Published:Updated:

தஞ்சை: `2016 தி.மு.க தேர்தல் அறிக்கையில் வேளாண் மசோதா... பதில் சொல்லுங்க ஸ்டாலின்!’ - குஷ்பு காட்டம்

குஷ்பு
குஷ்பு

`` `தை பிறந்தால் வழிபிறக்கும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது, தி.மு.க-வுக்கு அல்ல பா.ஜ.க-வுக்குத்தான்” - குஷ்பு.

``அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி இருக்கிறார். பா.ஜ.க-வுக்கு என்று ஒரு புரோட்டோகால் இருக்கிறது. அதன்படிதான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவிப்போம். இது வழக்கமான ஒன்றுதான்” என தஞ்சாவூரில் நடந்த `நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான குஷ்பு தெரிவித்தார்.

பி.ஜே.பி பொங்கல் விழாவில் குஷ்பு
பி.ஜே.பி பொங்கல் விழாவில் குஷ்பு

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஐயாறப்பர் கோயில் வளாக முகப்பில் பா.ஜ.க சார்பில் `நம்ம ஊர் பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டது. இதில், பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்துகொண்டு பொங்கல்வைத்து வழிபட்டார். அவருடன் சேர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல்வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளரான பூண்டி வெங்கடேசன் செய்திருந்தார்.

பொங்கல்வைத்த பிறகு, கோயில் யானை தர்மாம்பாளிடம் குஷ்பு ஆசீர்வாதம் வாங்கினார். இதையடுத்து சன்னிதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் விழா மேடைக்கு வந்த அவர், பத்து நிமிடங்கள் பேசிய பிறகு புறப்பட்டுச் சென்றார்.

பி.ஜே.பி பொங்கல் விழாவில் குஷ்பு
பி.ஜே.பி பொங்கல் விழாவில் குஷ்பு

முன்னதாக குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அவர் கூறியதாவது, ``அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முதல்வர், துணை முதல்வர் பேசியிருக்கிறார்கள். அதே கூட்டத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பா.ஜ.க குறித்து அவரின் தனிப்பட்ட கருத்தைக் கூறியிருக்கிறார். அது அவர்களின் கட்சி விவகாரம். இது குறித்து எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் பதிலளிப்பார்.

நாட்டிலேயே மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இருப்பினும், எங்கள் கட்சிக்கு என்று ஒரு புரோட்டோகால் இருக்கிறது. அதன்படிதான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தெரிவிப்போம். இது வழக்கமான ஒன்றுதான். இது குறித்து ஏற்கெனவே, கட்சிப் பொதுச்செயலாளர் ரவி தெளிவுபடுத்திக் கூறியிருக்கிறார்.

குஷ்பு
குஷ்பு

`தை பிறந்தால் வழிபிறக்கும்’ என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது, தி.மு.க-வுக்கு அல்ல... பா.ஜ.க-வுக்குத்தான். ஸ்டாலினைப் பொறுத்தவரை அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என முடிவு செய்யட்டும். ஸ்டாலின் மட்டுமல்ல, யாருடன் வேண்டுமானாலும் போட்டிபோட நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால், நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்பது பற்றி எனக்கே தெரியாது. பா.ஜ.க இதுவரை போட்டியிடும் தொகுதிகள் குறித்து யாரிடமும் கேட்கவில்லை. அப்படி காங்கிரஸ் கட்சி தெரிவித்தால், அவர்கள் முதலில் தி.மு.க-விடம் எத்தனை சீட் கேட்டுவருகிறார்கள் எனப் பார்ப்போம்.

குஷ்பு
குஷ்பு

எனது பெயருக்குப் பின்னால் என் தந்தை பெயர் கிடையாது. அப்படியாக கார்த்திக் சிதம்பரம் அப்பா பெயரை ஒதுக்கிவிட்டு வந்தால், யார் வெற்றி பெறுவார்கள் எனப் பார்ப்போம். சிதம்பரம் காங்கிரஸிலிருந்து விலகி த.மா.க -வில் இணைந்து, தனியாகக் கட்சி தொடங்கி, போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்.

நாங்கள் எந்தக் கட்சிக்குச் சென்றாலும், விசுவாசமாக இருப்போம். சிதம்பரம் போன்ற ஆட்கள், எங்களை மாதிரி ஆட்கள் கட்சியிலிருந்தால் தன் மகனுக்குப் போட்டியாக வந்துவிடுவோமோ என பயந்து எங்களைப் புறக்கணித்தார். பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. யாரையும் யாரும் வழிநடத்தவில்லை.

பொங்கல் விழாவில் குஷ்பு
பொங்கல் விழாவில் குஷ்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முடிவுகட்ட ஒரு புதிய சட்டம் இயற்றும் வரை இது போன்ற வன்கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். வேளாண் சட்டங்களை சரியாகப் படித்துப் பார்த்தால், அனைவருக்கும் சாதகமான ஒன்றுதான் எனப் புரியும்.

இதற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு சட்மன்றத் தேர்தலில் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய வேளாண் மசோதா குறித்து ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் அல்லது தேர்தல் அறிக்கையில் கூறிய வேளாண் மசோதா தவறு என மன்னிப்புக் கேட்கட்டும். பிறகு அதைப் பற்றிப் பரிசீலிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு