Published:Updated:

`தமிழகம் வரும் அமித் ஷா... அரசியல் மாற்றங்கள் போகப் போகத் தெரியும்!’ - எல்.முருகன்

அமித் ஷா
அமித் ஷா

வேல் யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அது தொடர்பாக ஒன்றிரண்டு நாள்களில் இறுதிசெய்வோம்

கொரோனா பரவலுக்குப் பின்னர் நடைபெற்ற பீகார் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணி சார்பாக விரைவில் நிதிஷ் குமார் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். இந்தநிலையில் பா.ஜ.க தலைமையின் கவனம், அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மாநிலங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல்

இந்தச் சூழ்நிலையில், `மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்சி மற்றும் அரசு நிகழ்சிகளில் பங்கேற்க வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார்’ என்ற தகவல் அரசியல் கவனம் பெற்றதாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது தடையை மீறி பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றுவருகிறது. தமிழக அரசு அதற்குத் தடை விதித்திருந்தாலும், யாத்திரையைத் தொடர்வதும், தடுத்து நிறுத்தி கைதுசெய்வதும், பின்னர் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதை ஆகியிருக்கிறது.

இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை, அரசியல் களத்தில் உற்று நோக்கப்படுகிறது. இன்று அமித் ஷா வருகை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ``மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையின்போது விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அந்த வரவேற்பு தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அளிக்கப்படும்” என்றார்.

அமித் ஷா
அமித் ஷா

தொடர்ந்து பேசியவர், ``மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டமும், அதைத் தொடர்ந்து, முக்கியக்குழுவின் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டங்களில் அமித் ஷா கலந்துகொள்கிறார். அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வார்.

அமித் ஷாவின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். தைரியம், புத்துணர்வை அளிப்பதாக இருக்கும். அமித் ஷா வருகையால் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் போகப் போகத் தெரியும். அமித் ஷாவின் வருகை எதிர்க்கட்சியினருக்கு பயத்தைக் கொடுப்பதாக அமையும்” என்றார் எல்.முருகன்.

வேல் யாத்திரையில் அமித் ஷா கலந்துகொள்வது குறித்துப் பேசிய எல்.முருகன், ``அமித் ஷா வரும் சமயத்தில் வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடப்பதால் அவர் கலந்துகொள்ள முடியாது. என்றாலும், வேறு சில மத்திய அமைச்சர்கள் வருவார்கள். வரும் 22-ல் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 23-ம் தேதி பழநியில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், நவ.2-ல் மதுரையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடகச் செய்தித் தொடர்பாளர் மாளவிகா சுவாமிமலையிலும், தேசிய செய்தித் தொடர்பாளர் புரந்தேஸ்வரி தென்காசியிலும், கன்னியாகுமரியில் தேசிய இளைஞரணித் தலைவர் தேஜஸ்வியும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

இறுதி நிகழ்வுக்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அது தொடர்பாக ஒன்றிரண்டு நாள்களில் இறுதிசெய்வோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு