Election bannerElection banner
Published:Updated:

``கன்டெய்னர் வைத்து அலுவலகம் போட்டேன்... சீட் இல்லை என்றாலும் வருத்தமில்லை” - குஷ்பு

குஷ்பு
குஷ்பு

``நான் ஏன் வருத்தப்படணும்? பா.ம.க எங்கள் கூட்டணிக் கட்சிதானே... என் கட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் வேலை செய்கிறேன். என் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு எப்போதும் நான் கட்டுப்படுவேன். அவ்வளவே!"

பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் குஷ்பு என்ற செய்தி பரபரத்தது. கன்டெய்னர்கள் வைத்து அங்கு தற்காலிக அலுவலகமே அமைத்துவிட்டார் என்றார்கள். ஆனால், கூட்டணியிலுள்ள பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதியைக் கடைசி நேரத்தில் அ.தி.மு.க ஒதுக்கிவிட்டதால் குஷ்பு அப்செட் என்கிறார்கள். இது குறித்து குஷ்புவிடம் பேசினோம்...

``சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியை பா.ம.க-வுக்கு ஒதுக்கிவிட்டார்கள். உங்களுக்கு வருத்தம் இல்லையா?"

``நான் ஏன் வருத்தப்படணும்? பா.ம.க எங்கள் கூட்டணிக் கட்சிதானே... என் கட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் வேலை செய்கிறேன். என் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு எப்போதும் நான் கட்டுப்படுவேன். அவ்வளவே!"

குஷ்பு
குஷ்பு

``இனிமேல் பா.ம.க-வுக்கு ஆதரவாக `சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி' தொகுதியில் வாக்குச் சேகரிப்பீர்களா?''

``நிச்சயம் வாக்குச் சேகரிப்பேன். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க என எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் ஜெயிக்கணும். அதற்காக பாடுவேன். வாக்குகள் சேகரிப்பேன்.''

``நீங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறீர்கள். கமலாலயம் சென்று `எனக்கு ஏன் சேப்பாக்கத்தை ஒதுக்கவில்லை?' என்று கேட்டதாகச் சொல்கிறார்களே... அது வதந்தியா? உண்மையா?"

அதிர்ச்சியாகி, சிரிக்கிறார், ``நான் எப்போ கமலாலயம் போனேன்? நீங்கள் சொல்லும் செய்தி எனக்கே புதுசா இருக்கே... இந்த மாதிரி என்னைச் சுற்றும் வதந்தி புதிது அல்ல. 2011, 2014, 2016, 2019, 2021... எனத் தேர்தல் நடக்கும்போதெல்லாம் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன் எனச் சில பத்திரிகைகளில் எழுதுவார்கள், சிலர் வதந்தி பரப்புவார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், பதில் மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்க முடியும்."

``சேப்பாக்கம் தொகுதியில் கன்டெய்னர்கள் எல்லாம் வைத்து அலுவலகம் போட்டிருந்தீர்களே?''

``அட... ஆமாம். யாரு இல்லை என்று சொன்னது? நான்தான் அந்தத் தொகுதியில் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர். அதனால் கன்டெய்னர் வைத்து அலுவலகம் போட்டேன்."

``கன்டெய்னர்கள் போட்டது உங்கள் செலவிலா... கட்சி செலவிலா?"

``என் செலவில்தான் அலுவலகம் அமைத்தேன்."

``உங்கள் குரலில் சின்னத் தொய்வு இருப்பதுபோலத் தெரிகிறதே..."

``அட இங்க பாருங்க... நீங்களே ஏதாவது சொல்லாதீர்கள். நான் இன்று பா.ஜ.க ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். ஹரியானாவில் முன்னாள் முதலமைச்சர், பெண் எம்.எல்.ஏ-க்களை டிராக்டரில் வைத்து இழுத்துக்கொண்டு போனார். அதுவும் மகளிர் தினம் அன்று இந்தச் சம்பவம் நடந்தது. இதைக் கண்டித்துத்தான் ஆர்ப்பாட்டம். வானதி ஶ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தார்கள். வெய்யிலில் நீண்ட நேரம் நின்றிருந்தேன். அதனால், உங்களுக்கு என் குரலில் தொய்வு தெரியலாம். மற்றபடி ஒன்றுமில்லை. நான் வருத்தத்தில் இருந்தால் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்துகொள்ளப்போகிறேன்?''

பரப்புரையில் குஷ்பு
பரப்புரையில் குஷ்பு

``மோடி தமிழகம் வந்தபோது அவரைச் சந்தித்தீர்களா?"

``சந்தித்தேன். அவரை வரவேற்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரே ஒரு பெண் நான் மட்டும்தான்."

``மோடி உங்களிடம் என்ன பேசினார்?"

``பப்ளிசிட்டிக்காக அதை வெளியில் சொல்ல முடியாதே..."

``2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க-வில் சீட் கேட்டிருந்தீர்களா?"

``நான் சீட் கேட்கவில்லை. இது குறித்து யாரிடமும் பேசவில்லை."

``இன்று இரவு பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது என்று சொல்கிறார்கள். அதில் உங்கள் பெயர் இருக்குமா?"

``நிஜமாக எனக்குத் தெரியாது. உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அதே அளவுக்குதான் எனக்கும் தெரியும்."

``என்ன எதிர்பார்த்து பா.ஜ.க-வில் சேர்ந்தீர்கள்?"

``நான் எதையும் எதிர்பார்த்து பா.ஜ.க-வில் சேரவில்லை. பா.ஜ.க எனக்குப் பிடித்திருந்தது, சேர்ந்தேன். இதற்கு முன் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தபோதும் சரி, காங்கிரஸிலிருந்தபோதும் சரி, எந்தக் கட்சியிலிருந்தபோதும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. மக்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு