Published:Updated:

பா.ஜ.க 40 வருடங்கள்: பீட்டர் அல்போன்ஸும் இல கணேசனும் என்ன சொல்கிறார்கள்? #BJPat40

`வலதுசாரி இயக்கங்களின் அடிப்படையான உட்கூறு என்பதே, `ஓர் எதிரியை வலுவாகக் கட்டமைக்க வேண்டும்' என்பதுதான். அந்த எதிரி கண்ணுக்குத் தெரியாத கற்பனையானதாகக்கூட இருக்கலாம்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடெங்கிலும் 40-வது ஆண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. 2 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இந்திய அரசியலில் தனது கணக்கைத் தொட்டங்கிய பா.ஜ.க இன்று இரண்டாவது முறையாகப் பெரும்பான்மை வெற்றி பெற்று மத்திய ஆட்சிப் பொறுப்பில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது.

ஆனாலும், அரசியல் ரீதியாக பா.ஜ.க-வின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் குறைவில்லாத நிலையே நிலவுகிறது. இந்நிலையில், 40-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிவரும் பா.ஜ.க-வின் கொள்கைகள் குறித்து விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், `1900-களில் இந்துத்துவா தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் போன்ற நிறுவனங்களினுடைய அரசியல் முகம்தான் பா.ஜ.க.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

1920-களிலிருந்தே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில், இந்து மதம் என்ற ஆயுதத்தை கையிலேந்திதான் இவர்கள் போராடி வந்தனர். ஆனாலும்கூட இந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இவர்களுக்கு மிகப்பெரிய தடையாக இருந்தார் மகாத்மா காந்தி. பிறப்பால், வளர்ப்பால், வாழ்க்கையால் சுத்த சுயம்பிரகாசமான இந்துவாக மகாத்மா காந்தி இருந்ததனால், அதே இந்து மதம் என்ற ஆயுதத்தை வைத்து இவர்களால் காந்தியை வீழ்த்த முடியவில்லை!

ஆனாலும்கூட இந்து மதத்தையும் மத ரீதியிலான உணர்வுகளையும் மக்களிடையே ஒன்றுதிரட்டி, அவற்றை வாக்குச் சீட்டுகளாக எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல பரிசோதனை முயற்சியை இவர்கள் மேற்கொண்டே வந்தனர். அதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்தான் அத்வானி. அவர் மேற்கொண்ட ரத யாத்திரைதான் பா.ஜ.க-வின் அரசியல் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த ரத யாத்திரையைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் வகுப்புவாத கலவரங்களின் மூலம்தான் தனக்கான அரசியல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது பா.ஜ.க. இன்றைக்கு இவ்வளவு பெரிய பெரும்பான்மையை அக்கட்சி தக்க வைத்திருப்பதுவும் இந்த அடிப்படையில்தான்.

தேர்தல் வெற்றிகளாலேயே இன்றைக்கு பா.ஜ.க-வினர் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைக்கூட அவர்களது மிகப்பெரிய வெற்றியாக நான் கருதவில்லை. ஆனால், தேசம் முழுவதும் இந்து வாக்கு வங்கியை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் மறுக்க இயலவில்லை. இந்த மிகப்பெரிய வாக்கு வங்கிக்கு அவர்கள் போடுகிற இரைதான் 'இஸ்லாமிய எதிர்ப்பு!'

வலதுசாரி இயக்கங்களின் அடிப்படையான உட்கூறு என்பதே, `ஓர் எதிரியை வலுவாகக் கட்டமைக்க வேண்டும்' என்பதுதான். அந்த எதிரி கண்ணுக்குத் தெரியாத கற்பனையானதாகக்கூட இருக்கலாம். ஹிட்லர், யூதர்களை எதிரிகளாகச் சித்திரித்தார். இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளிநாட்டிலிருந்து வந்து தங்கள் நாட்டில் குடியேறியவர்களை எதிரிகளாக முன்னிறுத்துகிறார். ஐரோப்பிய நாடுகளில் பலவற்றிலும்கூட 'இஸ்லாமியர்களை எதிரிகளாகச் சித்திரிப்பதுதான் அரசியல் ரீதியான தத்துவமாகவே மாறிப்போயிருக்கிறது.' இந்தவகையில், தாங்கள் உருவாக்குகிற இந்து வாக்கு வங்கிக்கு எதிராக, 'இஸ்லாமியர்'களை எதிரியாகக் கட்டமைத்து தங்கள் அரசியலை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பொதுவாக, ஜனநாயகத்துக்கு இருக்கக்கூடிய ஓர் எதிர்மறையான கூறு என்னவென்றால், அது எந்நேரத்திலும் பெரும்பான்மை வாதமாக மாறக்கூடிய அபாயம் உண்டு. ஜனநாயக ரீதியாகச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும்பான்மையை, 'பெரும்பான்மை வாதமாக' மாற்றக்கூடிய முயற்சியை கடந்த காலங்களிலும் கட்சிகள் செய்து வந்திருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும்கூட 'அவசரநிலை பிரகடனம்' என்ற ஜனநாயக மீறல் நடைபெற்றதுதான். ஆனால், அப்போது அந்தத் தவற்றைத் தட்டிக்கேட்பதற்கு நீதிமன்றங்கள், பத்திரிகைகள், குடிமைச் சமூகம் மற்றும் கொள்கைப் பிடிப்புள்ள அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு ஜனநாயக சக்திகளும் வலுவாக இருந்தன. இதையெல்லாம் கண்டுபிடித்துவிட்ட பா.ஜ.க, இந்த ஜனநாயக சக்திகளை செயலிழக்கச் செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்து, அதில் இப்போது வெற்றியும் பெற்றுவிட்டது. இதுதான் இன்றையச் சூழலில், மிகப்பெரிய அபாயமாக மாறியிருக்கிறது.

`அவசரநிலை பிரகடனம்' கொண்டுவந்ததைத் தவறு என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டவர் இந்திராகாந்தி. ஆனால், இந்த உணர்வை பா.ஜ.க-விடம் எதிர்பார்க்க முடியாது. குஜராத் கலவரத்தில் ஆரம்பித்து அவர்கள் நடத்திய பல்வேறு கலவரங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற தவறான கொள்கை முடிவுகளுக்கும் மனதளவில் சிறு வருத்தம்கூட தெரிவிக்க மாட்டார்கள் பா.ஜ.க-வினர். இந்த ஊரடங்கு உத்தரவு முடிவைக்கூட, மாநில முதல் அமைச்சர்களிடம் கலந்தாலோசிப்பதைக்கூட தேவையற்றது என ஒதுக்கித்தள்ளி வெறும் 4 மணி நேரத்தில் அவர்களாகவே முடிவெடுத்து நடைமுறைப்படுத்திவிட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆக, பா.ஜ.க இன்றைக்குத் தூக்கிப்பிடிக்கும் பெரும்பான்மைவாதம் என்பது, இந்தியா முழுக்க உள்ள மதம், மொழி, சமூகம் உள்ளிட்ட எல்லாவித சிறுபான்மையினருக்குமே அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பெரும்பான்மைவாதம் என்பது காலத்துக்கு ஏற்றவகையில் உருமாறிக்கொள்ளும் கொரோனா வைரஸ் போன்றது. சில இடங்களில் மொழிப் பெரும்பான்மை, சில இடங்களில் மதப் பெரும்பான்மை, இன்னும் சில இடங்களில் சாதிப் பெரும்பான்மை என இடத்துக்குத் தக்கவாறு தனது பெரும்பான்மை உருவத்தை மாற்றிக்கொண்டே போகும். சமூகத்தின் எந்தவொரு தரப்பும் இந்தப் பெரும்பான்மைவாதத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது.

