Published:Updated:

மதுரை: `ஸ்டாலின் யாரைச் சொல்கிறார் என்று தெரிகிறது!’ - பிரசாரப் பயணத்தில் குஷ்பு

குஷ்பு
குஷ்பு

எதிர்க்கட்சிகள் விவசாயிகள் வாழ்வில் விளையாடுகின்றன. காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ.க செய்திருக்கிறது. இதே விஷயங்களை தி.மு.க-வும் தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களின் நன்மைகள் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல தமிழக பா.ஜ.க சார்பில், `விவசாயிகளின் நண்பன் மோடி’ என்கிற பிரசாரப் பயணம் தமிழகம் முழுதும் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பிரசாரப் பயணத்தில் கலந்துகொள்ள பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வந்திருந்தார்.

குஷ்பு
குஷ்பு

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு,``வட மாநிலங்களில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தூண்டி விடப்படுகிறது. இந்தக்ஷ் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வரவில்லை. பல ஆண்டுகளாக நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாய சங்கங்களிடம் ஆலோசித்து, அவர்கள் ஒப்புக்கொண்டதால் புதிய வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டது. இது விவசாயிகளுக்கு நன்மை செய்கிற சட்டம்.

ஆனால், எதிர்க்கட்சிகள் விவசாயிகள் வாழ்வில் விளையாடுகின்றன. காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ.க செய்திருக்கிறது. இதே விஷயங்களை தி.மு.க-வும் தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கொண்டு வரத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தார்கள். தமிழகத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் யாரும் பேசவில்லை. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூண்டிவிடுகின்றன.

குஷ்புவுக்கு வரேவற்பு
குஷ்புவுக்கு வரேவற்பு

விவசாயிகள் சந்தேகம் எழுப்பும் விஷயத்துக்கு வேளாண் சட்டத்தில் தீர்வு கூறப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 5 லட்சம் லாபம் கிடைக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் தி.மு.க - காங்கிரஸ் கட்சிகள் மக்களின் பிரச்னைகளைப் பேசவில்லை, மக்கள் பிரச்னைகளை அவர்கள் தீர்த்திருந்தால் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கும்.

டெல்லியில் நடைபெறுவதால்தான் அந்தப் போராட்டம் பெரிதாகப் பேசப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உ.பி போன்ற மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லை.

முத்தலாக் தடைச் சட்டத்தால் நிறைய பெண்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அதுபோல் மத்திய அரசு மக்களின் நலனுக்காகவே ஒவ்வொரு சட்டத்தையும் கொண்டு வருகிறது" என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் குஷ்பு.

பெண்களிடம் பேசும் குஷ்பு
பெண்களிடம் பேசும் குஷ்பு

`` `தி.மு.க வெற்றி பெறுவதைத் தடுக்கவே பா.ஜ.க தமிழகத்தில் சிலரை மிரட்டி கட்சி தொடங்கவைக்கிறது’ என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறாரே..."

``அவர் யாரைச் சொல்கிறார் என்று தெரிகிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே..."

``மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பதாக பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்களே... விவசாயிகள் போராட்டத்தில் நியாயம் இல்லை என்கிறீர்களா?"

``பா.ஜ.க.விலிருந்து அப்படி யாரும் கூறவில்லை. ஆனால், போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவது உண்மை."

குஷ்பு
குஷ்பு

``சபரிமலை விவகாரத்தைக் கையில் எடுத்து பல போராட்டங்களை நடத்தியும் கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லையே?"

``கேரளாவில் முன்பைவிட பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது. அங்கு படிப்படியாக வளர்ந்துவருகிறோம்."

``தமிழகத்தில் கொள்ளையடித்த பணத்தைத் தேர்தல் நேரத்தில் வழங்குவதாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?"

``அதைப் பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்."

``நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா?’’

``சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது எனக்குத் தெரியாது. எம்.எல்.ஏ சீட்டை எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை."

``ரஜினி கட்சி ஆரம்பித்து தனியாகப் போட்டியிட்டால் அது பா.ஜ.க-வுக்கு இழப்பை ஏற்படுத்துமா?"

``முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு பார்க்கலாம்."

குஷ்பு
குஷ்பு

``உங்கள் பார்வையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?"

"எனக்குத் தெரிந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை மக்கள் குறை சொல்லவில்லை."

``தி.மு.க., காங்கிரஸைத் தொடர்ந்து பா.ஜ.க-வில் உங்கள் அரசியல் பயணம் எப்படி இருக்கிறது?"

``தி.மு.க., காங்கிரஸைவிட பா.ஜ.க-வில் சிறப்பாக இருப்பதால்தான் என்னால் அரசியல் பயணத்தைத் தொடர முடிகிறது.’’

குஷ்பு
குஷ்பு

``அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க-தான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறதே?"

``அ.தி.மு.க அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மக்கள் எதிர்க்கவில்லை, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை இரண்டு கட்சித் தலைமைகளும் பேசி முடிவு செய்வார்கள்."

அடுத்த கட்டுரைக்கு