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்று, மிகுந்த அன்போடும் தாராள உள்ளத்தோடும் எனக்கு வீடு ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டிலேயே இருக்க, எனக்கு வாய்ப்புக் கொடுத்த முதல்வருக்கு நன்றி" என்கிறார் நன்றிப்பெருக்குடன்.