'பெரும்பான்மைவாதத்தில் என்ன தவறு?' என்று சிலர் இப்போது கேள்வி கேட்கிறார்கள். 70 ஆண்டுக்கால சுதந்திர இந்தியா வரலாற்றில், இதுவரை நாம் பெற்றிருக்கிற அரசியல், சமூக முன்னேற்றங்களையும் நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற நிறுவனங்களையும் இந்தப் பெரும்பான்மைவாதம் தகர்த்துவிடும் என்பதே இதற்கான பதில். இன்றைக்கு எல்லாத் தளங்களிலுமே இந்தியாவோடு ஒப்பிடவே முடியாத அளவுக்குப் பின்னடைந்துவிட்ட பாகிஸ்தானே இதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

70 ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டின் தலைவர்கள் இதைத் தெளிவாக உணர்ந்திருந்ததால்தான், பெரும்பான்மை சமூகமாக இந்துக்கள் இருந்தபோதும்கூட, இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தார்கள். இதனால்தான் இன்றைக்கு உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்து நிற்கிறது.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளும்கூட, இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் அடிப்படை... நாம் அமைத்திருக்கும் 'மதச்சார்பற்ற நெறி சார்ந்த நமது சமூகம், நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டத்தின் வழியே இவற்றை நடைமுறைப்படுத்துகின்ற நிறுவனங்களின் வலிமை' என இவையனைத்தும்தான் நம்மை உலகளவில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. ஆனால், பெரும்பான்மை வாதத்தையும் சதாசர்வ காலமும் ஓர் எதிரியை கட்டமைத்துக் கொண்டேயிருக்கும் பா.ஜ.க-வின் இந்த வலதுசாரி அரசியலும் தொடருமேயானால், இந்தியாவின் பெருமைகள் அனைத்தையும் நாம் இழந்துவிடுவது நிச்சயம்!'' என்றார் உறுதியான குரலில்.

`வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது!' -7 நாளில் 1000 கிமீ கடந்து வந்த தமிழக இளைஞர்கள்

பா.ஜ.க மீதான இந்த அரசியல் விமர்சனங்களுக்கு விளக்கம் கேட்டு அக்கட்சியின் மூத்த தலைவரான இல.கணேசனிடம் பேசியபோது, ''அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி என இவை இரண்டும்தான் இந்தியாவில் தேசியக் கட்சிகள். கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகளாவிய அமைப்பு. அவர்கள் சர்வதேசியத்தைத்தான் அதிகமாக நம்புகிறார்கள். எனவே, காங்கிரஸ், பா.ஜ.க என இந்த இரண்டு கட்சிகளைப் பற்றித்தான் நான் பேசப்போகிறேன்.

காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டதே, நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில்தான். 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து, 'நாடு எப்படியிருக்கிறது' என்பதை அறிந்துகொள்ள 15,000 பேர்களைக்கொண்ட உளவுப்படையை அமைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த உளவுப்படையினர் தந்த அறிக்கை, 'நாடு கொந்தளித்திருக்கிறது. பிரிட்டிஷாருக்கு எதிராக இவர்கள் வெடித்துக் கிளம்பினால், ஒரு வெள்ளையன்கூட ஊர் திரும்ப முடியாது' என்பதாக இருந்தது. எனவே, இந்தக் கொதிப்புக்கு வடிகால் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயர்களே தொடங்கிய கட்சிதான் 'இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி'. அதனால்தான் அக்கட்சியின் மாநாடுகள்கூட பிரிட்டிஷ் மகாராஜாவுக்கு வணக்கம் - வாழ்த்து தெரிவித்துவிட்டுத்தான் தொடங்கும்.

இல.கணேசன்
இல.கணேசன்

பாலகங்காதர திலகர், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பேற்ற பிறகுதான், காங்கிரஸ் கட்சியின் தன்மை மாறியது. 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்று முழங்கிய திலகரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில்தான் தமிழகத்தைச் சேர்ந்த பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்ற புரட்சிவாதிகள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் திலகரின் மரணத்துக்குப் பிறகு, மகாத்மா காந்தி தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சி வந்தது. அவர் ஒரு புதுவிதமான சித்தாந்தத்தைச் சொன்னார். தேசத்துக்கான சுதந்திரத்தையும் பெற்றோம்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, 'என்ன நோக்கத்துக்காக காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினோமோ, அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. எனவே, இனி காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்' என்றார் மகாத்மா காந்தி. ஆனால், யாரும் கேட்கவில்லை என்றபோது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியைவிட்டு வெளியேறினார் காந்தி. அதன் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தபோது, நாடு எந்தத் திசையில் செல்வது என்பதில் ஒரு குழப்பநிலை ஏற்பட்டது.

அப்போது, 'ஜனநாயகம், சோஷலிஸம்' என இரண்டும் இணைந்த ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இதில், ஜனநாயகம் என்ற தன்மை நம் நாட்டுக்கு புதிதல்ல என்றாலும் அந்த வார்த்தை என்பது புதிது. எங்கெல்லாம் சோஷலிஸம் வளர்ந்திருக்கிறதோ அங்கெல்லாம், ஜனநாயகம் இருந்ததில்லை. எனவே, இப்படி முரண்பாடான இரண்டையும் இணைத்து நாட்டைக் கொண்டுசென்றார்கள். பின்னாளில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் காலத்தில், அதே ஜவஹர்லால் நேரு புகைப்படத்தின் முன்பாகவே அவர் எடுத்திருந்த கொள்கைக்கு நேர்மாறான கொள்கையை அறிவித்து அதைப் பின்பற்றியும் வந்தார்கள்.

'சுதந்திரப் போராட்டத்துக்காகப் பாடுபட்ட கட்சி' என்ற ஒரு மதிப்பும் மரியாதையும் காங்கிரஸுக்கு இருந்தது. ஆனால், இந்திராகாந்தி அம்மையார் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார்; பின்னர் காங்கிரஸிலிருந்து வெளியேறி, 'இந்திரா காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். ஆக, பிரிட்டிஷாரால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கும் இந்திரா காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை. நிஜ லிங்கப்பா தலைமையில் இருந்தது ஸ்தாபன காங்கிரஸ். அவசர நிலை பிரகடனத்துக்குப் பிறகு, 'இந்த காங்கிரஸை எல்லாம் கலையுங்கள்' என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதையடுத்து, ஜனசங்கம், சோஷலிஸ்ட், காங்கிரஸும் கலைந்தது.

ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு

அதாவது பிரிட்டிஷாரால் ஆரம்பிக்கப்பட்ட, சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட, காந்தி - காமராஜ் இருந்த காங்கிரஸ் கட்சியும் கலைக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து அந்த காங்கிரஸ் கட்சியை அதன்பிறகு யாரும் புதுப்பிக்கவேயில்லை. அது ஜனதாவோடு ஐக்கியமானதுதான். ஆனால், நாங்கள் 'ஜனசங்கம்' என்று புதுப்பித்துக் கொண்டோம். காரணம், 'நீங்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸிலும் உறுப்பினராக இருக்கிறீர்கள். பாரதிய ஜனதாவிலும் உறுப்பினராக இருக்கிறீர்களே' என்று குற்றம் சாட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ். என்பது அரசியல் சார்பற்ற ஒரு தேசிய இயக்கம். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று வாதிட்டுப் பார்த்தோம். ஆனால், திட்டமிட்டு பிரச்னையைக் கிளப்பிவிட்ட காரணத்தால், 'நாங்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸிலிருந்து விலக முடியாது; வேண்டுமானால், ஜனதாவிலிருந்து விலகிக்கொள்கிறோம்' என்று 40 வருடங்களுக்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் வெளிவந்து 'பாரதிய ஜனதா கட்சி'யைத் தொடங்கிய நாள் 6 ஏப்ரல் 1980.

