Published:Updated:

சிஏஏ ஆதரவு பேரணி, போராட்டம்!- இரண்டு லட்சம்பேரைத் திரட்டும் குமரி பா.ஜ.க

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

`24 மணி நேரப் போராட்டம் என்ற பெயரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்கிறார்கள். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.'

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க இரண்டு லட்சம் பேரைத் திரட்டி நாகர்கோவிலில் மார்ச் 1-ம் தேதி போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்துக்குப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் இரண்டு லட்சம்பேரை திரட்ட பா.ஜ.க-வினர் மும்முரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் தர்மராஜ்
செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் தர்மராஜ்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் கூறுகையில், ``குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு தி.மு.க, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.யும் துணைபோவதாகத் தெரிகிறது. குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

24 மணி நேரப் போராட்டம் என்ற பெயரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்கிறார்கள். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். இஸ்லாமிய பெயர் தாங்கிய சில அமைப்புகள் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காகப் போராட்டங்களை நடத்துகிறார்கள். பல நாடுகளிலிருந்து பெற்ற பணம் மூலம் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த இஸ்லாமிய பெயர் தாங்கிய அமைப்புகள் பண உதவி செய்கின்றன. தினமும் போராட்டங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதுதான் போலீஸுக்கு வேலையாக உள்ளது. குமரி மாவட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. அதனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடத்தி இஸ்லாமிய பெயர் தாங்கிய அமைப்புகளுடன் போராட்டம் நடத்துகின்றனர்.

தர்மராஜ்
தர்மராஜ்

குமரி மாவட்டம் அமைதியாக இருக்க மாவட்டம் முழுவதும் 24 பொதுக்கூட்டம் நடத்தியுள்ளோம். அடுத்ததாக மார்ச் 1-ம் தேதி பார்வதிபுரம் முதல் நாகர்கோவில் வரைபேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். இதில் அகில இந்தியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரண்டு லட்சம் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு