Published:Updated:

`அ.தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!' - கொதிக்கும் குஷ்பு

`அரசை கேள்வி கேட்பவர்களுக்கு, தேசத் துரோகி பட்டம் கொடுக்கும் மத்திய அரசின் ஆதரவாளர்களாகத்தான் அ.தி.மு.க ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என மகிளா காங்கிரஸின் தேசியச் செயலாளர் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

குஷ்பு
குஷ்பு

மகிளா காங்கிரஸின் தேசியச் செயலாளர் குஷ்பு, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ``தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை. தினமும் பத்திரிகைகளில் பெண்களில் ஏதாவது ஓரிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த அரசை, மக்கள் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக தேசத்துரோகி என்று பட்டம் கொடுப்பதற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது.

குஷ்பு
குஷ்பு

அப்படிப்பட்ட ஆட்சிக்கு ஆதரவாகத்தான் அ.தி.மு.க ஆட்சி செயல்படுகிறது. தொழில்ரீதியான வளர்ச்சிகளும் இல்லை. மாநில அரசின் கடன் மட்டுமே அதிகமாகிக் கொண்டே போகிறது. அப்படி என்றால் கடனில் கிடைக்கிற பணம் எங்கே செல்கிறது என்ற விபரமும் இல்லை. அது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவில்லை.

`அவர் இறக்குமதி வேட்பாளர்; இவர் `மேட் இன் நாங்குநேரி'!'- காங்கிரஸ் வேட்பாளரைக் கலாய்த்த ஜெயக்குமார்!

புதிதாக, அ.தி.மு.க சாதனைகளைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், தி.மு.கவின் முந்தைய சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதற்கு நிறைய திட்டங்கள் உள்ளது. இடைத்தேர்தலில் பணத்தை மட்டுமே அ.தி.மு.க தண்ணீராக செலவழித்து வருகிறது. பணத்தைக் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் அ.தி.மு.கவினர்.

குஷ்பு
குஷ்பு

ஆட்சியாளர்களைப் பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் வளர்ந்துள்ளனர். அந்த நிலைக்கு மக்கள் வளர்ந்துள்ளனர் என்றால், அதற்கு காரணம் அ.தி.மு.க ஆட்சியில் செய்த அராஜகங்கள்தான்”என்றார்.