இது எந்தக் கட்சிக்கும் தத்துவத்துக்கும் எதிராகத் தொடங்கப்பட்ட கட்சி அல்ல. பா.ஜ.க-வின் தத்துவம் என்பது இந்தத் தேசத்தின் தத்துவம். இந்த நாடு எந்த திசையில் போக வேண்டும் என்று யோசித்து, பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ந்தார். அந்நிய நாடுகளின் சித்தாந்தத்தை வைத்துதான் இந்த நாடு முன்னேற வேண்டும் என்பதல்ல. ஆண்டாண்டுக்காலமாக இந்தத் தேசத்தின் தத்துவங்களாலேயே சீரும் சிறப்புமாக முன்னேற்றத்தைக் கண்ட நாடு இது என்பதை ஆய்ந்தறிந்தார்.

மகாத்மா காந்திக்கும் திலகருக்கும் மட்டுமே இந்த நாடு எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதில், சரியான கற்பனை இருந்தது. இதுகுறித்து புத்தகமே எழுதியிருக்கிறார்கள். தீனதயாள் உபாத்யாயாவும் ஆக்க ரீதியிலான இந்திய தத்துவத்தைப் புத்தகமாக்க எழுதினார். இது எவருக்கும் எதிர்மறையான தத்துவம் அல்ல.

பொதுவாக வலதுசாரி, இடது சாரி என்ற சொல்லாடல்களையே நான் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பா.ஜ.க-வின் தத்துவம் என்பது பொதுவானது. எங்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். ஆனாலும்கூட நாங்கள் வளர்ந்து வருகிறோம்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

2 எம்.பி-க்களாக இருந்தபோதும் குற்றச்சாட்டு சொன்னார்கள், அடுத்து 80 எம்.பி-க்களானோம். மேலும் மேலும் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். 130 எம்.பி-க்களானோம். அதன்பிறகு வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்தோம். இப்போது நரேந்திர மோடி தலைமையில், இரண்டாவது முறையாகத் தொடர்ந்து இமாலய வெற்றியாக 303 எம்.பி-க்களைப் பெற்று ஆட்சியில் இருக்கிறோம். எனவே, இதை எதிர்மறை இயக்கம் என்று குற்றம்சாட்டுவதே தவறானது. இடதுசாரிகள் என்றாலே 'எதிர்மறையானவர்கள்' என்றுதான் பொருள். எனவே, இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை எதிர்க்கின்ற கட்சி அல்ல பா.ஜ.க.

`கொரோனா வைரஸ் அந்த அமைச்சரின் சாயலில் இருக்கிறது!' - நண்பரால் சிக்கிய வெப் டிசைனர்

இவர்களது மதங்கள் வேண்டுமானால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்திருக்கலாமே தவிர, இம்மதங்களைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நம்மவர்கள்தான். வேற்று மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களது உடம்பில் ஓடக்கூடிய ரத்தமும் நமது ரத்தமும் ஒரே வகைதான். ஏதோ ஒருகாலகட்டத்தில், இவர்களது முன்னோர்களும் நமது முன்னோர்களாக இருந்தவர்களே. எனவே, அனைவரையும் சகோதரர்களாக ஏற்று ஆக்கரீதியாக முன்னேற்றப் பாதையில் பயணிக்கிற பா.ஜ.க குறித்து சரிவரப் புரிந்துகொள்ளாமையால் சிலர் தவறான கருத்துகளைக் கூறிவிடுகிறார்கள்.

அமித்ஷா - மோடி
அமித்ஷா - மோடி

அண்மையில் உலகம் முழுவதையுமே பாதித்துள்ள கொரோனா தாக்குதலிலும்கூட 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டின் பிரதமர் மோடி, இப்பிரச்னையை திறம்பட சமாளித்துவருகிறார். மக்கள் அவரைப் பாராட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில், பா.ஜ.க இன்னும் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!'' என்றார் தெளிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு