`பிரசாரப் பயணத்தை வெற்றிபெறவைத்த காவல்துறைக்கு நன்றி!’ - மூன்றாவது நாளிலும் உதயநிதி கைது
`தேர்தல் பிரசாரப் பயணத்தை முதலில் தொடங்கிய என்னைக் கைது மேல் கைதுசெய்து மிகப்பெரிய வெற்றியை காவல்துறையினர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்'' - உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல்' பிரசாரப் பயணத்தின் 3-வது நாளிலும் கைதுசெய்யப்பட்டார்.

பிரசாரம் ஆரம்பித்த முதல் இரண்டு நாள்களிலும் கைதாகி விடுதலை செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், மூன்றாம் நாளான நேற்று (நவ.22 ) மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மண்டபத்தில் இளைஞர் அணியினரைச் சந்திக்காமல் வீட்டிலேயே கூட்டம் நடத்தினார். இளைஞரணிச் சந்திப்பை முடித்துவிட்டு மதிய உணவுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டார்.
குத்தாலம் கடைவீதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க, பெரும்கூட்டம் காத்திருந்தது. தஞ்சைச் சரக டி.ஐ.ஜி.ரூபேஷ்குமார் மீனா, மயிலாடுதுறை எஸ்.பி ஸ்ரீநாதா, திருவாரூர் எஸ்.பி துரை உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீஸார் உதயநிதி ஸ்டாலினைக் கைதுசெய்யக் காத்திருந்தனர். குத்தாலம் கடைவீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், குத்தாலம் அன்பழகன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்புக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய உதயநிதி, ``தேர்தல் பிரசாரப் பயணத்தை முதலில் தொடங்கிய என்னைக் கைது மேல் கைதுசெய்து மிகப்பெரிய வெற்றியைக் காவல்துறையினர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி ஏற்பட்டுருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலைப்போல், இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். நாங்கள் எப்போதும் மக்களைச் சந்திப்பவர்கள். தேர்தலுக்கு மட்டும் சந்திப்பவர்கள் அல்ல. எடப்பாடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சொத்து சேர்ப்பதிலேயே முழுக் கவனம் செலுத்துகிறார். மயிலாடுதுறை எம்.எல்.ஏ., பூம்புகார் எம்.எல்.ஏ இருவருக்கும் தலா ஆயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. இது எப்படி வந்தது? கொரோனாவால் இறந்துபோன அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலை ஒப்படைக்காமல் ரூ.800 கோடி எங்கே என்று கேட்டு பிரச்னை செய்தவர்கள் இவர்கள். வரும் தேர்தலில் சொத்து சேர்க்கும் கூட்டத்துக்குப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.
அருகிலிருந்த அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து முடித்ததும், உதயநிதியை போலீஸார் கைதுசெய்தனர். `144 தடை உத்தரவை மீறி கூட்டம் கூடியதாகவும், பொதுக்கூட்டம் நடத்தியதாகவும். அதனால் கைதுசெய்கிறோம்’ என்று போலீஸார் தெரிவித்தனர். பிரசார வேனில் ஏறிய உதயநிதியைக் கீழே இறங்க போலீஸார் வலியுறுத்தியதால், தி.மு.க தொண்டர்கள் வாகனத்தை நகரவிடாமலும், போலீஸார் கைதுக்குக் கண்டனம் தெரிவித்தும் மறித்தனர்.
சிறிது நேரம் கழித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ```சென்னையில் அமித் ஷா நடத்திய கூட்டத்துக்கு மட்டும் அனுமதியளித்த காவல்துறையினர், எனக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?’ என்று கேட்டேன். சரியான பதில் இல்லை. இன்னும் ஐந்து மாதம்தான் இவர்களது ஆட்டம். ஆகவே, தற்போது காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் கைதாகிறேன்" என்றார். அதன் பிறகு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் சென்று குத்தாலத்திலுள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். அவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், குத்தாலம் அன்பழகன், பாலஅருட்செல்வன், கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், அன்பில் பொய்யாமொழி உட்பட பலரும் கைதுசெய்யப்பட்டனர். இரவு 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார்.