Published:Updated:

`அவர்கள் ஒன்று சேர்ந்தால் எங்கள் வேலை சுலபமே!'- ரஜினி குறித்து கி.வீரமணி

கி.வீரமணி
கி.வீரமணி ( என்.ஜி.மணிகண்டன் )

``ரஜினியும் சுப்பிரமணிய சுவாமியும் ஒன்றாகச் சேர்ந்தால் எங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம்.

`ஜெயலலிதா அரசு என்று சொல்லிக்கொள்ளத் தமிழக அரசுக்குத் தகுதி இல்லை' என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார், நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

நீட் எதிர்ப்புக் கூட்டம்
நீட் எதிர்ப்புக் கூட்டம்
என்.ஜி.மணிகண்டன்

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது ``ஊழலைத் தடுக்க நீட் தேர்வு கொண்டுவந்தோம் என்று சொல்வது மிகப்பெரிய பொய். மனு தர்மத்தின் வழியில் குலக் கல்வியைக் கொண்டுவரும் முயற்சியும் கோச்சிங் சென்டர்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க முயற்சியும்தான் நீட் தேர்வு.

ராஜராஜ சோழன் கட்டிய கோயிலில் சம்ஸ்கிருதத்தில் குடமுழக்கு நடத்தவுள்ள நிலையில் தமிழில் நடத்த போராடி வருகிறோம். தமிழர்களுக்குக் கல்வி அறிவு கொடுக்கக் கூடாது சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். வர்ணாஸ்ரமத்தின்படி ஆட்சியமைக்கும் நிலையைத் தற்போது உருவாக்க முயல்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே துடைத்து எறிவோம்.

கி.வீரமணி
கி.வீரமணி
என்.ஜி.மணிகண்டன்

பெரியார் பெற்றுத் தந்த உரிமை எனும் முதுகெலும்பை உடைத்துவிட்டு நிற்கிறது தற்போதைய தமிழக அரசு. பா.ஜ.க பார்த்தாலே கீழே விழும் ராஜவிசுவாசியாக உள்ளது. இதை ஜெயலலிதா அரசு என்று சொல்லிக்கொள்ள தமிழக அரசுக்குத் தகுதி இல்லை. ஜெயலலிதா 69 சதவித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதற்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினோம்.

மத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைத் தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொள்கிறது. பல்கலைக்கழகங்களில் மாநில உரிமைகள் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. மருத்துவராக நினைத்த கூலித் தொழிலாளியின் மகளான அனிதா உட்பட 8 பேரின் உயிர்களைப் பறித்துள்ளது நீட் தேர்வு. ஜெயலலிதா இருக்கும்போது நீட்தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை.

கி.வீரமணி
கி.வீரமணி
என்.ஜி.மணிகண்டன்

அது போன்று தமிழக அரசால் இப்போது செய்ய முடியவில்லை. நீட் தேர்விலும் ஊழல், ஆள்மாறாட்டம் நடந்து வருகிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை'' என்றவர், ''பெரியார் பற்றிய பிரச்னையில் ரஜினிக்கு சுப்பிரமணிய சுவாமி ஆதரவு தருவதாகக் கூறியுள்ளாரே'' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``ரஜினியும் சுப்பிரமணிய சுவாமியும் ஒன்றாகச் சேர்ந்தால் எங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்த கட்டுரைக்கு